Skip to main content

நகுலனும், அப்பாவும், நானும்....


அழகியசிங்கர்





நகுலன் சென்னை வரும்போதெல்லாம் என் வீட்டிற்கு வராமல் இருக்க மாட்டார்.  அவர் சென்னையில் தங்கும் இடம் ஆன அவர் சகோதரர் வீடு என் வீட்டிலிருந்து அருகில் இருந்தது.  சகோதரரை அழைத்துக்கொண்டு நடந்தே வந்துவிடுவார்.  ஒருமுறை அவர் வந்திருந்தபோது நான் வீட்டில் இல்லை.  
நகுலன் என் அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.  கிட்டத்தட்ட அரை மணி நேரம் மேலேயிருக்கும். நான் வீட்டிற்கு வந்தபோது நகுலனும், அப்பாவும் பேசிக்கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.என்ன பேசிக்கொண்டிருப்பார்கள்? எதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள்?  என்பதுதான் என் எண்ணமாக இருந்தது.
நகுலன் எப்போதும் புத்தகங்களைப் பற்றியும், எழுத்தாளர்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருப்பவர்.  என் அப்பாவிற்கு அதெல்லாம் தெரியாது.
மாடியில் உள்ள அறைக்கு நகுலனை அழைத்துக்கொண்டு போனேன்.  
"அப்பாவிடம் என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்?"
நகுலன் சிரித்தபடியே,"உங்கள் அப்பா சுவாரசியமான மனிதர். அவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர்.. அந்த மருந்துகளைப் பற்றி சொன்னார்?"
"போச்சுடா..யார் வந்தாலும் இப்படித்தான் ஆரம்பித்துவிடுவார். போனில் அசோகமித்திரனிடம் கூட ஹோமியோபதி மருந்துகளைப் பற்றி சொல்வார்."
"ஒரு கான்சர் பேஷண்ட் இவர்  மருந்தால் குணமாகிட்டாராம்.."
"என்னால் நம்ப முடியவில்லை... ஹோமிபோபதி மருந்தால் கான்சரை குணப்படுத்த முடியுமா?"
"எனக்குத் தெரியாது..உங்கள் அப்பாதான் சொன்னார்.."
"வேற எதுவும் சொல்லவில்லையா?"
"உங்கள் அப்பா அரசியலைப் பற்றி பேசினார்...எனக்கு தமிழ்நாட்டு அரசியல் புரியலை...அவர் கருணாநிதி மாதிரி பேசிக் காட்டினார்.."
"போச்சுடா இப்படித்தான் அவர் எல்லார் கிட்டேயும் பேசிக் காட்டுவார்.."
"அவர் ஒரு ஜாலியான மனிதர்.."
"வேற எதுவும் பேசலையா?"
"பேசினார்...உங்களைப் பற்றி.."
"என்னைப் பற்றியா?"
"ஆமாம்.  நீங்கள் புத்தகங்களை வாங்கிக் குவிக்கிறீங்களாம்..ஆனால் எதுவும் படிப்பதில்லையாம்.  இப்போது உங்கக் கிட்ட இருக்கிற புத்தகங்களைப் படிச்சாலே இந்த ஜன்மத்திலே படிக்க முடியாதாம்..என்னை உங்களுக்கு அட்வைஸ் பண்ணச் சொன்னார்.. பையனை இனிமேல் புத்தகம் வாங்காமல் இருக்கச் சொல்லுங்கள்..என்று," நகுலன் இதைச் சொல்லிவிட்டுச் சிரித்தார்.
எங்கள் பேச்சு அப்பாவை விட்டுப் போயிற்று.. "என்ன புதுசா எழுதினீங்க?" என்று கேட்டார் நகுலன்.
நான் அப்போது எழுதிக்கொண்டிருந்த சில கவிதைகளைக் காட்டினேன்.
நகுலன் ஒரு விஷயம் சொன்னார்.." நீங்க இவ்வளவு வருஷம் எல்லோருடைய படைப்புகளையும் பிரசுரம் செய்கிறீர்கள்...யாராவது உங்கள் எழுத்தைப் பற்றி எதாவது சொன்னார்களா?"
"இல்லை.."
"ஏன்?"
"ஒரு சமயம் என் படைப்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்திருக்க வேண்டும்.."
"அதெல்லாம் இல்லை.  நீங்க மோசமாக எழுதுவதில்லை.  இது உங்களைச் சுற்றி உள்ளவர்களின் மனசைக் காட்டுகிறது.  நீங்க அதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்.."
நான் ஒரு வினாடி யோசிக்க ஆரம்பித்தேன். 
நகுலன் என் நோட்டில் உள்ள கவிதைகளை எல்லாம் படித்துவிட்டு, சில மாற்றங்களைச் செய்யும்படி குறிப்பிட்டார்..
என் வீட்டைவிட்டு நகுலன் கிளம்பும்போது, ஒன்று சொன்னார். "உங்களைப் பற்றியும், வைதீஸ்வரனைப் பற்றியும் கட்டுரைகள் எழுதுகிறேன்."
நகுலன் எசான்னபடி என் கவிதைகள் குறித்தும், வைதீஸ்வரன் கவிதைகள் குறித்தும் கட்டுரைகள் எழுதி அனுப்பினார்.
அன்றைய அவருடைய பேச்சை என்னால் மறக்கவே முடியாது.



 

Comments