Skip to main content

வாசகசாலை முயற்சிக்கு வாழ்த்துகள்



அழகியசிங்கர்






வாசகசாலையின் கதையாடல் என்ற முதலாம் ஆண்டு விழா கூட்டம் நேற்று (01.07.2017) கன்னிமரா நுல்நிலையத்தில் மூன்றாவது தளத்தில் நடந்தது.  கூட்டத்தில் பேச நான், பரிசல் செந்தில்குமார், கணையாழியின் ஜீவ கரிகாலன் மூவரும் வந்திருந்தோம்.  
கூட்டத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஆச்சரியம்.  கிட்டத்தட்ட 50 பேர்கள் வந்திருந்தார்கள்.  பாதி பேர்கள் பெண்கள்.  வழக்கம்போல் பத்திரிகைகளில் வந்திருந்த கதைகளைப் பற்றி விமர்சனம் செய்தார்கள்.  அங்கு வந்த பெரும்பாலோர் வாசகர்கள்.  அவர்கள் பார்வையில் கதைகள் எப்படி பார்க்கப்படுகின்றன என்பதுதான் இக் கூட்டங்களின் முக்கிய நோக்கம்.
இன்றைய சூழ்நிலையில் தமிழில் கதைகளை வெளியிடுகின்ற பத்திரிகைகளை விரல்விட்டு எண்ணி விடலாம்.  பெரும் பத்திரிகைகள் கதைகளிலிருந்து விலகி துணுக்குகளாகப் போய் விட்டன.  நடுத்தரப் பத்திரிகைகளும், சிறு பத்திரிகைகளும்தான் சிறுகதைகளுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.
ஒரு வாசகன் பத்திரிகையில் வருகிற கதையைப் படிக்கும்போதுதான் கதைக்கு உயிர் கிடைக்கிறது.  இன்றைய அவசர சூழலில் பத்திரிகையில் கதையைப் படிக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் ஏற்படுவதுண்டு.  
இந்தத் தருணத்தில்தான் வாசகசாலையின் பங்கை முக்கியமாக நான் கருதுகிறேன்.  ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடத்தும்போது இன்னும் பலரை கதைகளை வாசிக்கத் தூண்டுதலாக அமையும்.
1988ஆம் ஆண்டு நான் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடத்தியபோது, எழுத்தாளர்களையும் புத்தகங்களையும்தான் அறிமுகப் படுத்தினேன்.  ஆனால் இது மாதிரி கதையாடல் என்ற ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமென்று தோன்றியதில்லை.
விருட்சம் கூட்டத்திற்கும் வாசகசாலையின் கூட்டத்திற்கும் வித்தியாசம் அதிகமுண்டு.

- வாசகசாலை கூட்டத்திற்கு வருபவர்களில் பாதிப் பேர்கள்தான் விருட்சம் கூட்டத்திற்கு வருவார்கள்.
- விருட்சம் சார்பில் முதல் கூட்டம் ஆரம்பித்தபோது எனக்கு வயது 35க்குள் இருக்கும்.  ஆனால் அப்போதே என் கூட்டதிற்கு வரும்பவர்களின் வயது 45லிருந்து 50வயதிற்கு மேல் இருக்கும்.
- விருட்சம் கூட்டத்திற்கு பெண்களே வர மாட்டார்கள்.  இத்தனைக்கும் எளிதாக பஸ் கிடைக்கும் திருவல்லிக்கேணி தெற்கு மாடத்தெருவில் உள்ள லேடீஸ் ஹாஸ்டல் மாடியில்தான் கூட்டம் நடக்கும்.
- ஆனால் மிகப் பெரிய எழுத்தாளுமைகள் விருட்சம் கூட்டத்திற்கு வந்திருந்து கூட்டத்தைக் கௌரவப்படுத்தியிருக்கிறார்கள்.
- விருட்சம் கூட்டத்திற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு.  நூறு ரூபாய்கூட செலவாகாது.  பேசுபவர்க்கு வழிச்செலவுக்குக் கூட பணம் தரப்பட மாட்டாது.  அதனால் கார்டில் கூட்டத்திற்கு அழைப்பு, மாடி அறை வாடகை, பின் குடிக்க தண்ணீர் வைக்க செலவு.  அவ்வளவுதான்.  ஆனால் கூட்டங்கள் நடக்க நடக்க செலவுகளும் கூடிக்கொண்டு போய்விட்டன.  இப்போது ஒரு கூட்டம் நடத்தினால் ரூ.1000 வரை செலவாகும்.  முன்பு காசெட்டில் கூட்டத்தைப் பதிவு செய்வேன்.  இப்போது சோனி வாய்ஸ் ரிக்கார்டில் எங்கே உட்கார்ந்தாலும் பதிவு செய்ய முடிகிறது.  அப்போது நடந்த பெரும்பாலான கூட்டங்களில் மைக் வசதி கிடையாது.  பேச வருபவர்கள் சத்தமாகப் பேச வேண்டும்.  இப்படியே நான் 200 கூட்டங்களுக்கு மேல் நடத்திவிட்டேன் இன்றுவரை. 
என் கூட்டத்திற்கு அதிகமான எண்ணிக்கையில் கலந்து கொள்ள வர, பலரை பேச அழைப்பேன்.  கூட்டத்திற்கு வரும் பாதிபேர்கள் பேசுபவர்களாக இருப்பார்கள். 
இப்போது நடக்கும் வாசகசாலை இலக்கியக்கூட்டங்களில் இளைஞர்களின் பங்கு அதிகமாக உள்ளது.  சென்னையில் பல இடங்களில் முக்கியமாக நூல்நிலையங்களில் கூட்டம் நடத்துகிறார்கள்.  கட்டுக்கோப்பாக பலர் இதில் கலந்து கொள்கிறார்கள்.  ஒரு மாதத்தில் பாதி நாட்கள் கூட்டங்கள் நடத்துகிறார்கள்.  பரிசல் செந்தில் குறிப்பிட்ட மாதிரி தினமும் கூட அவர்களால் கூட்டம் நடத்த முடியும்.
விருட்சம் கூட்டத்தைக் கூட அவர்களுடன் சேர்ந்து நடத்தலாமென்று நினைத்தேன்.  பின் என் முடிவை மாற்றிக்கொண்டு விட்டேன்.  ஏனென்றால் விருட்சம் என்ற பெயரைச் சேர்த்தால் அவர்கள் கூட்டத்திற்கு வரும் எண்ணிக்கைக் குறைந்து போக வாய்ப்புண்டு. மேலும் அவர்களும் விருட்டசத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  
இக் கூட்டங்களை சிறப்பாக நடத்திக் கொண்டு வரும் கார்த்திகேயனுக்கும், அருணுக்கும்  என் வாழ்த்துகளை மனமுவந்து தெரிவித்துக்கொள்கிறேன்.   நேற்று இப்படித்தான் நான் பேசினேன்.
கதையாடல் மாதிரி கவிதையாடல் என்ற ஒன்று கொண்டு வரலாமென்று தோன்றியது.  ஆனால் கவிதைக்காக நடத்தும் கூட்டம் மோசமாக இருக்கும்.  தேர்வு செய்து குறிப்பிட்ட சிலரை மட்டும் கவிதைகள் வாசிக்க அழைக்க வேண்டும்.  கலந்து கொள்பவர்கள் எல்லோரும் கவிதை வாசிக்கக் கூடாது.  பார்வையாளராகத்தான் கலந்து கொள்ள வேண்டும்.. ஒரு குழு கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அந்தக் கவிதைகள் எழுதியவரை மட்டும் வாசிக்கச் சொல்லலாம். 

Comments