Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 55


அழகியசிங்கர்  


 தவிர்த்த கவிதை



பா வெங்கடேசன்




மன்னிக்கவும் நண்பரே நான்
தவறுதலாக எதையும்
பேசிவிடவில்லை.
அந்த அறையின் உத்திரங்களுடன்
உரையாட முடியுமானால்
உண்மையை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.
நீங்கள் கவிதை எழுதுபவரா,
எனக்குத் தெரியாது.
அங்கே உலவ விட்டிருந்த கவிதை
உங்களுடையதுதானா,
அதுவும் எனக்குத் தெரியாது.
அங்கே ஒரு கவிதை இருந்தது.
அதைச் சுற்றிச் சிலர் அமர்ந்திருந்தார்கள்.
நானும் அவர்களுடனிருந்தேன்.
எல்லோருக்கும் அது
செல்லமாய் இருந்தது.
எல்லோரும் அதைத் தன்னிடமே
வருமாறு  அழைத்துக்கொண்டிருந்தார்கள்.
யாரிடம் செல்வதெனத் தெரியாமல்
அது விழித்துக்கொண்டிருந்தபோது
குழப்பத்தைக் குறைக்குமென்று
நம்பி மட்டுமே நான் அதனிடம்
என்னை வேண்டுமானால்
கழித்துக்கொள்ளேனென்று சொல்லிவைத்தேன்.
ஆனால் நண்பரே
நிச்சயமாக எனக்குத் தெரியும்
அங்கே ஒரு கவிதை
இருந்ததென்று.
மேலும் நண்பரே
அதை நான் தவிர்த்த கணத்தில்
அங்கே இருந்திராத உங்களை
நிச்சயம் அது
நானாக உணர்ந்திருக்கும்.

(நரனுக்கு)


நன்றி : நீளா - கவிதைகள் - பா வெங்கடேசன் - முதல் பதிப்பு : டிசம்பர் 2014 - வெளியீடு : காலச்சுவடு பப்பளிகேஷன்ஸ் (பி) லிட் - 669 கே பி சாலை, நாகர்கோவில் - 629001 - விலை : 70 - 04652 - 278525

Comments