Skip to main content

Posts

Showing posts from 2017

இரண்டு மூன்று நாட்கள்......

அழகியசிங்கர் 




இரண்டு மூன்று நாட்கள் சென்னையை விட்டு மயிலாடுதுறைக்குச் சென்று விட்டேன். அதனால் முகநூல் பக்கம் வரவில்லை.  வரும் சனிக்கிழமை அதாவது 19ஆம் தேதி ஏ கே செட்டியார் படைப்புகளைப் பற்றி கடற்கரை அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.  தவறாமல் கலந்துகொண்டு கூட்டத்தை மேன்மை படுத்துங்கள்.  6 மணிக்கு ஆரம்பித்து 7.30 மணிக்குள் கூட்டம் முடிந்துவிடும்.  தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமை இதுமாதிரியான கூட்டத்தை நடத்த உத்தேசம்.  உங்கள் அறிவுரையை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இக் கூட்டத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 28வது கூட்டம்

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 28வது கூட்டம்

அழகியசிங்கர்                                                                  


விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 28வது கூட்டம் இந்த மாதம் மூன்றாவது சனிக்கிழமை வழக்கம்போல் நடைபெற உள்ளது.  ஒவ்வொரு முறையும் இக் கூட்டத்திற்கு வருபவர்களை நான் வரவேற்கிறேன்.  இந்த முறை ஏ கே செட்டியார் பற்றிய கூட்டம்.  சந்தியா பதிப்பகம் மூலம் வெளிவந்த ஏ கே செட்டியார் புத்தகத்தைத் தொகுத்து அளித்தவர், கடற்கரை மந்தவிலாச அங்கதம்.  இத் தொகுப்பு 2000 பக்கங்களைக் கொண்டது.  அவர் தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள உள்ளார்.  இக் கூட்டம் பற்றிய தகவலை எல்லோரும் பகிர்ந்து அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். காந்தியைப் பற்றி ஏ கே செட்டியார் எடுத்த ஆவணப்படமும் தி நகரில் உள்ள தக்கர் பாபா கல்வி நிலையத்தில் விற்பனைக்கு உள்ளது.  விலை ரூ.100 தான்.  ஒவ்வொருவரும் வாங்கிப் பாதுகாக்க வேண்டிய ஆவணப்படம்.  இதோ கூட்டத்திற்கு ஆன அழைப்பிதழை உங்களுக்கு அளிக்கிறேன்.  அழைப்பிதழைத் தயாரித்து அளித்தவர் என் நண்பர் கிருபானந்தன்.  அவருக்கு நன்றி பல. 

புத்தகங்களைப் படிக்காமல பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

அழகியசிங்கர்

தமிழ் பேசுபவர்களை எடுத்துக்கொண்டால் பாதிக்கு மேல் படிக்காதவர்கள்தான் இருப்பார்கள்.  பெரும்பாலும் பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள்.  தமிழ் எழுதத் தெரியாது, படிக்கத் தெரியாது என்று பலர் இருப்பார்கள்.  இப்படிப் படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்களில் பலர் தமிழ்ப் புத்தகங்களைப் படிக்கவே மாட்டார்கள்.  என் குடும்பத்தில் நான் ஒருவன்தான் தமிழ் புத்தகம் படிக்கிறவன்.  என் மனைவி எப்பவாவது லக்ஷ்மி புத்தகங்களைப் படிப்பார்.  யாரும் தமிழ்ப் பத்திரிகைகளை வாங்கிப் படிக்க மாட்டார்கள். நான் அந்தக் காலத்திலிருந்து தமிழ் புத்தகங்களைப் படிக்கிறவன். ஆங்கிலம் படித்தாலும், தமிழ் புத்தகம் படிக்கிற அளவிற்கு ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கிற ஆர்வம் இல்லாதவன்.  ஆனால் புத்தகங்களை வாங்கி வாங்கி வைத்துக்கொள்வேன். ஒருநாள் நான் வைத்திருக்கும் புத்தகங்களைப் பார்த்து பயந்து விட்டேன். நமக்கோ வயது கூடிக்கொண்டே போகிறது, எப்போது இந்தப் புத்தகங்களைப் படிக்கப் போகிறோம் என்ற பயம் என்னை பற்றிக்கொண்டது.  வாரம் ஒருநாள் புத்தகங்களைப் பார்த்தபடி கற்பூரம் காட்டி நமஸ்காரம் செய்யலாம், படிக்க வேண்டாம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன…

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 74

அழகியசிங்கர்  


 ஒழிந்த நேரங்கள் 

காளி-தாஸ்
நான் ஒழிந்த நேரத்தில் பிறந்தேன்
நான் ஒழிந்த நேரத்தில் வளர்ந்தேன்
நான்  ஒழிந்த நேரத்தில் படித்தேன்
நான்  ஒழிந்த நேரத்தில் எழுதினேன்
நான் ஒழிந்த நேரத்தில் விளையாடினேன்
நான்  ஒழிந்த நேரத்தில் காதலித்தேன்
நான் ஒழிந்த நேரத்தில் சம்பாதித்தேன்
நான் ஒழிந்த நேரத்தில் கல்யாணம் செய்தேன்
நான்  ஒழிந்த நேரத்தில் புணர்ந்தேன்
நான்  ஒழிந்த நேரத்தில் பிள்ளை பெற்றேன்
நான்  ஒழிந்த நேரத்தில் குடித்தேன்
நான் ஒழிந்த நேரத்தில் தூங்கினேன்
நான்  ஒழிந்த நேரத்தில் சாமி கும்பிட்டேன்
நண்பர்களே வாருங்கள் ஒழிந்த நேரம் பார்த்து ஒழிந்த நேரம் ஒன்றில் நான் செத்துப் போகும் முன்.......

நானும் நானும் - காளி-தாஸ் - கவிதைகள் - மொத்தப் பக்கங்கள் : 48 - விலை : ரூ.50 - முதல் பதிப்பு : மையம் வெளியீடு - இரண்டாம் பதிப்பு : விருட்சம், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை - 33 - தொடர்புக்கு : 9444113205
பின் குறிப்பு :
காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகளை எழுதியவர் ஸ்டெல்லா புரூஸ்.  அவர் இயற்பெயர் ராம் மோகன்.  கவிதைகள் மட்டும் அல்ல, சிறுகதைகள், நாவல்கள் என்று எழுதிய பிரபல எழுத்தாளர்.  அவருடைய பிற…

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 73

அழகியசிங்கர்  



கொள்கை 

சுந்தர ராமசாமி                                                                              


மேற்கே
ரொமான்டிசிஸம்
நாச்சுரலிஸம்
ரியலிஸம்
அப்பால்
இம்பிரஷனிஸம்
என் மனைவிக்குத்
தக்காளி ரஸம்.

அப்பால்
ஸிம்பலிஸம்
கூபிஸம்
ஸர்ரியலிஸம்
மீண்டும்
வெறும்
ரியலிஸம்

அப்பால்
அதற்கும்
அப்பால்?
சொல்லும்
எட்மண்ட் வில்சன்
நீர் சொல்லும் கனிவாய்.
சொல்லும்
மிஸ்டர் பிரிச்செட்
நீர் சொல்லும்
தயைகூர்ந்து

ஸôத்ரேக்கு
எக்ஸிஸ் -
டென்ஷலிஸம்
காமுவுக்கு
இன்னொன்று
பின்னால்
வேறொன்று.
காமுவின் விதவைக்கு
மற்றொன்று.
பிறிதொன்று
அவள் அருமைப்
பாட்டிக்கு.

கரடிக்கு கம்யூனிஸம்
கதர்க் குல்லா சோஷலிஸம்
டாலர் ஹ÷மனிஸம்
பீக்கிங்கு
என்ன?
சொல்லும்
ஏ.ஐ.ஆரே
சொல்லும்
மிக விரைவாய்.

நாம எல்லாம்,
டமில் எழுத்தாளர்
நமக்கோ
பிளேஜியரிஸம்

நன்றி : நடுநிசி நாய்கள் - கவிதைகள் - சுந்தர ராமசாமி - வெளியீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பி லிமிடெட் -669 கே பி சாலை, நாகர்கோவில் 629001 - பக்கங்கள் : 72 - விலை : ரூ.75







பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....10


பாவண்ணன் பேட்டி அளிக்கிறார்


இந்தத் தலைப்பில் இதுவரை பாவண்ணனையும் சேர்த்து பத்து  பேர்களை பேட்டி எடுத்துள்ளேன்.  எல்லாம் எளிமையான கேள்விகள் எளிமையான பதில்கள்.  சமீபத்தில் நான் பங்களூர் சென்றேன்.  அங்கு பாவண்ணனை அவர் அலுவலகத்தில் சந்தித்துப் பேட்டி எடுத்தேன். அவர் அலுவலகத்தை ஒட்டி வெளிபுறத்தில் இந்தப் பேட்டி பதிவாகி உள்ளது.  உங்களைப் போன்று நானும் ஆவலுடன் இந்தப் பேட்டியைப் பார்க்க விரும்புகிறேன்.

ஸ்டால் எண் 12..

ஸ்டால் எண் 12...

அழகியசிங்கர்
இரண்டு


சென்னை புத்தக திருவிழாவிற்கு நான் கொண்டு வந்த புத்தகங்கள் இரண்டு இரும்பு அலமாரிகளில் அடங்கி விட்டன.   மீதமுள்ள ஐந்து அலமாரிகளுக்கு வெளி இடத்திலிருந்து புத்தகங்கள் தேடி வரவேண்டும். எல்லாம் கிடைத்துவிட்டன.  நாங்கள் மூவரும் மூன்று நாற்காலிகளில் உட்கார்ந்து விட்டோம்.  முதலில் காற்றோட்டம் இல்லாத இடத்தில் உட்கார்ந்து கொண்டோம்.  பின் இடத்தை மாற்றிக்கொண்டோம்.  நாங்கள் இருந்த பகுதிக்கு அடுத்து போகிற வழி.  வெளியே போய் விடலாம்.  அந்தத் திறந்த வெளியிலிருந்து காற்று பிரமாதமாக வந்து கொண்டிருந்தது.   நான் அதை பீச் என்று அழைத்தேன். கிருபா செல்போன் போனதுபோல் இன்னும் பலருடைய செல்போன் போய்விட்டன.  அலுவலகத்திலிருந்து செல்போன்களை ஜாக்கிரதையாகப் பாதுகாக்கும்படி எச்சரிக்கை வந்து கொண்டிருந்தன. நாங்கள் மூவரும் ஒரே வயதுக்காரர்கள்.  வேற வேற வங்கியிலிருந்து ஒவ்வொருவரும் ரிட்டையர்டு ஆனவர்கள்.  நான் கொஞ்சம் வயதில் பெரியவன்.  என்றாலும் மதியம் ஒரு மணிக்கு நல்ல வெயிலில் அங்கு வந்து அமரும்போது ஒரு மாதிரியாகத்தான் எனக்கு இருந்தது.  வந்த வேகத்தில் பல ஸ்டால்களில் உள்ளவர்களைப் பார்க்கும்…

ஸ்டால் எண் 12...

அழகியசிங்கர்


  ஒன்று
நடந்து முடிந்த புத்தகக் காட்சியைப் பற்றி நடந்து முடிந்த அடுத்த நாள் சொல்வது சரி என்று தோன்றுகிறது.  சென்னை புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்வது பற்றி விளையாட்டாகத்தான் ஆரம்பித்தது.  போஸ்டல் காலனி வீட்டில் புத்தகத்தை அடுக்கிக் கொண்டிருந்தபோது, கீழே உள்ள குடியிருப்பவர், ஒரு கவரை கொண்டு வந்தார்.  அந்தக் கவரை திறந்து பார்த்தால் சென்னை புத்தகத் திருவிழாவின் விண்ணப்பம்.  ஜøலை 21ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை. அந்தச் சமயத்தில் நானும் என் நண்பர் கிருபானந்தனும் எம்ஜி ஆர் ஜானகி கல்லூரியில் நடந்த 3 நாட்கள் புத்தகக் காட்சியில் கலந்து கொண்டிருந்தோம். அது மோசம்.  இந்தக காலத்து கல்லூரி மாணவிகள் தமிழ் புத்தகங்களை வாங்கிப் படிக்க விரும்புவதில்லை.  வேடிக்கைப் பார்க்க வருகிறார்கள்.  செல்போனை திருகுகிறார்கள்.  கூட்டமாக நின்று காஸ்மாடிக் கடையில் நின்று காஸ்மாடிக் வாங்குகிறார்கள. புத்தகக் கடையில் நிற்கக் கூட இல்லை.  என்ன சொல்கிறார்கள் என்றால் வீட்டில் புத்தகம் வாங்க பணம் கொடுப்பதில்லை என்கிறார்கள்.  உண்மையா என்பது தெரியவில்லை.  கிருபானந்தனைப் பார்க்கும்போது, இதுமாதிரி ஒரு விண்ணப்பம் வந்த…

பத்மா காபி பேக்....

அழகியசிங்கர்


நான் ஒரு பையை எப்போதும் வைத்திருப்பேன்.  அந்தப் பையின் பெயர் பத்மா காபி பை.  துணிப்பைதான்.  ஆனால் உறுதியான பை.  இந்தப் பை மூலம் என் புத்தகங்களை எல்லா இடங்களிலும் சுமந்து வருவேன்.  புதிய புத்தகங்கள் ஆனாலும் பழைய புத்தகங்கள் ஆனாலும் சுமப்பதற்கு உறுதியான பை.  அகலமான பெரிய பை.  தினத்தந்தி பேபர்பர்களைக் கொண்டு வருவார்களே அதுமாதிரியான பை.  நான் மயிலாடுதுறை செல்லும்போது இந்த பத்மா காபி பையை வாங்கிக்கொண்டு வந்து விடுவேன்.  என்னிடம் இப்படி அதிகமாக  7 அல்லது 8 பைகள் சேர்நதிருக்கும்.  இந்தப் பை ஒவ்வொன்றும் ரூ.60 விலை.  எனக்கு யாராவது இந்தப் பையை மட்டும் தானமாகக் கேட்டால் கொடுக்க மனசு வராது.  ஆனால் என் வீட்டில் பணிபுரிபவருக்கு ஒரு பையைக் கொடுத்து விட்டேன்.  திரும்பவும் மயிலாடுதுறைக்குச் சென்று இன்னும் இரண்டு முன்று பைகள் வாங்கி வந்து விட்டேன்.  பத்மா காபி என்று விளம்பரம் படுத்தியிருக்கும் இந்தப் பையில் பத்மா காபி எப்படி இருக்குமென்று தெரியாது.  வாழ்க பத்மா காபி. பையை விளம்பரப் படுத்தி வழங்கிய வள்ளல் அது. இந்தப் பை பலவிதங்களில் சொளகரியமானது.  எந்தக் கணமான பொருள்களையும் இந்தப் பை சுமக்க வ…

டிவி பார்க்காமல் ஓடுவது எப்படி?.......

அழகியசிங்கர்



நான் டிவி பார்ப்பதற்கு எதிரி இல்லை.  ஆனால் ஒருவர் டிவியைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதை நான் வெறுக்கிறேன்.  டிவி நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி விட்டது.  அது பெரிதும் நம்முடைய வாழ்க்கை முறையைக் கெடுக்கிறது.   நான் டிவியில் காட்டப்படுகிற சீரியல்களைப் பார்ப்பதில்லை.  செய்திகளைக் கூட கொஞ்சம் நிமிடங்கள்தான் பார்ப்பேன்.  டிவியில் காட்டப்படும் தமிழ்ச் சினிமாக்களை முழுவதும் பார்ப்பதைத் தவிர்ப்பேன்.  எதாவது ஒரு காட்சி பார்ப்பேன்.  விளையாட்டும் பார்ப்பேன்.   இன்றைய நவீன கடவுள் டிவிதான் என்று சிலர் நினைக்கிறார்கள்.   ஒருவர் டிவி பார்க்காமல் இருக்க முடியுமா?  என் வீட்டில் என்னுடன் வசித்து வருபவர் ஒருவர் சதா சர்வ காலமும் டிவியைப் பார்த்தபடி இருக்கிறார்.  காலையில் எழுந்தவுடன் டிவியை ஆன் செய்து திரும்பவும் அணைப்பது என்பது இரவு 11 மணி ஆகிவிடுகிறது.  இது எனக்கு அச்சத்தைத் தருகிறது.   நான் என்னைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  சரி டிவி பார்க்காமல் இருந்தால் பொழுதை எப்படிக் கழிப்பது?  இந்தக் கேள்வியை எனக்குள் கேட்டுக்கொள்கிறேன்.  புத்தகம் படிக்கலாம் என்று நீங்கள் சொல்லலாம்.…

விருட்சம் நடத்திய மூன்றாவது கூட்டம்.....

அழகியசிங்கர் 



இந்தச் சென்னைப் புத்தகக் காட்சியில் மூன்றாவது கூட்டமாக பெருந்தேவியின் üபெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்ý என்ற கூட்டத்தை மாலை 6 மணிக்கு மேல் நடத்தினோம்.  திரளாக பெருந்தேவியின் நண்பர்கள் இந் நிகழ்சியில் கலந்து கொண்டார்கள்.   அம்ஷன்குமார் முதல் பிரதியைக் கொடுக்க கவிஞர் பரமேஸ்வரி பெற்றுக்கொண்டார்.  மற்ற இரண்டு தொகுப்புகள் போல் இல்லாமல் (அழுக்கு சாக்ஸ், வாயாடிக் கவிதைகள்) இது முற்றிலும் வித்தியாசமான கவிதைகள் கொண்ட தொகுப்பு.  ஆனால் இந்த மூன்று கவிதைத் தொகுதிகளிலும் ஒரு ஒற்றுமை உண்டு. இக் கூட்டத்தை ஆடியோவிலும் வீடியோவிலும் பதிவு செய்துள்ளேன்.   அம்ஷன் குமார் பேசிய சாரம்சத்தை இங்கே தர இயலுமா என்று பார்க்கிறேன்.   .....பெருந்தேவி கிட்டத்தட்ட 20 வருஷமாகக் கவிதை எழுதி வருகிறார்.  அவர் முதல் கவிதைத் தொகுதி 1992ல் வெளிவந்தது. தீயுறைத் தூக்கம். அப்போதிலிருந்து அவர் கவிதைகள் மீது எல்லோருக்கும் கவனம் விழுந்திருக்கிறது.  ஒரு கவனிக்கப்பட வேண்டிய கவிஞர் என்று.  அந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை என்னவென்றால் அது பலபேர்களுக்குப் புரியவில்லை. ஒரு கவிஞர் முதன்முதலாக தொகுப்பு கொண்டு…

ஏன்.........ஏன்.............ஏன்.......

அழகியசிங்கர்


இன்று புத்தகக் காட்சிக்குச் சென்றவுடன் முதல் வேளையாக 3.30 மணிக்கு ஞானக்கூத்தன் ஞாபகமாக அவருடைய ஒவ்வொரு கவிதையாக எடுத்து வாசித்தோம்.  வந்தவர்கள் ஒவ்வொருவராக கவிதை வாசிக்கச் சொன்னேன்.   யாரும் மறுக்கவில்லை.  வாசித்த அனைவருக்கும் என் நன்றி.  எல்லாவற்றையும் சோனி வாய்ஸ் ரிக்கார்டில் பதிவு செய்தேன்.  மாலன், இந்துமதி என்று பலரும் ஞானக்கூத்தன் கவிதைகளை வாசித்தார்கள்.   இன்னொன்றும் சொல்ல விரும்புகிறேன். நான் முகநூலில் தெரியப்படுத்தி இருந்தேன்.  என் கைவசம் உள்ள ஞானக்கூத்தன் கவிதைகள், கட்டுரைத் தொகுதி வாங்குபவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடியில் தருவதாக. ஸ்டாலில் மிகக் குறைவான எண்ணிக்கையில் ஞானக்கூத்தன் புத்தகங்களை வைத்திருந்தேன்.  ஆனால் ஏன் ஒருவர் கூட முகநூலைப் பார்த்து வரவில்லை. வாங்கவில்லை. சலுகையைப் பயன்படுத்தி ஞானக்கூத்தன் புத்தகங்களை வாங்கிக் கொள்ள யாரும் முன் வரவில்லை. எனக்கு இது ரொம்ப ஆச்சரியமாகப் போய்விட்டது.  ஏன் என்ற என் கேள்விக்கு பதில் தெரியவில்லை.. ஞானக்கூத்தன் கவிதையான பயிற்சியில் குறிப்பிட்டபடி,
பயிற்சி
மனிதன் எங்கும் போக விரும்பவில்லை ஆனால் போய்க்கொண்டுதான் இருக்கிறான் மனிதன் …

இன்று ஞானக்கூத்தன் நினைவு நாள்.......

இன்று ஞானக்கூத்தன் நினைவு நாள்.......
அழகியசிங்கர்



27ஆம்  தேதி போன ஆண்டு (2016) ஞானக்கூத்தன் இறந்து விட்டார்.  ஒருவர் அதிக நாட்கள் மருத்துவமனையில் இருந்தால் அவர் பிழைத்து வருவாரா என்பது சந்தேகம்தான்.  ஞானக்கூத்தன் விஷயத்தில் அப்படி ஆகிவிட்டது.   ஆனால் திருவல்லிக்கேணி போனால் எனக்கு அவருடன் ஞாபகம் இல்லாமல் இருக்காது.  தெற்கு மாட தெருவாகட்டும், பாரதியார் இல்லம் ஆகட்டும், பாரத்தசாரதி கோயில் குளம் ஆகட்டும், வெங்கடாசலம் தெரு முனை ஆகட்டும், அங்கே உள்ள குட்டி குட்டி ஹோட்டல்கள் ஆகட்டும், திருவள்ளூர் சிலை அருகில் உள்ள கடற்கரை ஆகட்டும் எல்லா இடங்களிலும் ஞானக்கூத்தன் இருந்துகொண்டிருக்கிறார் என்னைப் பொருத்தவரை. ஓராண்டுக்குள் ஞானக்கூத்தன் நினைவு மலர் கொண்டு வர நினைத்துக்கொண்டிருந்தேன்.  ஆனால் என்னால் முடியாமல் போய்விட்டது.  பொதுவாக அவருக்கு நினைவுநாளை விட பிறந்தநாளைக் கொண்டாடுவதுதான் பிடிக்கும்.  பாரதியாரின் நினைவுநாளை விட பிறந்தநாளைத்தான் அவர் விரும்பி வரவேற்பார்.  அதேபோல் ஞானக்கூத்தன் பிறந்த நாளன்று (அக்டோபர் 7) நினைவு மலரை கொண்டு வர முயற்சி செய்கிறேன்.   ஆனால் என்னை அறியாமலேயே ஞானக்கூத்தன் ஆசிரிய…

"பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்"

அழகியசிங்கர்




விருட்சம் வெளியீடாக நாலாவது புத்தகமாக பெருந்தேவியின் கவிதைத் தொகுதியான "பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்" என்ற புத்தகம் தயாராகும் என்று சற்றும் நான் நம்பவில்லை. ஆனால் புத்தகம் தயாராகி வந்து விட்டது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் பெருந்தேவியின் அழுக்கு சாக்ஸ் என்ற கவிதைத் தொகுதி வெளிவந்தது. இன்னும் கூட பலர் அந்தப் புத்தகத்தைக் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் கவிதை எழுதும்போது பெருந்தேவி ஆழமாக கவிதையைக் குறித்து சிந்தித்தவண்ணம் இருக்கிறார். அழுத்தமான பார்வையை கவிதை மூலம் கொண்டு வருகிறார். அதனால்தான் அவருடைய ஒவ்வொரு கவிதைத் தொகுதியும் வித்தியாசமாக இருக்கிறது. பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள் என்ற கவிதைத் தலைப்பே படிக்கும் ஒவ்வொருவருக்கும் நகைப்பை ஏற்படுத்த வல்லது. இத் தொகுதியின் வெளியீட்டு விழா வியாழன் அன்று அதாவது 27.07.2017 அன்று விருட்சம் ஸ்டால் 12ல் மாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ளது. முதல் பிரதியை வெளியீட்டு சிற்றுரை ஆற்றுபவர் அம்ஷன் குமார். நூலைப் பெறுபவர் கவிஞர் பரமேசுவரி. அவசியம் எல்லோரும் கலந்து…

நான் யார்?......................

அழகியசிங்கர்



மிகக் குறைவான இடத்தில் புத்தகம் எழுதியவரின் புத்தகத்தை அறிமுகப்படுத்துவதே என் நோக்கம்.  ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தி ஒரு சிறிய கூட்டம் ஏற்பாடு செய்தேன்.  பொதுவாக இக் கூட்டத்திற்கு வருபவர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள்தான்.  அல்லது கூட்டத்திற்கென்று நமக்குத் தெரிந்தவர்களைக் கூப்பிட்டு கூட்டம் நடத்துவது. அந்த முறைபடி 24.072017 (அதாவது திங்கள் கிழமை) மாலை 6 மணிக்கு  ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் புத்தகத்திற்கு ஏற்பாடு செய்தோம்.அப் புத்தகத்தை உருவாக்கிய ஸ்ரீதர்-சாமா கலந்து கொண்டார். அதேபோல் ரமணர் சமாஜிலீந்து வைத்தியநாதன், ஸ்ரீராம் அவர்கள் கலந்து கொண்டார்கள்.  வைத்தியநாதன் சின்ன வயதில் ரமணரைப் பார்த்திருக்கிறார்.  ரமண சமாஜ்ஜை மேற்கு மாம்பலத்தில் திறமையாக நடத்திக்கொண்டு வருகிறார்.   வாழ்க்கையில் எதிர்பாராத சோகம் ஏற்பட்டுவிட அதைச் சரி செய்ய திருவண்ணாமலை ரமண ஆச்சிரமத்திற்கு பலமுறை சென்று வந்ததாக ஸ்ரீதர் சாமா குறிப்பிட்டார். அவர் ஒருவிதத்தில் என் ஒன்றுவிட்ட சகோதரர்.  அவரைத் திரும்பவும் எழுதுவதற்குத் தூண்டுதலாக இருக்க வேண்டுமென்று ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் புத்தகம…

நேற்று நடந்த கூட்டம்

அழகியசிங்கர் 


நேற்று நடந்த கூட்டத்தைப் பற்றி இன்றும் இன்றைய கூட்டத்தைப் பற்றி நாளையும் சொல்வதாக உள்ளேன்.  எதிர்பாராதவிதமாக குவிகம் வெளியீடாக கிருபானந்தன் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளார்.  அந்தப் புத்தகம் பெயர் சில படைப்பாளிகள். 112 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை : ரூ.75. அப் புத்தகத்தின் ஆசிரியர் பெயர் எஸ். கே. என்.  அவர் யாருமில்லை கிருபாகரன்தான்.  ஏன் இப்படியொரு பெயரில் அவர் ஒரு புத்தகம் கொண்டு வந்தார் என்பது தெரியவில்லை.   இந்தப் புத்தகத்தை முழுவதும் தயாரித்தவர் கிருபாகரன்.  முதலில் ஒரு பெரிய பிரசுராலயத்திற்குப் பணத்தைக் கொடுத்து இவருடைய நண்பர்கள் சிலர் புத்தகம் அடிப்பது வழக்கம்.  அந்த அபத்தத்திலிருந்து மாறி தானே அவருடைய புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளார் கிருபாகரன்.   ஒரு சினிமா படத்தைத் தயாரிப்பவர்கள், நடிப்பதிலிருந்து டைரக்ட் செய்வது வரை தானே ஈடுபடுவதுபோல், கிருபாகரன் அவரே ஒரு புத்தகத்தைத் தயாரித்துள்ளார்.  அவருடைய துணிச்சலுக்கு வாழ்த்துகள். 112 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் 24 எழுத்தாளர்களின் சிறுகதைகளை எடுத்துக் கொண்டு ஒரு ரசிகரின் பார்வையில் எழுதியிருக்கிறார்.  அப்படி எழுதிக்க…

தொலைந்து போனால் கவலை இல்லை. ..

தொலைந்து போனால் கவலை இல்லை. ..
அழகியசிங்கர்




1981ஆம் ஆண்டு கவனம் இதழ் வெளிவந்தபோது அதைப் பெறுவதற்காக மேற்கு மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணிக்கு ஆர் ராஜகோபாலன் விட்டிற்குச் சென்று வாங்கினேன்.  கவனம் இதழ் குறித்து கணையாழியில் விளம்பரம் வந்தது. வாங்கியதோடு இல்லாமல் சந்தாவும் கட்டினேன்.   எந்தச் சிறுபத்திரிகைக்கும் உள்ள பிரச்சினை.  விநியோகப் பிரச்சினை. சரியான இலக்கிய ஆர்வலர்களுக்குப் போய்ச் சேர என்ன வழி என்பது தெரியாது.  உண்மையில் கவனம் இதழ்கள் ஏழு வரை கொண்டு வந்ததே பெரிய விஷயமாக எனக்குத் தோன்றுகிறது. கவனம் இதழ்களின் தொகுப்பாக ஆறு இதழ்களை நான் பைன்ட் செய்து வைத்திருந்தேன்.  காலப்போக்கில் ஏழாவது இதழ் இருந்ததே எனக்கு மறந்து போய்விட்டது.  ஆத்மாநாம் கவிதைக்காக கவனம் இதழைப் பார்க்க கல்யாணராமன் வந்திருந்தார்.  அப்போதுதான் தெரிந்தது ஏழாவது இதழ் இருப்பதாக.  பின் இந்த ஏழாவது இதழ் கிடைப்பதற்காக காத்திருந்தேன்.  நான் சேகரித்து வைத்திருந்த பத்திரிகைகளில் தேடிப் பார்த்தேன்.  கவனம் ஏழாவது இதழ் கிடைத்து விட்டது.  ஏதோ புதையலை கண்டு பிடித்த நிலையில் நான் இருந்தேன்.  இந்த ஏழு இதழ்களை மட்டும் வைத்திருந்தால், அ…

வந்து விட்டது கவனம் இதழ்களின் தொகுப்பு

அழகியசிங்கர்



நான் குறிப்பிட்டபடி 3 புத்தகங்ள் வெளிவந்து விட்டன.  இன்னும் ஒரு புத்தகம் அடுத்த வாரம் வர உள்ளது.  மூன்று புத்தகங்களில் ஒரு புத்தகம் என்னவென்று சொல்லப் போவதில்லை.  சொல்லாத புத்தகம் வேள்டுமி என்பவர் ஸ்டால் எண் 12ல் வந்து வாங்கிக் கொள்ளவும்.  ஒரு புத்தகத்தின் பெயர் கவனம் இதழ்களின் தொகுப்பு.  ஞானக்கூத்தன் ஆசிரியராக இருந்த கவனம் இதழ் 1981 மார்ச்சு மாதம் வெளிவந்தது.  கிட்டத்தட்ட ஏழு இதழ்களின் தொகுப்பை ஒரே புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன். நகுலன் குருúக்ஷத்ரம் மாதிரி கவனம் இதழ்களின் ஏழையும் தெபகுத்து புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன். 19.07.2017அன்று நான் எழுதிய தொகுப்பாளர் உரையை அப்படியே தருகிறேன் : ஞானக்கூத்தன் ஆசிரியர் பொறுப்பில் üகவனம்ý என்ற பத்திரிகை மார்ச் மாதம்  1981 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு மாதமும் வந்து கொண்டிருந்தது.   ஜøன் 1981வரை மாதம் ஒருமுறை என்று தொடரந்து 4 இதழ்களாக வந்து கொண்டிருந்த பத்திரிகை 5வது இதழ் ஜøலை மாதத்திற்குப் பதிலாக ஆகஸ்ட் 1981ல் வந்தது.  6வது இதழ் ஒரே தாவலாக ஜனவரி 1982ல் தாவிவிட்டது.   அதேபோல் மார்ச் மாதம் 7வது இதழூடன்  அதாவது 1982 ஆம் ஆண்டு  கவனம் பத்திரிகை …

அற்றம் காக்கும் கருவி

மயிலாடுதுறையில் இருக்கும் நண்பர் பிரபு இலக்கியத்தில் ரொம்ப ஆர்வம் உள்ளவர்.  புத்தகங்களைப் படிப்பது அவற்றைப் பற்றி பேசுவது அவர் பொழுதுபோக்கு.  டூவீலரில் இந்தியா முழுவதும் பல இடங்களுக்குச் சுற்றிப் பார்க்கும் துணிச்சல் மிக்கவர்.  அப்படி சுற்றிப் பார்க்கும் அனுபவத்தை கட்டுரைகளாக எழுதி உள்ளார்.  சுற்றிப் பார்க்கும் இடங்களுக்கு அவர் செல்லும்போது, காமெரா, வாய்ஸ் ரெக்கார்டர் எடுத்துக்கொண்டு போக மாட்டார்.  பின் ஒரு இடத்துக்குப் போய்விட்டு வந்து பல நாட்கள் கழித்து ஞாபகத்திலிருந்து ஊரைப் பற்றிய அனுபவங்களை எழுதுவார்.  அசாத்தியமான ஞாபகசக்தி உள்ளவர். சமீபத்தில் கட்டுரைகள் எழுதி வந்தவர், கவிதைகளையும் எழுதுகிறார்.  அவர் முயற்சியை நான் எப்போதும் ஊக்கப்படுத்துவேன். பலருடைய எழுத்துக்களை வியந்து பாராட்டுவார் (இன்றெல்லாம் ஒரு எழுத்தாளரை யாராவது பாராட்டுகிறார் என்றால், அப்படிப்பட்ட நபர் எங்கே எங்கே என்று தேட வேண்டி உள்ளது.) கவிதைகளை எழுதிக்கொண்டு வருபவர், நாவல்கள், சிறுகதைகளை எழுதவும் தயாராகி விடுவார் என்று நினைக்கிறேன்.
அவர் 'நான் மலாலா' என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு எழுதிய கட்டுரையை இங்கு …