Skip to main content

போய் வா 2016ஆம் ஆண்டே....

போய் வா 2016ஆம் ஆண்டே....


அôகியசிங்கர்



2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னையில் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது.  அதன் பாதிப்பு ஜனவரி மாதத்திலும் இருந்தது.  ஜனவரி 2016ஆம் ஆண்டு சரியாக இல்லை.  எப்போதும் நடக்கும் புத்தகக் கண்காட்சி சென்னையில் ஜனவரியில் நடக்கவில்லை.  பாதிக்கப்பட்ட பதிப்பாளர்களில் விருட்சமும் ஒன்று.  புதிதாக அச்சடித்த புத்தகங்கள் வெள்ளத்தால் கூழாகின.

சேர்த்து வைத்திருந்த புத்தகங்களும் போய்விட்டன.  ஆனால் அந்த மாதம் சர்வதேச சினிமாப் பாடங்கள் ஜனவரி 6ஆம் தேதியிலிருந்து 13ஆம் தேதி வரை நடைபெற்றது.  கீழே புத்தகங்கள் வைத்திருந்த அறையைச் சுத்தம் செய்ய எனக்கு ஆறுமாதம் மேல் ஆகிவிட்டது.  என்னைவிட சில எழுத்தாளர்கள் வெள்ளத்தின் பாதிப்பால் கண்கலங்கினார்கள்.  அவர்களில் எனக்குத் தெரிந்து முருகன் என்பவர் ஒருவர்.  இன்னொரு பதிப்பாளர் பரிசல் செந்தில். . முருகன் அபூர்வமாக சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை இழந்து விட்டார்.  செந்தில் அவர் விற்க வைத்திருந்த புத்தகங்களை எல்லாம் இழந்து விட்டார்.  அவரை ஆரம்ப காலத்திலிருந்து எனக்குத் தெரியும்.  அவர் கடுமையான உழைப்பாளி.  இலக்கியக் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் அவர் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு செல்வார்.  முன்பெல்லாம் அவர் சைக்கிளில் சுற்றுவதைப் பார்த்திருக்கிறேன்.

இந்திய அரசாங்கம் ஜெயமோகன் என்ற எழுத்தாளருக்கு பத்மஸ்ரீ பட்டம் தர வேண்டுமென்று தீர்மானித்திருந்தது.  அதைத் தெரிவிப்பதற்குள் ஜெயமோகன் அதை வேண்டாமென்று மறுத்து விட்டார்.  பரிசு எதாவது கிடைக்குமா பட்டம் எதாவது கிடைக்குமா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் பலர் மத்தியில் ஜெயமோகன் துணிச்சலாக பட்டத்தை மறுத்துவிட்டார். 

புத்தகக் கண்காட்சியை பதிப்பாளர் சங்கம் நடத்தாமல் இல்லை. எப்போது நடக்கும்  இடத்தில் இல்லாமல் ஐலேண்ட் கிரவுண்டில் நடந்தது. மே மாதம் நடந்தது.  தாங்க முடியாத வெயில்.  விற்பனையிôல் பாதிதான் கிடைத்தது.  எந்தப் புத்தக காட்சியிலும் விருட்சம் புத்தகம் ஒரு லட்சம் விற்றாலே வெரிய வெற்றி.  

இந்தப் புத்தகக் காட்சியின்போது, நான் சில புத்தகங்களைக் கொண்டு வந்தேன்.  அசோகமித்திரனின் கதைகளும் கவிதைகளும் கொண்ட புத்தகம்.  பத்திரிகைகளில் வெளிவந்த 12 சிறந்த கதைத் தொகுதி, வைதீஸ்வரனின் 80 வயது முடிந்த தொடர்பாக அதற்கு மட்டும் ஒரு ஆகாயம் என்ற புத்தகம்.  பெருந்தேவியின் அழுக்கு சாக்ஸ் என்ற புத்தகம்.  ஆனால் நான் தவற விட்டது.  ஞானக்கூத்தனின் கவிதைத் தொகுதி.  ஜனவரி மாதம் அவரைச் சந்தித்தபோது ஒரு கவிதைத் தொகுதி கொண்டு வரும்படி கேட்டக்கொண்டார்.  நான் வாங்கி வைத்துக்கொண்டேன்.  ஆனால் என்னால் புத்தகக் கண்காட்சிக்குள் கொண்டு வர முடியவில்லை.  காராணம் ஞானக்கூத்தனின் கைபெழுத்துப் பிரதி.  அவ்வளவு எளிதாக அது புரியவில்லை.  டிடிபி செய்பவரும் உற்சாகத்துடன் அதை அடித்துக் கொடுக்கவில்லை.    எனக்கு டிடிபி செய்பவர் சைதாப்பேட்டையில் இருக்கிறார்.  அவரிடம் நான் ஒரு புத்தகத்தை அடிக்கக் கொடுத்தால், அதன்பின் என்னுடன் பேச்சுவார்த்தையே வைத்துக்கொள்ள மாட்டார்.  புத்தகத்தை முடித்துத் தருவாரா மாட்டாரா என்பது தெரியாது.

ஞானக்கூத்தனுக்கு புத்தகக் காட்சியின்போது கொண்டு வரவில்லை என்று என் மீது வருத்தம்.  இதை அவர் தன் முகநூலிலும் தெரிவித்து விட்டார்.  அவர் புத்தகம் கொண்டு வர முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கும் இருந்தது.  வரும் ஜனவரி 2017ல் கொண்டு வந்து விடுகிறேன் என்று அவனரைச் சமாதானம் செய்தேன்.  ஆனால் 2016 ஜøலை மாதம் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்து விட்டது.  ஞானக்கூத்தன் இறந்து விட்டார். 

 அந்தத் தருணத்தில் அவரைப் பார்த்தபோது அவர் இருமிக்கொண்டே இருந்தார்.  லட்சுமி மணிவண்னன் நடத்திய  கவியரங்கக் கூட்டத்தில் கூட அவர் பாதியில் எழுந்து போய்விட்டார்.  அதிகமாகவே அவர் இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தார் என்று தோன்றியது.

ஞானக்கூத்தன் மரணத்தைத் தொடர்ந்து நா முத்துக்குமார் என்ற கவிஞரும் திரைப்பாடல் ஆசிரியரும் மரணம் அடைந்து விட்டார். குமரகுருபரன் என்ற கவிஞர்.  அவருக்கு இயல் பரிசு அறிவித்திருந்தார்கள். அவரும் எதிர்பாராதவிதமாய் இறந்து விட்டார்.  இது அதிர்ச்சியான நிகழ்ச்சிதான்.  13ஆம்தேதி ஆகஸ்ட் மாதம் நானும் ராஜகோபாலனும் ஞானக்கூத்தனுக்கு இரங்கல் கூட்டம் நடத்தினோம்.

அதேபோல் இன்குலாப் என்ற கவிஞரும் மரணம் அடைந்து விட்டார்.  சுரேசன் என்ற கவிஞர் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.  கவி:ஞர்களின் மரணத்தை வெளிப்படுத்தும் ஆண்டாகத்தான் 2016ஐ நான் பார்க்கிறேன். இதோ இந்த ஆண்டு முடிவதற்குள் இன்னும் சில மரணங்களையும் பதிவு செய்ய வேண்டிஉள்ளது.  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம், நான் மதிக்கும் துக்ளக் ஆசிரியர் சோவின் மரணம் என்றெல்லாம் அடுக்கிக்கொண்டு போகலாம்.  

தெலுங்கிலிருந்து 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கும், கௌரி கிருபானந்தம் அவர்களுக்கு மொழிபெயர்ப்புக்காக சாகித்திய விருது விடைத்துள்ளது.  ஒரு பரிசு கிடைத்தால் இன்னொரு பரிசும் ஒருவருக்கு தொடர்ந்து வரும் என்பார்கள்.  அதேபோல் அம்பை மூலம் ஒரு பரிசும் அவருக்குக் கிடைத்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுர விருது ஒவ்ùôவரு படைப்பாளிக்கு ஜெயமோகனும் அவருடைய நண்பர்கள் வட்டமும் சேர்ந்து ஏற்பாடு செய்கிறார்கள்.  சிறந்த படைப்பாளி ஒவ்வொருவராக அழைத்து பரிசு அளிக்கிறார்கள்.  பரிசை விட அந்தக் கூட்டத்தை ரொம்பவும் திறமையாக ஒரு திருவிழா நடத்துவதுபோல் நடத்துகிறார்கள்.  வண்ணதாசனுக்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது.  ஒருவருக்கு ஒரு பரிசு கிடைத்தால் அவருக்கே இன்னொரு அமைப்பிலிருந்தும் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது.  வண்ணதாசனுக்கு இந்த முறை அவருடைய சிறுகதைத் தொகுப்புக்கும் சாகித்திய அக்காதெமியிலிருந்து  பரிசு கிடைத்துள்ளது. 

நவீன விருட்சம் என்ற என் பத்திரிகை கடந்த 27 ஆண்டுகளுக்குப் பிறகு 100வது இதழை எட்டி உள்ளது.  அதற்கான ஒரு கூட்டத்தை மேற்கு மாம்பலத்தில் காமாட்சி மினி ஹாலில் ஏற்பாடு செய்து நடத்தினோம்.  நவீன விருட்சம் மீது அக்கறை கொண்ட நண்பார்கள் மூலம் இக் கூட்டம் சிறப்பாக நடந்தது.  100வது 260 பக்கங்கள் கொண்ட இதழ். இவ்வளவு தூரம் கொண்டு வருவேன் என்பதை நான் நம்பவில்லை. 100வது இதழில் ஞானக்கூத்தனை ஞாபகப்படுத்தும்படி அவர் புகைப்படத்தைக் கொண்டு வந்துள்ளேன்.

சென்னை டாக் சென்டரில் நாவல் விமர்சனக் கூட்டத்தில் 800 பக்கங்கள் கொண்ட சாருநிவேதிதாவின் ராச லீலா என்ற புத்தகத்தைக் குறித்து ஒரு கட்டுரை எழுதி வாசித்தேன்.  20 நிமிடங்கள் நான் தொடர்ந்து கட்டுரை வாசித்தேன்.  

ஒவ்வொரு ஆண்டும் தமிழில் புதுபுது பதிப்பாளர்கள் தோன்றிகொண்டிருப்பார்கள்.  இந்த ஆண்டு இரண்டு பெண் படைப்பாளிகள் பதிப்பாளர்களாக மாறி உள்ளார்கள்.  ஒருவர் லதா ராமகிருஷ்ணன்.  இவர் அனாமிகா என்ற பெயரில் 4 புத்தகங்களுக்கு மேல் கொண்டு வந்துள்ளார். இன்னொருவர் பெருந்தேவி.  இவர் பேயோன் என்பவரின் கவிதைத் தொகுதியை (வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை) கொண்டு வந்துள்ளார்.  இவர்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சரி, ஓராண்டில் தமிழில் அதாவது 2016ஆம் ஆண்டில் எத்தனை கவிதை நூல்கள், சிறுகதைத் தொகுதிகள், கட்டுரைத் தொகுதிகள், நாவல்கள் வந்திருக்கின்றன.  யாருக்காவது தெரியுமா?  எத்தனைப் புத்தகங்களை வாங்கி வைத்திருக்கிறோம்.  எத்தனைப் புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு படிக்காமல் இருக்கிறோம்? தெரியுமா?

இந்த ஆண்டை கவிஞர்களை அதிகமாக இழந்த ஆண்டாகத்தான் நான் கருதுகிறேன்.  
  

Comments