Skip to main content

ஐராவதமும் புத்தக விமர்சனமும்...

ஐராவதமும் புத்தக விமர்சனமும்...            



அழகியசிங்கர்



என் வீட்டிற்குப் பக்கத்தில் ஐராவதம் இருந்தார்.  ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.  நான் டூ வீலரில் இப்படி வலம் வந்தால் அவர் வீடு வந்து விடும்.  அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொள்வோம்.  ஒவ்வொரு விருட்சம் இதழிலிலும் எதாவது ஐராவதம் எழுதிக் கொடுப்பார்.  ஒரு முறை சிறுகதை எழுதித் தருவார்.  ஒருமுறை கவிதை எழுதித் தருவார்.  ஒருமுறை கட்டுரை எழுதித் தருவார்.  விருட்சத்திற்கு புத்தகங்கள் எல்லாம் விமர்சனத்திற்கு வரும். அந்தப் புத்தகங்களை உடனே படித்து விட்டு எழுத வேண்டும்.  என்னால் அப்படி படிக்க முடியாது.  ஒருமுறை ஐராவதத்தைப் பார்த்து, üüபுத்தகங்கள் வந்திருக்கின்றன.  விமர்சனம் செய்ய வேண்டும்,ýý என்றேன்.  üüஎன்னிடம் கொடுங்கள்.  விமர்சனம் செய்து தருகிறேன், என்றார்.   நாங்கள் இருவரும் ஒன்றாக அலுவலகம் செல்வோம்.   மாம்பலம் ரயில் நிலையத்தில் சந்தித்துக் கொள்வோம்.  விமர்சனத்திற்கு வந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் ஐராவதத்திடம் கொடுத்து விடுவேன்.

ஐராவதத்திடம் புத்தகங்கள் கொடுப்பதில் எனக்கு ஒரு நன்மை உண்டு. அவர் விமர்சனம் செய்து முடித்தப் பிறகு எல்லாப் புத்தகங்களையும் என்னிடமே திருப்பிக் கொடுத்து விடுவார்.  நான் என்ன வேகத்தில் புத்தகங்களைக் கொடுக்கிறேனோ அதே வேகத்தில் படித்துவிட்டு எழுதிக் கொடுத்து விடுவார்.  மேலும் புத்தக மதிப்புரைக்காக ஒரே ஒரு புத்தக் பிரதியைத்தான் விருட்சத்திற்கு அனுப்புவார்கள்.  நான் சொல்வேன் :  "புத்தக மதிப்புரை விருட்சத்தில் ஒன்றரைப் பக்கம் அல்லது இரண்டு பக்கங்களுக்கு மேல் வரக்கூடாது," என்று.  அதே பக்க அளவில் எழுதித் தருவார்.  அதிகப் பக்கங்கள் உள்ள புத்தகமாக இருந்தால் இரண்டு பக்கங்களுக்கு எழுதித் தருவார்.  

படித்துவிட்டு  அவர் மனசில் என்னன்ன தோன்றுகிறதோ அது மாதிரி எழுதித் தருவார்.  விமர்சனம் எழுதும்போது வேண்டுமென்றே பல வெளிநாட்டு எழுத்தாளர்களைப் பற்றி குறிப்பிடுவார்.  நான் கேள்வியே பட்டிருக்க மாட்டேன்.  எனக்கு அதெல்லாம் அவர் படித்திருக்கிறாரா என்ற சந்தேகம் கூட வரும்.  ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டிருப்பதுதான் அவருடைய வேலை.  ஒரு புத்தகத்தைப் படிப்பது என்றால் விடாமல் படிப்பார்.  வீட்டைவிட்டு எங்கும் போக மாட்டார். நடைபயிற்சி என்பதே கிடையாது.    ஒருமுறை இலக்கியச் சந்திப்பு கூட்டத்திற்கு அவரை விடாப்பிடியாக இழுத்துக்கொண்டு போனேன்.  அவரைப் பார்த்த ந முத்துசாமி ஆச்சரியப்பட்டார்.  "என்னய்யா இங்கே வந்திருக்கே?" என்று  அவரைப் பார்த்துக் கேட்க, அதற்கு "இவர்தான் என்னை தூசித் தட்டிக் கொண்டு வந்திருக்கிறார்," என்று ஐராவதம் சொன்ன பதிலைக் கேட்டு எனக்கு தாங்க முடியாத சிரிப்பு வரும்.    

ஒரு முறை சுந்தர ராமசாமி கொண்டு வந்த காலச்சுவடு இலக்கிய மலர் குறித்து ஒரு விமர்சனத்தை ஐராவதம் எழுதினார்.   நான்தான் üஒரு புத்தக விமர்சனத்தை இருவர் பேசுவதுபோல் எழுதுங்கள்ý என்றேன்.  அவ்வாறே எழுதினார்.  ஆனால் அதில் பிரச்சினை ஏற்பட்டு விட்டது.  சுந்தர ராமசாமியை üதமிழ் இலக்கிய உலகின் ஞானத் தந்தையாக தன்னை அறிவிக்கும் முயற்சிý என்று அந்த இலக்கிய மலரைப் பற்றி எழுதி விட்டார். ஐராவதம் எதை எழுதிக் கொடுத்தாலும் நான் பிரசுரம் செய்து விட வேண்டும்.  இல்லாவிட்டால் அடுத்த முறை எழுதித் தர மாட்டார்.  ஏன் என்னை விரோதியாக பார்க்கக் கூட ஆரம்பித்து விடுவார்.  நான் அப்போது உணர்ந்த ஒன்று நான் ஒருவனே விருட்சம் பத்திரிகை முழுவதும் எழுத முடியாது என்பது.  இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான் அவரிடம் புத்தகங்கள் கொடுப்பதை குறைத்து விட்டேன்.  முக்கியமான எழுத்தாளர்கள் புத்தகங்களைக் கொடுப்பதைத் தவிர்த்தேன்.

நானே எதாவது எழுத முயற்சி செய்வேன்.  இல்லாவிட்டால் வரப்பெற்றோம் என்று பிரசுரம் செய்து முடித்து விடுவேன்.  ஐராவதம் பெரும்பாலும் சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதுவதை விட்டுவிட்டார்.  நான் புத்தகம் கொடுக்காவிட்டாலும் அவர் கைக்குக் கிடைக்கும் புத்தகங்களை எடுத்து எதாவது எழுதாமல் இருக்க மாட்டார். அவர் தெரு முனையில் இருக்கும் யுவராஜ் லென்டிங் லைப்ரரியிலிருந்து புத்தகங்களை வாங்கிப் படித்துவிட்டு அப் புத்தகம் பற்றி எழுதுவார்.  பழைய தீபாவளி மலர்களைப் படித்துவிட்டு அம் மலர் எப்படி வந்திருக்கிறது என்று எழுதுவார்.  

அவருக்கு யாரையாவது பிடித்து இருந்தால், புகழ்ந்து  தள்ளுவார்.   பிடிக்காவிட்டால் மோசமாக எழுதி விடுவார்.  ஒரு புத்தகத்தில் அவருக்குப் பிடித்தப் பக்கத்தை எடுத்துக்கொண்டு அதில் புத்தக ஆசிரியர் என்ன சொல்கிறாரோ அப்படியே எழுதுவார். சில பக்கங்களிலிருந்து பாரா பாராவாக எடுத்துப் போட்டு  ஆசிரியர் கருத்து பிரமாதம் என்று முடிப்பார்.    இதை புத்தக மதிப்புரையாக  எடுத்துக்கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை.  அவரிடம் கேட்டால் மழுப்பலாக சிரித்துவிட்டு பேசாமல் இருந்து விடுவார்.

ஆனால் எந்தப் புத்தகம் கொடுத்தாலும் எழுதக் கூடியவர்.  ஒருமுறை சதாரா மாலதி கவிதைப் புத்தகத்தைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுதிவிட்டார்.  சதாரா மாலதிக்கே தன் புத்தகத்திற்கான விமர்சனத்தைப் படித்து விட்டு நம்ப முடியாமல் இருந்தது.  அது ஒரு உயர்வு நவிற்சியாக இருந்தது.  புத்தகம் கொண்டு வருவது என்பது சிரமமானது. ஒரு புத்தகம் நமக்கு படிக்க சரியாக இல்லை என்றால் அப்புத்தகம் பற்றி ஒன்றும் சொல்லாமல் இருப்பதே சாலச் சிறந்தது.  அதைப் பற்றி எழுதி அடிப்பது அல்ல.

அப்படியென்றால் புத்தக விமர்சனம் என்றால் என்ன?  ஒரு நாவலை விமர்சனம் செய்வதென்றால் நாவலின் முன் கதை சுருக்கத்தைச் சொல்வதா? அல்லது நாவலின் சில பகுதிகளை பத்தி பத்தியாக எழுதுவதா? இதெல்லாம் கூட புத்தக விமர்சனத்தின் ஒரு கூறுதான் என்பார் ஐராவதம்.  இது தவறு என்று சொல்வதை நானும் ஏற்றுக்கொள்ளவில்லை.  ஐராவதம் சொல்வார் : சுஜாதாவின்  சலவைக்குப்போடும் கணக்கைக் கூட விமர்சனம் செய்யலாம் என்று. கோட்பாடு ரீதியாக புத்தகத்தை விமர்சிப்பதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை.  அது உடலை கூறுபோடும் விஷயம் என்பார். அவர் விமர்சன முறை க நா சு வின் ரசனை முறைதான்.

ஆனால் தமிழ்நாட்டில் புத்தகம் வருமளவுக்கு புத்தக விமர்சனம் வருவதில்லை. மேலும் புத்தக விமர்சனத்தைப் பார்த்து யாரும் புத்தகம் வாங்குவதில்லை.  வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை யாரும் படிப்பதும் இல்லை.  பெரும்பாலான புத்கங்கள் கண்டு கொள்ளாமல் போய் விடுகின்றன.  

Comments