Skip to main content

சில துளிகள்.......2

அழகியசிங்கர் 



ஒரு வழியாக 100வது இதழ் விருட்சம் அடுத்த வாரம் வந்துவிடும். அதன்பின் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று நண்பர்கள் குறிப்பிடுகிறார்கள்.  எப்படி இந்தக் கூட்டத்தை நடத்தலாமென்று யோசனை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
                                                                                          *********
அக்டோபர் மாத ஆனந்தவிகடன் தடம் இதழில் நான் எழுதிய 'நானும் அசோகமித்திரனும்' என்ற கட்டுரை  வெளிவந்துள்ளது.  ரொம்பநாட்கள் கழித்து நான் எழுதிய திருப்திகரமான கட்டுரை இது.  தடம் வாங்கிப் படியுங்கள்.
                                                                                     *********
எனக்குப் பிடித்த கவிதைகள் என்ற பெயரில் 100 கவிதைகள் கொண்டுவர திட்டமிட்டுள்ளேன்.  இப்போது 28 கவிதைகள் கொண்டு வந்துள்ளேன்.  எல்லாக் கவிதைகளையும் புத்தகங்களிலிருந்துதான் தேர்ந்தெடுக்கப்படும்.  
                                                                                       **********
இந்த ஆண்டு தீபாவளி மலர்கள் வாங்க வேண்டாமென்று நினைக்கிறேன். ஏன்எனில் போன ஆண்டு தீபாவளி மலர்களையே நான் இன்னும் படித்து முடிக்கவில்லை.  அவற்றை படித்து முடித்தப்பின் பழைய பேப்பர் கடைகளிலிருந்து இந்த ஆண்டு தீபாவளி மலர்கள் வாங்கிப் படிக்கலாம்.
                                                                                     ***********
இந்த மாதம் 25ஆம் தேதி டாக் சென்டரில் சாருநிவேதிதாவின் ராஸ லீலா என்ற நாவலைக் குறித்துப் பேசுகிறேன்.  20 நிமிடமாவது பேச வேண்டும்.  614 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் 148வது பக்கம் படித்துக்கொண்டு வருகிறேன்.  
                                                                                       **********
பிரம்மராஜன் கவிதையைப் படித்தவுடன் இப்படியெல்லாம் எழுதிப் பார்க்கலாமா என்று தோன்றுகிறது.  அப்பாவைப் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று எழுதுகிறேன்.  
                                                                                     ***********
கடந்த 7 வாரங்களாக அமெரிக்காவிலிருந்து வந்த  என் பையன், அவன் மனைவி, அவன் புதல்வி என்று வீட்டை கலகலப்பாக்கி விட்டார்கள். அவர்கள் திரும்பவும் அமெரிக்கா சென்று விட்டார்கள்.  இரண்டு நாட்கள் அவர்கள் இருந்த அறையைப் பார்க்கவே எனக்கு சங்கடமாக இருந்தது.
                                                                                     ***********
சமீபத்தில் எந்த தமிழ் சினிமாவையும் நான் பார்க்க விரும்பவில்லை.  இதுவும் ஏன் என்று தெரியவில்லை.
                                                                                     ***********
தானாகவே பதவி மூப்பு வாங்கிக்கொண்ட என் நண்பர் குறிப்பிட்ட விஷயம் சற்று யோசிக்க வைத்தது.  'அலுவலகத்தில் இருந்தபோது பல அலுவலக நண்பர்கள் அவரிடம் பேசுவார்களாம்.  இப்போது யாரும் பேசுவதில்லையாம்..' 'வருத்தப்படாதே நண்பா,' என்று அவரிடம் சொன்னேன்.
                                                                                 *************
சமீபத்தில் நான் முழுவதும் படித்தப் புத்தகம் எம் டி முத்துக்குமாரசாமியின் நிலவொளி எனும் இரகசிய துணை.  நீங்களும் படிக்கலாம் என்ற தலைப்பில் இப் புத்தகம் பற்றி எழுதி உள்ளேன்.  அதிகப் பக்கங்கள் வருவதால் என்னுடைய நவீன விருடசம் பிளாகில் வெளியிட உள்ளேன். 
                                                                                          (பின்னால் இன்னும் தொடரும்)

Comments