Skip to main content

அங்கும் இங்கும் 4...........

அழகியசிங்கர்



24.07.2916 (சனிக்கிழமை) அன்று குவிகம் என்ற இலக்கிய அமைப்பு கதை சொல்லும் கூட்டம் ஒன்று நடத்தியது.  10 பேர்களுக்கு மேல் கதை சொன்னார்கள்.  எல்லோரும் உற்சாகமாக  சொன்னார்கள். ஒவ்வொருவரும் விதம்விதமாக கதை சொன்னது  நன்றாக இருந்தது.  முடிவில் ஒரு சிறுமி அவளுக்குத் தெரிந்த கதையைச் சொன்னாள். எனக்குத் தெரிந்து இரண்டு முக்கிய நண்பர்கள் கதை சொன்னதுதான் தனிப்படட முறையில் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.  ஒருவர் என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்.  சுரேஷ் என்ற பெயர்.  அதேபோல் இன்னொருவர் உமா பாலு. அலுவலக நண்பர். அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவத்தை உருக்கமாக விவரித்தார். இருவரும் தனிப்பட்ட அனுபவத்தை கதைபோல் சொன்னார்கள்.  ஆனால் இருவராலும் சொன்னதை கதையாக எழுத முடியுமா என்பது தெரியவில்லை.  எழுதுவது என்பது வேறு; கதை சொல்வது என்பது வேறு.  இதுமாதிரியான கூட்டத்திற்கு நிச்சயமாக அதிகமாக கூட்டம் வரும். ஏன்என்றால் பார்வையாளர்களே கூட்டத்தில் பங்கு பெறுகிறார்கள்.  விடாமல் தொடர்ந்து இலக்கியக் கூட்டம் நடத்தும் குவிகம் இலக்கிய அமைப்புக்கு என் வாழ்த்துகள். ஒவ்வொரு முறையும் கதை சொல்லும் கூட்டங்களை தொடர்ந்து நடத்தினால் போதும்.

முன்னதாக வாசக சாலை என்ற அமைப்பு பத்தாம் தேதி பரிசல் புத்தக  அலுவலகத்தில்   கதையாடல் நடத்தியது.  சிறு பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளைப் பற்றி விமர்சனப் பார்வையை பலர் வைத்திருந்தார்கள்.   பத்திரிகையில் எழுதியவர்கள் அங்கு பேசியவர்களின் கருத்துக்களைக் கேட்டால், இனிமேல் எழுத வேண்டாம் என்று ஓட்டமாக ஓடிப் போய்விடுவார்கள்.                      
   
ஒவ்வொரு மாதமும் சுப்பு என்பவர் நடத்துகிற தமிழ் வளர்த்த சான்றோர் என்ற கதையாடல் கூட்ட நிகழ்ச்சியைக் கேட்டேன்.  வ வே சுவும். மாலனும் அமர்ந்துகொண்டு உரையாடிக் கொண்டிருந்தார்கள். எழுத்தாளர் அழகிரிசாமியைப் பற்றி பேசினார்கள்.  அழகிரிசாமி மௌனியையும் லாசராவையும்   மோசமாக விமர்சனம் செய்திருப்பதாக மாலன் குறிப்பிட்டார்.  அதைக் கேட்கும்போது சற்று சங்கடமாக இருந்தது.   முன்பே ஐராவதம் சொன்ன விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.  எழுபது வாக்கில் இலக்கியச் சங்கம் என்ற அமைப்பு கோணல்கள் என்ற சிறுகதைப் புத்தகம்  கொண்டு வந்தது. அதன் பிரதி ஒன்றை அழகிரிசாமியிடம் காட்டியபோது, ஆரம்பத்திலேயே  இப்படியா தலைப்பு வைக்கிறது என்று கிண்டல் செய்தாராம். 
                                                                                  **************                                 
25.07.2016 (ஞாயிறு) ஒரு கதை ஒரு கவிதை கூட்டத்தை வீட்டில் வைத்துக் கொண்டேன்.  போஸ்டல் காலனியில் நாங்கள் முன்பு இருந்த வீடு.  முக்கிய விருந்தாளியாக எஸ் வைதீஸ்வரனை அழைத்திருந்தேன்.  அவருடைய கவிதைத் தொகுதியும், கதைத் தொகுதியும் சமீபத்தில் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.  தெளிவாக வைதீஸ்வரன் அவருடைய கதைகளையும் கவிதைகளையும் வாசித்தார்.  இந்தக் கூட்டத்தைப் பற்றி முகநூலில் முன்னதாக தெரிவிக்கவில்லை.   இனிமேல் தெரிவிக்க வேண்டாமென்று தோன்றுகிறது.  ஒரு ஐந்து இலக்கிய நண்பர்களை மட்டும் கூப்பிட்டு கூட்டம் நடத்துவதாக எண்ணம். வழக்கம்போல் கிருபானந்தனும், சுந்தர்ராஜனும் எனக்கு துணை நின்றார்கள். தரையில் அமர்ந்து கூட்டத்தை ரசிப்பது சற்று சிரமமாக இருந்தது.  ஹாலில் தொங்கிக்கொண்டிருந்த சீலிங் பேன் படபடவென்று சத்தம் போட்டபடி இருந்தது. நான் புதுமைப்பித்தன் கதையையும், சில க நா சு கவிதைகளையும் படித்தேன்.  கூட்ட நேரம் முடிந்து விட்டது.  அடுத்த முறை ஐந்து பிளாஸ்டிக் நாற்காலிகள் வாங்க வேண்டும்.
                                                                                   ***********
ஆத்மாநாம் தொடங்கிய ழ என்ற சிற்றேட்டின் கடைசி இதழான 28ல் ஞானக்கூத்தனின் மேசை நடராசர் என்ற கவிதை உள்ளது.  அப்போது அதைப் படித்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன்.  அக் கவிதையை இங்கு தருகிறேன்.


மேசை நடராசர்


மேசை மேல் உள்ள நடராசரைச்
சுற்றிலும் இருந்தவை பூத
கணங்கள் அல்ல.  கிங்கரர் அல்ல.
எழுதாத பேனா
மூக்குடைந்த கோணூசி
தைக்கும் நூலான பூணூல் உருண்டை
கருத்துத் தடித்த குடுமி மெழுகு
குப்புறப் படுத்துக் கொண்டு
சசிகலா படித்த நாவல்
முதல்வரின் மழை விமானம்
பயன்படாமல் பழுது பார்க்கப்பட
பங்களூர் சென்றதைக்
கட்டமிட்டுக் கூறிய செய்தித்தாள்
மூலை நான்கிலும் சாரமிழந்து
மையம் விடாத முகம் பார்க்கும் கண்ணாடி
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டி; மற்றும்
இனிவரப் போகும் பலவகைப் பொருள்கள்

ஆனால் நடராசர்
ஆடிக் கொண்டிருக்கிறார்
இருப்பிடம் இமயமோ சித்சபையோ
இல்லையென்றாலும் சூழ்ந்தவை பூத
கணங்;கள் இல்லையென்றாலும்

எனக்குத்தான் ஆச்சரியம்
எடுத்த பொற்பாதத்தின் அருகே
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டியைத்
தவிறியும் இடறி விடாமல்
ஆடிக் கொண்டிருக்கிறார்
மேசை நடராசர்.

Comments