Skip to main content

புத்தக விமர்சனம் 18

அழகியசிங்கர்

சமீபத்தில் சாருநிவேதிதாவின் புத்தக வெளியீட்டுக் கூடட்டத்திற்கு நான், அசோகமித்திரன், வைதீஸ்வரன் மூவரும் சென்றோம்.  7 புத்தகங்களின் வெளியீட்டுக் கூட்டம்.  ராஜா அண்ணாமலை மன்றம் என்ற இடத்தில்.  அவ்வளவு பெரிய இடத்தில் கூட்டம் எவ்வளவு வரும் என்ற சந்தேகம் கூட்டம் நடக்கப் போகும்வரை என்னால் கற்பனை செய்ய முடியாமல் இருந்தது.  ஆனால் 500 அல்லது 600 பேர்கள் கூடி இருந்தார்கள்.  கூட்டத்தில் பெரும்பாலோர் இளைஞர்களாக இருந்தார்கள்.  சாருநிவேதிதாவின் சாதனையாகத்தான் இதை நினைக்கிறேன்.  அவருடைய வாசகர்கள் எல்லா இடங்களிலும் சுழன்று சுழன்று கூட்டத்தினரை வரவேற்றனர்.  
அந்த விழாவில் வெளிவந்த புத்தகங்களில் மூன்று புத்தகங்கள் எனக்குப் படிக்கக் கிடைத்தன.  1. கடைசிப் பக்கங்கள் 2. எங்கே உன் கடவுள் 3. பழுப்பு நிறப் பக்கங்கள்.  இதை என் பாக்கியமாகக் கருதுகிறேன்.  முதலில் நான் கடைசிப் பக்கங்கள் என்ற புத்தகத்தை எடுத்துப் படித்தேன்.  120 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை 2 நாட்களில் முடித்து விட்டேன்.  உண்மையில் இன்னும் சீக்கிரம் கூட முடித்திருக்க முடியும்.  ஆனால் விட்டுவிட்டுத்தான் புத்தகத்தைப் படித்தேன்.  என் கவனம் எல்லாம் இதைப் படித்து முடிப்பதிலேயே இருந்தது.  
இத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் üநியூஸ் சைரன்ý என்ற பத்திரிகையில் வாரா வாரம் எழுதப்பட்ட கட்டுரைகள் என்று சாருநிவேதிதா குறிப்பிட்டுள்ளார்.  மொத்தம் 26 தலைப்புகளில் சாருவின் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.  ஒவ்வொரு கட்டுரையையும மணி மணியாய் எழுதியிருக்கிறார்.  திரும்ப திரும்ப  படிக்கத் தூண்டுகிற மாதிரியான எழுத்து.  
ஒவ்வொரு கட்டுரையும் 2 1/2 அல்லது 3 பங்கங்களில் முடிந்து விடுகிறது.  பல விஷயங்களைக் குறித்து மனம் திறந்து அலசல்.  நமக்கு தெரிந்து கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்களை இக் கட்டுரைகள் மூலம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.  உதாரணமாக முதல் கட்டுரையில் சச்சின் பற்றி கூறி அவருடைய கடினமான உழைப்பைப் பற்றி குறிப்பிடுகிறார்.  உண்மையில் சாருவும் கடுமையான உழைப்பாளியாக இருக்கிறார்.  
மருத்துவக் குறிப்புகள், அவர் பயணம் செய்த இடங்கள், அவர் படித்த புத்தகங்கள், சினிமாவைப் பற்றிய அவருடைய பார்வைகள், செக்ஸ் சம்பந்தமாக அவர் சொல்கிற விஷயங்கள் என்று பலவற்றை இந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
மருத்துவக் குறிப்பைப் படிக்கும்போது எங்கே சாரு ஒரு மருத்துவராகவே மாறி விட்டாரோ என்று தோன்றுகிறது.  
நூறு வயதிலும் இளமையாக இருக்கிற ரகசியம் என்று தேரையர் கூறுவதை இப்படி குறிப்பிடுகிறார் :
இஞ்சியைத் தோல் சீவி மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.  இரண்டு துண்டு இஞ்சிக்கு ஒரு தம்ளர் தண்ணீர்.  பத்து நிமிடம் கழிந்தும் தம்ளரின் அடியில் சுண்ணாம்பு போன்று படிந்திருக்கும்.  அதை விட்டுவிட்டு சாறை மட்டும் குடியுங்கள்.  மதியம் ஒரு ஸ்பூன் சுக்குப் பொடியை நீரில் காய்ச்சிக் குடியுங்கள். இரவில் கடுக்காய். கடுக்காயின் உள்ளே இருக்கும் விதை நஞ்சு.  எனவே கடுக்காயின் தோலை மட்டும் கழுவி எடுத்துப் பொடியாக்கி ஒரு தம்ளர் நீரில் கலந்து அருந்துங்கள் அல்லது நாட்டு மருந்துக் கடையிலேயே கடுக்காய் பொடி கிடைக்கும்.  இப்படி தினமும் சாப்பிடச் சொல்கிறார்.  இப்படி சாப்பிட்டதால் ஏற்பட்ட பலன்களைப் பற்றியும் சொல்கிறார்.  ஹிமாச்சலப் பிரதேசத்தின் லடாக் பிராந்தியத்தில் உள்ள லே என்ற ஊர் வரை மோட்டார் பைக்கில் பயணம் செய்ததைப் பற்றி குறிப்பிடுகிறார்.  
இவருடன் பத்துப் பேர்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள் செல்கிறார்கள்.  சாருக்கு மட்டும்தான் 60 வயது.  சார்ச்சு என்ற ஒரு மோசமான இடத்திற்குச் செல்கிறார்கள்.  பிராண வாயு குறைவான அந்த இடத்தில் எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள்.  ஆனால் சாரு மாத்திரம் பிரச்சினையே இல்லாமல் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.  இதற்குக் காரணம் தேரையர்.  பையில் இஞ்சியையும், கத்தியையும் வைத்திருந்து தோலை சீவி சீவி மென்று கொண்டிருந்தாராம்.  இதைப் படிக்கும்போது எனக்கு சற்று நம்ப முடியாமல் இருந்தாலும், நாமும் முயற்சி செய்து பார்க்கலாமே என்று தோன்றியது.  இதோடு மட்டுமல்லாமல், எப்போது நேரம் கிடைத்தாலும் ஒரு மணி நேரத்திற்கு எட்டு போட்டு நடக்கச் சொல்கிறார்.  அப்போது வயிறு காலியாக இருக்க வேண்டும் என்கிறார்.  இதனால் ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை எல்லாம் சீராக இருக்கும் என்கிறார். இப்படி பல உபயோகமான டிப்ஸ் கொடுக்கும் சாருநிவேதிதா மருத்துவராகவே மாறி விட்டதாக தோன்றுகிறது.  அவர் சொல்வதை சோதித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர் தனக்கு சோதித்துப் பார்த்ததைத்தான் இங்கே குறிப்பிடுகிறார். ஏன் இதைக் குறிப்பிடுகிறேன்.  பக்கம் 46ல் இப்படிக் குறிப்பிடுகிறார் : முதலில் உடûப் பேண வேண்டும்.  பிறகே இலக்கியம், சினிமா எல்லாம் என்று.
எழுத்தாளர்களுக்கு உரிய கவனம் கிடைப்பதில்லை என்பதில் சாருவை விட வேற யாரும் இந்த அளவிற்குக் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை.  தமிழ் நண்டுகள் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் ஜெயிப்பூர் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் எழுத்தாளர்கள் மட்டும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்கிறார்.  2014ஆம் ஆண்டில் 6 மலையாள எழுத்தாளர்கள் கலந்து கொண்ட விபரத்தைக் கூறி, தமிழில் சல்மாவைத் தவிர யாரும் போகவில்லை என்கிறார்.  இதற்குக் காரணமும் சொல்கிறார்.  நம் எழுத்தாளர்களை யாரும்வட இந்தியாவுக்கு அறிமுகப்படுத்துவதில்லை. யாராவது அறிமுகப் படுத்த முயன்றாலும் இன்னொரு தமிழரே, üüஅவன் எழுத்தாளனே அல்ல.  அவனுக்குத் தமிழில் மரியாதையே இல்லை,ýý என்று போட்டுக் கொடுத்து விடுகிறார்கள் என்கிறார் சாரு.  இதற்கு உதாரணமாக புட்டியில் பல மாநில நண்டுகள் பற்றிய கதையைக் குறிப்பிடுகிறார்.  அதில் இரண்டே இரண்டு தமிழ் நண்டுகள் மட்டும் வெளியே போகாமல் புட்டியில் அப்படியே இருக்கிறதாம். ஒன்று மேலே ஏறினால், இன்னான்று கீழே தள்ளி விடுமாம்.  அதே போல் இன்னொன்று ஏறினால் இது கீழே தள்ளி விடுமாம். தமிழில் இப்படி ஒரு எழுத்தாளரை இன்னொரு எழுத்தாளர் மட்டம் தட்டிப் பேசுவது உண்மை என்றாலும், இதைச் சரிபடுத்த எதாவது வழி உண்டா என்பது தெரியவில்லை.  
நான் இதுவரை படித்த எந்தப் புத்தகத்திலும் எழுத்தாளர் ஒரு சுயபிரகடனமாகச் சொல்வதை நான் படித்ததில்லை.  சாரு அவர் புத்தகத்தில் பல இடங்களில் தன்னைப் பற்றி வெளிப்படுத்துகிறார்.  
பக்கம் 77ல் இப்படி குறிப்பிடுகிறார் :
1. என்னிடம் தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது. தொலைக் காட்சி பார்த்து பத்து ஆண்டுகள் ஆகிறது.
2. தினசரிகள் படிப்பதில்லை.  ஒரு நண்பர் எல்லா செய்திகளையும் படித்து என்னிடம் தொலைபேசியில் சொல்லி விடுவார். (எனக்கு அதுமாதிரி நண்பரே கிடையாது).
3. தொலைபேசியில் அதிகம் பேசுவதில்லை.  முக்கியமான நண்பராக இருந்தால் அரை நிமிடம் பேசுவேன்.
4. குடும்ப விசேஷம், பிறந்த நாள், நண்பர்களின் அழைப்பு, பார்ட்டி, பப் எதுவும் கிடையாது.  போன ஆண்டு நான் கலந்து கொண்டது ஒரே ஒரு திருமண வைபவம்தான்.  இப்படி நேரத்தைக் கடுமையாக இழுத்துப் பிடிப்பதால் உங்களின் மூன்று நாட்கள் என்னுடைய ஒரு நாள் என்கிறார் சாரு.
இதையெல்ல்லாம் சொல்பவர் இன்னொன்றும் சொல்கிறார்.  வாசிப்பு என்பது கடல் நீரை கையில் அள்ளுவதுபோல்தான்.  என்றாலும் என் வாசிப்பு பற்றி எனக்குள் சிறிதாக ஒரு கர்வம் உண்டு என்கிறார்.
அடுத்ததாக சினிமாவைப் பற்றி அதிகமாக இப்புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.  பாலுவும் மெளினகாவும் என்ற கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.  இப் புத்தகத்தைப் படிக்கும்போது ஒவ்வொரு தலைப்பைப் படித்தே நாம் பலவற்றை எழுதலாம். 
இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது சாருவின் உணர்ச்சி வேகத்தைப் படித்து ஆச்சரியமாக இருக்கிறது.  தலைமுறைகள் என்ற படத்தைப் பார்த்துவிட்டு பாலுவைப் பார்க்க சாரு அவர் வீட்டிற்குச் செல்கிறார்.  ரூபாய் 1000 கொடுத்து ஒரு அழகான மலர்க்கூடையை வாங்கிக்கொண்டு போகிறார்.  "எதற்கு இந்த பார்மால்டி," என்கிறார் பாலு.  "உங்கள் மீது உள்ள அன்பை வேறு எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை," என்று சொல்லிக்கொண்டே கண்கள் கலங்க மௌனமாய் அமர்ந்திருக்கிறார் சாரு.
சாரு சொல்லும் ஒரு கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  'பெண்களின் மீதான பாலியல் அத்து மீறல்களைக் குறைப்பதற்கு ஒரு வழி பாலியல் தொழிலை சட்ட ரீதியாக அங்கீகரிப்பது' என்கிறார் சாரு.  இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள வில்லை.  ஏன்எனில் அப்படி அங்கீகரித்தால் டாஸ்மாக் கடையில் எல்லோரும் போய் நிற்பதுபோல் செக்ஸ் ஒர்க்கர் வீட்டின் முன் வயது வித்தியாமில்லாமல் எல்லோரும் போய் நிற்பார்கள்.

எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

கடைசிப் பக்கங்கள் - சாரு நிவேதிதா - கட்டுரைகள் - மொத்தப் பக்கங்கள் : 120 - வெளிவந்த ஆண்டு : டிசம்பர் 2015 - வெளியீடு : Kizhakku Pathippgam, 177/103, First Floor Ambal’s Building/ Lloyds Road, Royapettah, Chennai 600 014        Phone : 
044-42009603
  

Comments