Skip to main content

சிறியதே அழகானது

பிரபு  மயிலாடுதுறை



30.01.2016 அன்று சென்னையில் நடைபெற்ற – எனது நண்பரும் 
எழுத்தாளருமான அழகியசிங்கரின் மனைவி திருமதி. மைதிலி அவர்களின் 
பணி நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கு பெற்றேன்.  நெகிழ்வான உணர்வு 
பூர்வமான நிகழ்வாக அது அமைந்திருந்த்து.  தமிழ் இலக்கியம், வாழ்வை 
அகம் புறமென பகுத்து வகுத்துக் கொள்கிறது.  குடும்ப உறவுகளை 
அகமென்றும் சமூக உறவுகளை புறமென்றும் கூறமுடியும்.  வீட்டினை 
அகம் என்கிறோம்.  வீட்டிற்கு வெளியே புறம் என குறிக்கிறோம்.  இந்த 
நூற்றாண்டிலும் சென்ற நூற்றாண்டிலும் தமிழர்களின் சமூக 
வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்த்தால், விவசாய வாழ்க்கை 
முறையிலிருந்து பகுதியளவு வியாபார-வணிக வாழ்வுக்கும் பகுதியளவு 
தொழில் சார்ந்த வாழ்வுக்கும் நகர்ந்திருப்பதைக் காண முடியும்.    
இன்றும் பெருமளவு மக்கள் விவசாயம் சார்ந்த வாழ்க்கை முறையிலும், 
மனோபாவத்திலும் நீடித்திருப்பதைக் காண முடியும். சுதந்திர இந்தியாவில், 
இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாட்டை ஆண்ட போது கல்விக்கு 
முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கல்வி பரவலாக்கப்படுவதற்கான 
முயற்சிகள் துவங்கப்பட்டன.  தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் 
திரு. இராஜாஜியும் திரு. காமராஜும் அம்முயற்சிக்காக நன்றியுடன் 
நினைவுகூரத் தக்கவர்கள். பெண் கல்விக்கும் தமிழகத்தில் கல்வி 
பரவலாக்கப்பட்டதற்கும் அவர்களே காரணம். 

அகத்திற்கும் புறத்திற்குமிடையே ஒரு சமநிலையைக் கொண்டு 
வருவது என்பது இன்றைய வாழ்வில் ஒரு முக்கியமான விஷயமாக 
இருக்கிறது.  பல்வேறு விதமான சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் 
கலாச்சார காரணிகள் நமது அக மற்றும் புற வாழ்வை பாதிக்கின்றன.  
அவற்றை எதிர்கொண்டு கடந்து செல்வதையே நாம் வாழ்க்கைப்பாடு 
என்கிறோம்.  சமூகக் கூறுகள் குடும்ப வாழ்விலும், குடும்ப வாழ்வின் 
அம்சங்கள் சமூக உறவுகளிலும் பாதிப்பினைச் செலுத்துவதற்காக உள்ளன.  
தனிமனிதர்களின் ஆற்றலும் ஆளுமைத் திறனுமே அக மற்றும் புற 
வாழ்வில் ஒத்திசைவு ஏற்படுவதைத் தீர்மானிக்கின்றன.  மகாத்மா காந்தி 
பெண் கல்விக்கான தேவையையும் அவசியத்தையும் உணர்ந்தவர்.  அவர் 
காலத்தில் ஊக்கமின்றி தேங்கியிருந்த சமூகத்திடம் பெண்கள் பொது 
வாழ்வில் பங்கெடுக்க வேண்டும் என்ற அறைகூவலை விடுத்தவர்.  
பெண்களுக்கு கல்வி அளிக்கப்பட்டாக வேண்டும் என்ற வாதிட்டவர் சமூக 
மாற்றமும் முன்னேற்றமும் பெண்கள் வாழ்வில் மாற்றமின்றி நிகழவே 
இயலாது என நம்பியவர்.  குடும்பங்களின் அவல நிலைக்கும் பெண்களின் 
கண்ணீருக்கும் காரணமாக இருந்ததாலேயே மதுவினை சமரசமின்றி 
எதிர்த்தவர்.  மகாத்மா காந்தியின் தலைமைக்குப் பின்னான இந்திய 
தேசிய காங்கிரஸே இந்தியப் பெண்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனையை 
உருவாக்கியது என்பது மிகையல்ல.  அகத்தில் சிறையுண்டிருந்த பெண்கள் 
நாடு சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்காக – 
ஆயிரக்கணக்காக – இலட்சக்கணக்காக பள்ளி கல்லூரிகளுக்கு சென்றனர்.  
மொழியும், கணிதமும், அறிவியலும், வரலாறும் பயின்றனர்.  அரசுத் 
துறைகளிலும், தனியார் துறையிலும் பணி புரியத் தொடங்கினர்.  சுதந்திர 
இந்தியாவின் பெரும் சாதனைகளில் ஒன்று பெண்கள் படிக்கவும் 
வேலைவாய்ப்பை பெறவும் ஏற்படுத்தித்தரப்பட்ட வாய்ப்பு.  படித்த-
வேலைக்குச் செல்லும் – பெண்களின் வாழ்வு என்பது ஒரு தனிப்பட்ட 
பெண்ணின் உலகியல் மட்டுமல்ல  ; அது ஒரு குறியீடு ; சமூக 
மாற்றத்தின் அடையாளம்.  நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி 
நடக்கக் கூடும் என அனுமானித்திருக்கக் கூட மாட்டார்கள்.  ஐம்பது 
ஆண்டுகளுக்கு முன்னால் இது சாத்தியமா என மலைத்திருப்பார்கள்.  
இன்று பெண்களின் படிப்பும், வேலைவாய்ப்பும் நடைமுறை யதார்த்தமாகி 
உள்ளது. 

எனது தொழில் நிமித்தமாக பல்வேறு அரசு அலுவலகங்களின் 
படிக்கட்டுகளை ஏறி இறங்கியவன் என்ற வகையில் எனது அபிப்ராயம் : 
பெண்கள் அதிகாரிகளாகவும், அலுவலர்களாகவும் உள்ள போது ஒரு 
குறைந்தபட்ச நியாயம் பேணப்படுகிறது.  இழுத்தடிப்புகள் இருப்பதில்லை.  
அரசுத் துறையிலும் தனியார் நிறுவனங்களிலும் ஊக்கத்துடன் பணி 
புரியும் பெண்களே இந்திய சமூக மாற்றத்தின் உண்மையான முகங்கள்.  
வீட்டின் பணிகளை செய்து முடித்து குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து 
அலுவலகத்தின் பணி நெருக்கடிகளை சமாளித்து மீளும் காரியத்தை 
வாழ்நாளின் பெரும்பகுதி மேற்கொள்வது என்பது ஒரு பெரும் சவால், 
இந்தியப் பெண்கள் அதனை எதிர்கொள்கின்றனர் என்பதே அவர்களின் 
பெரும் வெற்றி. 

திருமதி. மைதிலி அவர்கள் 1976ம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் 
வங்கியில் பணியில் இணைந்திருக்கிறார்.  சக ஊழியர்கள் அவரைப் பற்றி 
சொல்லும் போது வங்கி வாடிக்கையாளர்களின் பெயரையும் கணக்கு 
எண்ணையும் துல்லியமாக ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடியவர் என்று 
பாராட்டிச் சொன்னார்கள்.  வாடிக்கையாளர்கள் அவரைப் பற்றி பேசும் 
போது வங்கிச் சேவையை விரைவாக மலர்ந்த முகத்துடன் வழங்கக் 
கூடியவர் என்ற சொன்னார்கள்.  எடுத்துக் கொண்ட பணியை மனதளவில் 
முழுமையாக ஏற்றுக் கொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒருவரே 
இத்தகைய பாராட்டைப் பெற முடியும்.  தனது நாற்பதாண்டு கால 
பணியில் அலுவலகத்திலும் வீட்டிலும் நல்ல பெயரெடுத்து பணி நிறைவு 
பெற்றிருக்கிறார்.  நமது சமூகம் அரசியலில் உள்ள பெண்களையே 
முக்கியமாக எண்ணி பழகியிருக்கிறது.  அவர்கள் விரல் விட்டு எண்ணக் 
கூடியவர்கள் ; மிகக் குறைவானவர்கள்.  குடும்பத்தின் கடமைகளையும் 
சமூகப் பொறுப்புகளையும் திறம்படக் கையாண்ட – கையாளும் திருமதி. 
மைதிலி போன்ற நுண்புரட்சியாளர்களான நூற்றுக்கணக்கான – 
ஆயிரக்கணக்கான – இலட்சக்கணக்கான பெண்களே இந்தியப் பெண்களின் – 
இந்திய சமூக மாற்றத்தின் உண்மையான முகங்கள்.  அன்னை பூமிக்காக 
மகாத்மா உயிர் நீத்த ஜனவரி 30 அன்று திருமதி. மைதிலி அவர்கள் 
புகழுடனும் பாராட்டுடனும் பணி நிறைவு பெற்றது குறியீட்டுரீதியில் 
மகாத்மாவுக்கு செலுத்தப்பட்ட ஓர் அஞ்சலியும் கூட!

Comments