Skip to main content

ஏன் கடுமையாக இருந்தது இன்றைய பொழுது?

அழகியசிங்கர்



இன்றைய பொழுது எனக்கு இவ்வளவு கடுமையாக இருக்குமென்று நினைக்கவில்லை.  காலையில் 2 மணிக்கு எழுந்து என் உறவினர் ஒருவரை டில்லி ராஜாதானி வண்டியில் சென்டரல் ரயில்வே ஸ்டேஷனலில் ஆறு மணிக்குள் கொண்டு விட முனைப்புடன் இருந்தேன்.  அதனால் தூக்கம் கெட்டு விட்டது.

பின் சென்டரல் ஸ்டேஷனலிருந்து திரும்பி வந்தவுடன் தம்பியைப் பார்க்கச் சென்று விட்டேன்.  திரும்பவும் வீட்டுக்கு வரும்போது மணி மதியம் இரண்டாகி விட்டது.  அசதி.  தூங்கி விட்டேன்.  எழுந்தபோது மணி 4 ஆகிவிட்டது.  சென்டரல் ரயில்வே நிலையத்தில் நான் இருந்தபோது தினமணி பேப்பர் வாங்கினேன்.  கதிரில் என் நண்பர் நா கிருஷ்ணமூர்த்தியின் சித்ரா செம பிஸி என்ற கதையைப் படித்தேன்.  சா கந்தசாமியின் கலையில் ஒளிரும் காலம் என்ற கட்டுரையைப் படித்தேன்.
தினமணி பேப்பரின் நடுப்பக்கத்தை நான் எப்போதும் பார்க்காமல் இருக்க மாட்டேன்.  தமிழ் மணி என்ற பெயரில் வரும் எல்லாம் உபயோகமாக இருக்கும்.  குறிப்பாக நான் விரும்பிப் படிக்கும் பகுதி கலா ரசிகன் பகுதி.
போனவாரம் அவர் எழுதிய குறிப்புகளைப் படித்தபோது ய மணிகண்டன் எழுதிய ந. பிச்சமூர்த்தி கட்டுரைகள் புத்தகம் பற்றி எழுதியிருந்தார். நான் உடனே அந்தப் புத்தகத்தை வாங்கிவிட்டேன்.

இன்றைய தினமணி இதழில் கலா ரசிகன் நேர் பக்கம் என்ற என் புத்தகம் பற்றியும் என்னைப் பற்றியும் எழுதி இருந்தார்.  அசந்து விட்டேன்.  என்னால் நம்ப கூட முடியவில்லை.  நான் கலா ரசிகனைப் பார்த்திருக்கிறேன்.  அவர் கூட்டத்தில் பேசியதைக் கேட்டிருக்கிறேன்.  ஆனால் அவருக்கு என்னைத் தெரியாது.  கூட்டத்தில் அவர் நெருங்க முடியாத தூரத்தில் இருப்பார்.

நேற்று நான் சாருநிவேதிதாவின் புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு அசோகமித்திரன், வைதீஸ்வரன் சகிதமாக சென்றிருந்தேன்.  சாருநிவேதிதா அக் கூட்டத்தில் ஒன்று சொன்னார்.  எழுத்தாளர்களை நாம் யாரும் கொண்டாடுவதில்லை என்று.  அவர் சொன்னது உண்மையான வார்த்தை. சாரு இன்னொன்று சொன்னார்.  எழுத்தைத் தவிர நான் வேறு எதுவும் யோசிப்பதில்லை என்று.

உண்மையில் நான் பழகிய பல நண்பர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அசோகமித்திரனை எடுத்துக் கொண்டால், புத்தகம் படிப்பது, கதை எழுதுவது, கட்டுரை எழுதுவது என்று பல ஆண்டுகளாக செய்து கொண்டு வருகிறார்.  ஞானக்கூத்தன் கவிதை எழுதுவது, புத்தகங்கள் படிப்பது, கவிதைகளைப் பற்றி சிந்திப்பது என்றுதான் இருப்பார்.  இப்படி எனக்குத் தெரிந்து பலர் அப்படித்தான் இருக்கிறார்கள்.  எனக்குத் தெரிந்து சாரு நிவேதிதா இந்த விஷயத்தில் இன்னும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

சினிமாக்காரர்களிடம் உள்ள ஒற்றுமை எழுத்தாளர்களிடம் இல்லை என்று தோன்றும்.  உண்மையில் சினிமாக்காரர்களை விட வலிமையானவர்கள் எழுத்தாளர்கள்தான்.  அவர்களிடம் ஒற்றுமை கிடையாது.  ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள மாட்டார்கள்.  பேச மாட்டார்கள்.   பேசவே மாட்டார்கள் என்கிற போது பாராட்டு மட்டும் செய்து கொண்டு விடுவார்களா.  நிச்சயமாக இருக்காது. பின் எழுதவதால் ஒரு பயனும் கிடையாது.  பத்திரிகையில் பிரசுரம் ஆகும் அல்லது ஆகாமல் போய்விடும்.  பணம் பெரிதாக கிடைக்காது.
புத்தகமாக வந்தாலும் விற்காது.   புதியதாக எழுதுபவர்களுக்கு பெரிய போராட்டமாக எழுத்து இருக்கும்.  இந்தத் தருணத்தில்தான் நான் தினமணியில் எழுதும் கலா ரசிகனை பாராட்டுகிறேன்.

விசாரணை என்ற சினிமா படக் கூட்டத்திற்கு பேச வந்த கௌதம சித்தார்தன் என்ற என் எழுத்தாள நண்பர், அங்கு திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு விட்டார்.  இலக்கியக் கூட்டத்தில் 20 பேர்கள்தான் வருவார்கள் என்று புலம்பவும் செய்தார்.  இலக்கியக் கூட்டங்களுக்கு கூட்டம் வருவதில்லை என்று கௌதம சித்தார்தன் கலங்கத் தேவையில்லை.  அங்கு வருபவர்கள் வேறு.  இலக்கியக் கூட்டத்தில் பேசுபவர் கௌதம சித்தார்தனாக இருந்தால், அவர் முன்னால் இருப்பவர்கள் எல்லோரும் கௌதம சித்தார்தான்களாக இருப்பார்கள்.  வராதவர்கள் கௌதம சித்தார்தன் என்ன பேசுவார் என்பதை தெரிந்து வைத்திருப்பார்கள். பொருட்படுத்த மாட்டார்கள்.       

மாலை 4 மணிக்கு மனைவியுடன் மடிப்பாக்கத்திற்குச் சென்று விட்டேன். பள்ளிக்கூட ஆண்டு விழாவில் என் பேத்தி நடனமாடுவதைப் பார்க்கச் சென்றோம். ஒரே தாங்க முடியாத கூட்டம். அந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பார்க்க முடியவில்லை.  ஏமாற்றத்துடன் வீடு திரும்பி விட்டோம்.  இரவு எட்டு மணிமேல் ஆகிசிட்டது. ஆனால் இன்றைய பொழுது ஏன் அவ்வளவு கடுமையாக இருக்கிறது.

கலா ரசிகன் என் புத்தகம் பற்றியும் என்னைப் பற்றியும் எழுதியதை உங்கள் பார்வைக்கு அளிக்க விரும்புகிறேன்.  

அவரை நான் சந்தித்ததில்லை. ஆனால், அவருடைய எழுத்துகளைப் படித்திருக்கிறேன். நான் அவரிடம் பேசியதில்லை. ஆனால், அவரது இலக்கியப் பங்களிப்புகள் பற்றி என்னுடைய நண்பர்களிடம் பலமுறை சிலாகித்துப் பேசியிருக்கிறேன். தமிழில் வெளிவரும் இலக்கியச் சிற்றேடுகளில் தரமானதும், தனித்துவம் வாய்ந்ததுமான இதழ் அழகியசிங்கரின் "நவீன விருட்சம்'. அதில் நான் எழுதியதில்லை. ஆனால், அதில் வெளிவரும் கட்டுரைகளை ஆர்வத்துடன் படித்திருக்கிறேன்.
1988-ஆம் ஆண்டிலிருந்து "நவீன விருட்சம்' இலக்கியச் சிற்றேட்டில் அழகியசிங்கர் எழுதிய சில கட்டுரைகளைத் தொகுத்து "நேர் பக்கம்' என்கிற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார், ஒரு தேசிய வங்கியில் 36 ஆண்டுகளாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கும் அழகியசிங்கர். ஏற்கெனவே இவரது "அழகியசிங்கர் கவிதைகள்', "வினோதமான பறவை' ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. சில கதைகள், 406 சதுர அடிகள், ராம் காலனி, ரோஜா நிறச் சட்டை என்று இவருடைய சிறுகதை,
குறுநாவல் தொகுதிகளும் வெளிவந்திருக்கின்றன.
"நேர் பக்கம்' தொகுப்பின் சிறப்பம்சம், பல்வேறு இலக்கிய ஆளுமைகள் குறித்த அழகியசிங்கரின் தனிப்பட்ட அனுபவங்களும் பதிவுகளும். எந்தவொரு மனிதரைக் குறித்தும் ஒவ்வொருவரின் பார்வையும் வெவ்வேறாகத்தான் இருக்கும். ஒவ்வொருவருக்கும், அந்த ஆளுமையைக் குறித்துச் சொல்ல, பதிவு செய்ய புதிதாக ஏதாவது செய்தி இருக்கும். அதனால், நான் மிகவும் ஆர்வத்துடன் இந்தப் புத்தகத்தைப் படித்ததில் வியப்பில்லை.
சி.சு.செல்லப்பா, க.நா.சு., நகுலன், அசோகமித்திரன், நீல பத்மநாபன், வைத்தீஸ்வரன், பிரமிள், வெங்கட் சாமிநாதன், ஸ்டெல்லா புரூஸ் இவர்களுடைய எழுத்தைத்தான் எனக்குத் தெரியுமே தவிர, அவர்களைத் தெரியாது. அவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பும் எனக்கு அமையவில்லை. அவர்களுடனான அழகியசிங்கரின் அனுபவங்களும், பதிவுகளும் எனக்குப் புதிய பல செய்திகளை, அவர்கள் குறித்த முன்பு அறியாத பார்வையை அறிமுகப்படுத்தின.
தொடர்ந்து "நவீன விருட்சம்' இதழையும், இப்போது "நேர் பக்கம்' புத்தகத்தையும் படிப்பதனால், அழகியசிங்கர் குறித்த எனது கருத்தையும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இவர் வங்கி வேலையில் தொடராமல், பத்திரிகை உலகில் நுழைந்திருந்தால் எட்டியிருக்கக்கூடிய உயரம் மிகமிக அதிகமாக இருக்கும். ஆழமான கருத்துகளும், இயல்பான எளிய நடையும் கவிஞர் அழகியசிங்கரை இனம் பிரித்துக் காட்டுகின்றன.
"நேர் பக்கம்' புத்தகத்தை இன்னொரு முறை படிப்பதற்காகத் தனியாக எடுத்து வைத்திருக்கிறேன்.

இன்றைய தினமணி நடுப்பக்கத்தில் கலாரசிகன் என்ற புனைபெயரில் ஆசிரியர் கே வைத்தியநாதன் வாராவாரம் எழுதும் பத்தியில் வந்திருப்பது தான் மேலே நீங்கள் வாசித்தது... அதன் இணைப்பைக் கீழே தந்துள்ளேன்...அதை க்ளிக் செய்தால் முழு பத்தியையும் வாசிக்க முடியும்.


Comments