Skip to main content

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் படங்கள்...

அழகியசிங்கர்



13வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் ஆறாம் தேதி ஜனவரி மாதம் துவங்கியது.  காலையில் 10.30 மணிக்கு ஒரு படமும், மாலை 6 மணிக்கு ஒரு படமும் பார்த்தேன்.  உட்லாண்ட்ஸ் தியேட்டரில் காலையில் எக்ஸிக் என்ற துருக்கி படம் பார்த்தேன்.  இதை இயக்கியவர் பாரிஸ் அட்லே.

நான் ஒரு பாமர ரசிகன்.  சினிமாப் படங்கள் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். உலகத் தரம் வாய்ந்த படங்களைப் பார்க்கும்போது, பாமரத் தனமான பார்வை சற்று விசாலமாகிறதாக தோன்றுகிறது.  

மேலேக் என்ற பெண்மணி கர்பமாக இருக்கிறாள்.  அவளுடைய கணவன் ஒரு புரட்சியாளன். இராணுவப் புரட்சியிலிருந்து அவன் தப்ப முடியவில்லை. மனைவியுடன் தரதரவென்று இழுத்துச் சென்று ராணுவத்தினரால் கொல்லப்படுகிறான்.  இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்த அவன் மனைவி குறைபாடுள்ள ஒரு குழந்தையைப் பெற்றுவிடுகிறாள்.  

இந்தக் குறையுள்ள பையனுடன் அவள் அவளுடைய மாமனார் வீட்டிலிருந்து துரத்தப் படுகிறாள்.  அவளுடைய மூத்தப் பையன்  டெனிஸ் அவளுடைய மாமனார் வீட்டில் வளர்கிறான்.  

மாமனார் வீட்டில் அவன் வளர்ந்த விதம் சரியில்லை.  30 வயது வரை அவன் அம்மாவைப் பார்க்கக் கூட செல்லவில்லை.  அவன்  எப்போதும் குடித்துக்கொண்டே இருக்கிறான். அல்லது சிகரெட் பிடித்துக்கொண்டே இருக்கிறான்.  அவன் காவல் காக்கும் இடத்தில் குடிக்கக் கூடாது என்பது விதி.

.  ஆனால் டெனிஸ் அதை மீறி அங்கேயும் குடித்துக்கொண்டிருக்கிறான். அவனால் குடிப்பதிலிருந்து விடுபட முடியவில்லை. அவனுடைய செய்கை அவனுடைய முதலாளிக்குத் தெரிந்து ஒருநாள் அவனைக் கண்டபடி திட்டி வேலையைவிட்டு துரத்தி விடுகிறான்.  அந்த வேலைக்கு சிபாரிசு செய்த நண்பனை சந்திக்கிறான் டெனிஸ்.  அவனிடம் அன்று இரண்டு பீர்தான் குடித்தேன் என்கிறான்.  நண்பனும் அவனைத் திட்டுகிறான்.  அவனுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது என்று போய் விடுகிறான்.

இங்கு ஒரு வார்த்தை சொல்லவேண்டும்.  இவர்கள் இங்கே திட்டிக்கொள்வது அசிங்கம் அசிங்கமாக திட்டிக்கொள்கிறார்கள்.  தமிழில் இப்படி திட்டுவதுபோல படம் எடுக்க முடியாது.

 பல ஆண்டுகளாகப் பார்க்க வராத அம்மாவைப் பார்க்க அம்மா வீட்டிற்கு வருகிறான் டெனிஸ்.  அம்மாவிற்கு அவனைப் பார்த்து சந்தோஷம்.  அவள் குறையுள்ள அவனுடைய சகோதரனை வளர்த்து வருகிறாள்.  அவன் வாய் பேசமுடியாமல் நாற்காலியிலே முடவனாக காட்சி அளிக்கிறான்.  எந்த உடல் உபாதைக்கும் அவன் பிறரை நம்பித்தான் இருக்க வேண்டும். கோர்வையாகப் பேசக் கூட முடியாது.  இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் யார் என்று தெரியவில்லை.  தத்ரூபமாக அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தம்பியை முதலில் பார்க்க வரும்போது டெனிஸிற்குப் பிடிக்கவில்லை. அவன் அம்மாவிற்கு உதவி செய்ய ஒரு பெண்ணும் அவன் சகோதரனை  ஆறுதல் படுத்த வருகிறாள்.  அவள் கணவனை இழந்தவள்.  டெனிஸ் அமமா வீட்டிற்கு வந்தாலும் குடிகாரனாக இருக்கிறான். எப்போதும் சிகரெட் பிடிப்பவனாகவும், குடிப்பவனாக தென்படுகிறான். அவனுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.   சகோதரனுடன் போராடும் அவன் அம்மாவைப் பார்த்து அவனுக்கு இரக்க உணர்ச்சி எல்லாம் உண்டாகவில்லை. எப்போதோ இறந்து போன அப்பாவையும் அம்மாவையும் வெறுப்பவனாக டெனிஸ் தென்படுகிறான்.

இந்தப் படத்தைப் பார்க்கும்போது இந்தப் படத்தில் இன்னும் என்ன இருக்கப் போகிறது என்றுதான் தோன்றும்.  டென்னீஸ் வீட்டிற்குள்ளே எப்போதும் சிகரெட் பிடித்துக்கொண்டும், குடித்துக் கொண்டும் இருப்பவனாகக் காட்சி படுத்தியிருக்கிறார்கள்.  அம்மா இருக்கும் வரை தம்பிக்கு உதவி செய்ய வர மாட்டான்.  அவன் ஒரு முரட்டுத்தனமான மனிதனாக இருக்கிறான்.

அவன் அபார்ட்மெண்டின் பக்கத்தில் வசிக்கும் ஒரு பெண் டென்னீûஸப் பார்த்தவுடன், வேகமாக அவள் வீட்டில் புகுந்து கொள்வாள்.  இதை இரண்டு மூன்று காட்சிகளில் காட்டியிருக்கிறார்கள். அவனைக் கண்டாலே அவளுக்குப் பிடிக்காது.  அவள் அம்மாவிற்கு உதவி செய்ய கணவனை சமீபத்தில் இழந்த விதவைப் பெண் வருகிறாள்.  அவள் மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.  அவள் அம்மா அவளுக்கு டெனீûஸ அறிமுகப்படுத்துகிறாள். டெனீஸிடம் அந்தப் பெண் தன் சோகத்தை வெளிப்படுத்துகிறாள்.  அவளுடன் பழகுவதை உரிமை எடுத்துக்கொண்டு அவள் அலுவலகத்திற்கே சென்று அவளுடன் தகாத உறவில் ஈடுபட விரும்புகிறான்.  எல்லா விஷயங்களிலும் அவன் முரட்டுத் தனமாக நடந்து கொள்கிறான்.   அவனுடைய தகாத செயலைத் தடுக்க நினைக்கிறாள்.  தன் வேலைக்கே உலை வைத்துவிடுவார்கள் என்று அவள் பயப்படுகிறாள். இந்த இடத்தில் அவள் அலுவலகத்தில் யாருமில்லை.  அவள் மட்டும்தான் இருக்கிறாள். வாடிக்கையாளர்களும் யாரும் தென்படவில்லை. 

டெனிûஸப் பார்த்தவுடன் வாழ்க்கையில் தொடர்ந்து  வாழ  விரும்பாமல் அவன் தாய் தற்கொலை செய்து கொள்கிறாள்.  தமிழ் படமாக இருந்தால் இதைப் பெரிய காட்சியாகக் காட்டி ஊரையே கூட்டி விடுவார்கள்.  இந்தப் படம் அவள் தாய் இறந்து விட, அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து விடுகிறது.  டெனிஸ் சகோதரனைப் பார்த்துக்கொள்ளும்படி நிர்பந்திக்கப் படுகிறான். பார்வையாளனுக்கே இந்தக் காட்சியைப் பார்க்கும்போது சரியில்லாத சகோதரன் நிலையை எண்ணி வருத்தம் ஏற்பட்டு விடும்.   

சகோதரனுக்காக எல்லாம் செய்தாலும் டெனிஸ்  ஒருவித முரட்டுத் தனத்தோடு செயல்படுகிறான்.  குடியைப் பற்றி அறியாத சகோதரனை குடிக்க வற்புறுத்துகிறான்.  ஒருமுறை அவன் அப்பா எழுதிய கடிதத்தை சகோதரனுக்காக சத்தமாக படிக்கிறான்.  அந்தச் சமயத்தில் சகோதர்கள் கண் கலங்குகிறார்கள். உண்மையில் அவனுடைய சகோதரனால் அம்மாவின் இழப்பை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  

அவன் சகோதரன் முடமாக இருந்தாலும் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்க மாட்டான்.  ஒரு இரவு டெனிஸ் சரியாக கவனிக்காமல் அந்த விதவைப் பெண்ணுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கிறான்.  அப்போது அவன் சகோதரன் இயற்கை உபாதையால் அவதிப்பட்டு பெரிதாக அழுது சத்தம் போடுகிறான். டெனிஸ் வெறுப்புடன் வந்து தம்பியைப் பார்த்துக் கத்துகிறான்.  அவன் தம்பியோ அழுகையை நிறுத்தாமல் பெரிதாக சத்தம் போட்டபடி இருக்கிறான்.  அவனை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல், டெனிஸ் தன் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு தம்பியைப் பார்த்து அழுகையை நிறுத்தும்படி கத்துகிறான்.  வெறுப்படைந்து டெனிஸ் உடன் இருந்த விதவைப் பெண் அந்த இடத்தை விட்டு ஓடிப் போய்விடுகிறாள்.

இந்தத் தருணத்தில் எனக்கு படம் பார்க்கும்போது திக்கு திக்கு என்றிருந்தது.   இனிமேல் தம்பியை டெனிஸ் என்ன செய்வான் என்ற திக்குதான்.  ஒருமுறை தனக்கு வேலை கிடைத்து விட்டதாக தம்பியிடம் சொல்லிவிட்டு சந்தோஷத்துடன் குடித்துக்கொண்டே பேசிக்கொண்டே இருக்கிறான்.  தம்பியும் அவன் மகிழ்ச்சியில் பகிர்ந்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறான்.  குடி வேகம் அதிகமாக டெனிஸ் கீழே விழுந்து விடுகிறான். எழுந்து கொள்ளவே இல்லை.  அந்தக் காட்சியைப் பார்க்கும்போது பார்வையாளனாக இருக்கும் எனக்கு திகைப்பாகவே இருந்தது.

அவன் எழுந்திருக்காததைப் பார்த்து தம்பி பயங்கரமாக கத்தி ஆர்பாட்டம் செய்கிறான்.  உதவிக்கு யாரும் வரவில்லை..  பின் கண்ணாடி ஜன்னலை ஓங்கி ஓங்கி தலையால் முடட்டி உடைக்கிறான்.  அந்தத் தலை முட்டலில் அவன் தலை உடைந்துவிடுகிறது. 

பக்கத்தில் குடி இருக்கும் பெண் மெதுவாக  இதைக் கவனித்து ஏதோ விபரீதம்ஆகி விட்டதாக எண்ணி மருத்துவமனைக்கு போன் செய்கிறாள்.  மருத்துவ மனையிலிருந்து வந்தவர்கள் அவர்கள் இருவரையும் எடுத்துச் சென்று விடுகிறார்கள்.

இந்தத் தருணத்தில் அவர்கள் இருவருக்கும் என்ன ஆயிற்று என்ற துடிப்பு பார்வையாளருக்கு ஏற்படுகிறது. ஆனால் அடுத்த நிமிடமே டெனிஸ் தலையில் கட்டுடன் தெருவில் நடந்து வருகிறான்.  டெனிஸிற்கு ஒன்றும் ஆகவில்லை என்ற ஆறுதல் நமக்கு ஏற்பட்டாலும், அவன் தம்பியின் மரணத்தை வெளிப்படுத்தியபடி இந்தப் படம் முடிகிறது.  தலையால் முட்டி மோதி ஜன்னலின் கண்ணாடிக் கதவை உடைத்த இடத்தில் சுவரில் ரத்தம் ஆறாய் உரைந்து கிடக்கும்.  டெனிஸ் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதாக அந்தக் காட்சி முடியும். 

குடியால் ஒருவன் எல்லாவற்றையும் இழந்து நாசமாகப் போவதைக் இப் படம் காட்டுகிறதா?  பல சமயம் தெருவில் டெனிஸ் நடந்து சென்று கொண்டிருப்பான்.  அதில் ஒருவித வெறுமை வெளிப்படும்.   அப்படி அவன் செல்வது யாரையும் பார்ப்பதற்கு அல்ல.  பெரும்பாலும் குடிப்பதற்குத்தான் அவன் செல்வான்.  குடியைப் பற்றி இப் படம் இருந்தாலும், பிரச்சாரமாக இந்தப் படம் இல்லாமல், கலாபூர்வமாக படம் எடுக்கப் பட்டிருக்கிறது.  

Comments