Skip to main content

மறதியின் பயன்கள்

 
 ஞானக்கூத்தன்
 
 
 பல ஆண்கள் தங்கள் திருமண நாளை இக்காலத்தில் கொண்டாடுகிறார்கள். கொண்டாடுவது என்றால் மனைவிக்குப் புதிய புடவை வாங்கித் தருவது, முடிந்தால் கால் பவுன் அரைப் பவுனில் தங்க நகை வாங்கித் தருவது, காலையில் கோவிலுக்குப் போவது, இல்லையென்றால் மாலையில் போவது. இவற்றில் எது சாத்தியப்படுகிறதோ இல்லையோ, இரவு உணவை ஹோட்டலில் வைத்துக்கொள்வது. இப்படித் திருமண நாள் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் திருமண நாளைப் பெண்கள்தான் நினைவில் வைத்திருப்பார்கள். ஆண்கள் முற்றிலும் மறந்துபோய்விடுவார்கள். அப்படியே நினைவிருந்தாலும் தேதியும், மாதமும் நினைவில் இருக்குமே தவிர கல்யாணமான வருஷம் நினைவில் இராது. எத்தனையாவது வருஷம் என்று தெரியவந்தால் அவர்களுக்கு அதிசயமாகவும் அதிர்ச்சியாகவும்கூட இருக்கும்.
 
 பாரதியாரால் தனது கல்யாணத் தேதி, வருஷம் முதலானவற்றைச் சரியாக நினைவுபடுத்திக்கொள்ள முடிந்ததா என்றால் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. பாரதியின் வரலாற்றை எழுதிய வ. ராமஸ்வாமியால் பாரதியின் திருமணத்தைப் பற்றி, அவருக்கு என்ன வயது இருக்கும் என்பது பற்றி எதுவும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
 
 கல்யாணத்துக்கு முன்பு 11ம் வயதில் பாரதி என்ற விருதைப் பாரதியார் பெறுகிறார். பல புலவர்கள் சொன்ன அடிகளை வைத்துக்கொண்டு அவர் பாடிய திறமையை அங்கீகரித்து இவ்விருது அவருக்குத் தரப்பட்டதாம். ஆனால் இவ்விருதுக்குக் காரணமான எந்தப் பாட்டும் கிடைக்கவில்லை. காலம் கடந்து நிற்கவில்லை. 7ம் வயதிலேயே கவிகளைக் கவனம் செய்தவர் என்கிறார் அவரது பால்யகால நண்பர் சோமசுந்தர பாரதியார். 7 வயதில் பாடகர்கள் கிடைப்பார்கள். ஆனால் புலவர்கள் கிடைக்க மாட்டார்கள். பாரதி காந்திமதி நாதன் என்பவரைக் கேலிசெய்த வெண்பா அவர் உயர்நிலைப் பள்ளியில் மாணவராக இருந்தபோது பாடியதாம். இந்த வயது கவி புனையும் வயதுதான். ஆனால் பாரதியின் இளம் பருவத்துக் கவிதைகள் பல நிற்கவில்லை. 7ம் வயதில் பாரதி அருட்கவி பொழிந்தார் என்று விகடன் பதிப்பு கூறுகிறது. ‘காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப் பயல்’ என்ற சமத்காரப் பாடல் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளது. பாரதி 7ம் வயதில் கவி புனைந்தாரென்றால் அவருக்குக் கல்யாணம் நடக்கும் முன் எத்தனைக் கவிகள் புனைந்திருக்க வேண்டும்? அப்படிப் புனைந்திருந்தால் அவற்றில் ஒன்றிரண்டாவது நிலை பெற்றிருக்க வேண்டுமே! ஆனால் ஒரே ஒரு பாட்டு நிற்கிறது. அது அவர் தனது கல்யாணத்தின்போது புதிய மனைவியைப் பார்த்துப் பாடியது. அவருடைய மனைவிக்கு அப்போது வயது 7. உணவை ‘மம்மு’ என்றும், பருப்பைப் ‘பப்பு’ என்றும் சொல்கிற வயது. அவரைப் பார்த்துப் பாரதி பாடினாராம். எப்படி?
 
 தேடக் கிடைக்காத சொன்னமே – உயிர்ச்
 சித்திரமே மட அன்னமே
 கட்டி அணைத்தொரு முத்தமே – தந்தால்
 கை தொடுவேன் உனை நித்தமே.
 
 பாரதி இப்படி எல்லோர் எதிரிலும் பாடினாராம். பதினான்கு வயதில் இப்படிப் பாட முடியுமா? முடியும். பாரதி சிற்றிலக்கியம் வியாபகமான ஜமீன்தார் இல்லத்துச் சூழலில் துரதிர்ஷ்டவசமாகத் தனது திறமைக்குத் தீனி போட்டிருக்கிறார். பாடத்தான் முடியுமே தவிர உள்ளடக்கம் அவருடையதல்ல. உ.வே. சாமிநாத அய்யர் தான் செய்யுள் இயற்றியதைப் பற்றி எழுதியிருப்பதை இலக்கிய வாசகர்கள் இங்கே நினைவுகூரலாம். திருமணத்துக்கு முன்பே பெண்ணைப் பற்றிய, சம்போகத்தைப் பற்றிய அறிவு இப்பாடலில் வெளிப்படுகிறது. வைதிகக் கல்யாணத்தில் சிறுவர்-சிறுமியரான மணமக்கள் விளையாடும் சமயமான நலங்கில் இது நிகழ்ந்திருக்கலாம். ஆனால் இந்தப் பாட்டை இயற்றியவர் யார்? இந்தக் கல்யாணம் தனது பன்னிரண்டாம் வயதில் நடந்ததாகப் பாரதி சொல்கிறார்.
 
 ஈங்கொர் கன்னியைப் பன்னிரண்டு ஆண்டனுள்
 எந்தை வந்து மணம் புரிவித்தனன்
 என்கிறது பாரதியின் செய்யுள்.
 பன்னிரண்டு ஆட்டை இளைஞனுக்கு
 என்னை வேண்டும் இடர்க்குறு சூழ்ச்சிதான்
 
 என்று இரண்டாம் முறையாகக் கல்யாணத்தின்போது தனது வயது பன்னிரண்டு என்கிறார் பாரதி. ஆனால் சோமசுந்தர பாரதியாரோ பாரதியாருக்கு அப்போது வயது 14 முடிந்து ஆறு மாதம் என்கிறார். 1897ம் வருடம் ஜூன் மாதம் பாரதியின் கல்யாணம் நடந்தது என்கிறார் சோ.சு. பாரதியார். அவர் தனது கையில் பாரதியின் கல்யாணப் பத்திரிகையே உள்ளது போல் பேசுகிறார். ஏனெனில் எட்டயபுரத்தில் பாரதியாருக்குப் பக்கத்துவீட்டுக்காரராக வளர்ந்தவர் சோ.சு. பாரதியார். இதைக் கி.ஆ.பெ. விசுவநாதம் குறிப்பிட்டிருக்கிறார் (தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டு மலர் 1947). எந்தப் பாரதியார் சொல்வது சரி? பாரதியின் கல்யாணம் 1892ல் நடந்ததா அல்லது 1897ல் நடந்ததா? தன்னுடைய கல்யாணம் தனக்கொரு சோகம் என்ற குரலில் பாரதி செய்யுள் செய்கிறார். சோமசுந்தர பாரதியோ சுப்பிரமணிய பாரதி கல்யாணத்தின்போது உற்சாகமாக இருந்தார் என்கிறார். எது சரி?
 
 சமீப காலத்தில் தனது கல்யாணத் தேதி பற்றிய உறுதியற்ற நிலையைக் கூறியவர் சுந்தர ராமசாமி. ‘என் மூளை பற்றிச் சில தகவல்கள்’ என்ற கட்டுரை அமுதசுரபி நவம்பர் 2004 இதழில் வெளிவந்துள்ளது. அதில் அவர் எழுதியிருக்கிறார்:
 
 “எனது மூத்த மகனின் திருமண நாளோ அல்லது மாதமோ மட்டுமல்ல, வருடத்தைக்கூட நினைவுகூர எனக்குச் சிறிது தடுமாற்றம்தான். ஒரு முக்கியமான அலுவலகத்தில் என்னுடைய திருமண நாளைச் சரிவரத் தெரியாது போனதால் உத்தேசமாக எனது எழுபதாவது வயதில் நான் என் மனைவியை மீண்டும் திருமணம் செய்துகொண்டு அதற்குரிய தஸ்தாவேஜுகளைச் சமர்ப்பிக்க நேர்ந்தது.”
 
 இந்தக் கட்டுரை வெளியானது 2004ம் ஆண்டு நவம்பரில். அப்போது சுந்தர ராமசாமிக்கு வயது 73. அவர் குறிப்பிட்ட தஸ்தாவேஜ் திருமணம் நடந்தது வெறும் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான். அதாவது அவருக்கு 70ஆக இருக்கும்போது. மூன்று ஆண்டுகளுக்குள் மறந்துவிட முடியுமா சில தகவல்களை? பெரும்பாலான தந்தைகள் தங்கள் மகன், மகள் திருமண வருஷம், மாதம், தேதி விவரங்களை மறந்துவிடுகிறார்கள். என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். கிருஷ்ணன் நம்பி என்ற எழுத்தாளர் – இவர் சு.ரா.வுக்கு மிக நெருங்கிய நண்பர் – இறந்த நாளன்று அங்கு (அந்த வீட்டில்…) சுந்தர ராமசாமி இருந்தார் என்கிறார் வெங்கடாசலம். ஆனால் சுந்தர ராமசாமியோ ‘என் நினைவில் அது தெளிவாக இல்லை’ என்கிறார். இந்தக் கட்டுரைக்குப் பீடிகையாக ‘மனித மனம் சிக்கலானது’ என்றும் சொல்லியிருக்கிறார் சுந்தர ராமசாமி. மறுக்க முடியுமா?

Comments