Skip to main content

புத்தக விமர்சனம் 8


அழகியசிங்கர்
 

இமையம் அவர்களின் 'எங்கதெ' என்ற புத்தகத்தைப் படித்து முடித்தேன்.  110 பக்கங்களில் எழுதப்பட்ட நாவல் இது.  சமீபத்தில் தமிழ் இந்து மடடுமல்லாமல் இன்னும் பல பத்திரிகைகளில் இந்த நாவலைப் பற்றி பலர் எழுதி உள்ளார்கள்.  தமிழ் இந்துவில் பெரிய அளவில் இந்தப் புத்தகத்தைப் பற்றி இரண்டு பேர்கள் விமர்சனம் செய்திருந்தார்கள்.  அதேபோல் தீராநதியிலும், அமிருதாவிலும் இப் புத்தகம் பற்றி விமர்சனம் வெளியிட்டிருந்தார்கள்.  மேலும் இப் புத்தகத்தைப் பற்றி ஒரு கூட்டம் நடந்தது.  

ஒருவிதத்தில் இப்படி இப் புத்தகத்தைப் பற்றி பேசுவது சரியானது என்று தோன்றுகிறது.  உண்மையில் நடுப்பக்கத்தில் ஒரு புத்தகம் பற்றி இப்படி விமர்சனம் வருவது நல்ல விஷயமாக எனக்குப் படுகிறது. ஒரு தமிழ் இந்து இல்லை, நூறு தமிழ் இந்துக்கள் உருவாக வேண்டும்.  நடுப்பக்கத்தில் கண்டுகொள்ளமால் விடப் படுகிற பல புத்தகங்களை எல்லோரும் எழுத வேண்டும்.  சினிமா படங்களுக்கு, சினிமா நடிகர், நடிகைக்குக் கிடைக்கிற முக்கியத்துவம் எழுத்தாளர்களுக்குக் கிடைக்க வேண்டும்.  இதெல்லாம் சொல்லலாம். ஆனால் நடக்காது. ஏனென்றால் புத்தகம் படிப்பவர் குறைவு.  சினிமா பார்ப்பவர்கள் அதிகம். 

இமையம் இதுவரை 4 நாவல்கள், 4 சிறுகதைகள் கொண்டு வந்துள்ளார்.  இதைத் தவிர தொடர்ந்து எழுதிக்கொண்டே வருகிறார்.   அவருடைய எல்லாப் புத்தகங்களையும் க்ரியாதான் வெளியிட்டுள்ளன.  இமையத்தின் முதல் நாவல் கோவேறு கழுதைகள் என்ற நாவல். வெளிவந்த ஆண்டு 1994. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 2001ல் வெளிவந்துள்ளது.  இது குறிப்பிடப்பட வேண்டிய படைப்பு.  

இமையத்திற்கு இதுவரை சாகித்திய அக்காதெமியின் பரிசு கிடைக்கவில்லை.  அவருக்கு அந்தப் பரிசு கிடைக்க நான் பரிந்துரை செய்கிறேன்.

மே 2015ல் வெளிவந்த அவருடைய எங்கதெ பலருடைய கவனத்தைக் கவர்ந்துள்ளது.  ஒரு விதத்தில் இப் புத்தகம் பற்றி விமர்சனம் செய்யும்போது அவருடைய நாவலின் முழுக் கதையையும் எல்லோரும் எழுதி விட்டார்கள்.  ஒரு புத்தகத்தைப் பற்றி குறிப்பாக நாவலைப் பற்றி எழுதும்போது, முழுக் கதையும் எல்லோரும் எழுதும்படி நேரிடுகிறது.  முழுக்கதையும் சொல்லாமல் ஒரு நாவலை விமர்சனம் செய்வது முடியாத காரியமாக எனக்குத் தோன்றுகிறது.  மேலும் புத்தக விமர்சனத்தை மட்டும் படிப்பவர்கள், அதுதான் நாவலைப் பற்றி எழுதியதைப் படித்தாயிற்றே என்று நாவலை வாங்கிப் படிக்காமல் விட்டுவிடுவார்கள் என்ற எண்ணமும் தோன்றியது.  

எங்கதெ என்ற நாவல் கள்ள தொடர்பைப் பற்றி பேசுகிற நாவல்.   தன்னைப் பற்றி பேசுகிற மாதிரி இந் நாவல் ஆரம்பமாகிறது.  அதில் கமலா என்கிற பெண் வருகிறாள்.  பத்து வருடம் அவளுடன் வாழ்ந்த வாழ்வைப் பற்றிய கதைதான் இந்த நாவல்.  இமையம் இதைப் பேசுகிறமாதிரி எழுதிக் கொண்டு போகிறார்.  முப்பத்தி மூணு வயதாகிறவனுக்கு கமலா என்கிற இருபத்தெட்டு வயதாகிற விதவையுடன் ஏற்படுகிற கள்ளத் தொடர்புதான் கதை.  ஏற்கனவே விதவையான கமலாவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.

பத்து வருடத் தொடர்பில், தன்னைப் பற்றிய நினைவு இல்லாதவன் கதை.   இக் கதையைச் சொல்றவன், படித்திருந்தும் வேலைக்குப் போகாதவன், வெட்டியாய் சுத்தறவன்.  வீட்டில் கல்யாணம் செய்துகொள்ள வற்புறுத்தினாலும், கல்யாணம் எதுவும் செய்ய விருப்பமில்லாமல் கமலாவை  சுற்றி சுற்றி வருகிறான்.

கமலா இளம் வயசுக்காரி.  புருஷன் இல்லாதவள்.  இரண்டு பொட்டைப் பசங்களுடன் வசிக்க வருகிறாள்.  அவள் புருஷன் அடிப்பட்டு இறந்ததால, கருணை அடிப்படையில் டிகிரி படிச்சதால அவளுக்கு கிளார்க்கு வேலை அரசாங்கப் பள்ளிக்கூடம் ஒன்றில் கிடைக்கிறது.  

அவள் அழகைப் பார்த்து, எல்லோரும் அவளுக்கு சலுகைத் தருகிறார்கள்.  சிதம்பரம் புள்ளையோட வீட்டுல தங்கறதுக்கு இடம் கொடுக்கிறார்.  அவ கொடுக்கிற வாடகையை வாங்கிக்கிறார். பேரம் பேசவில்லை.  அவ வந்து இரண்டு நாள்ல ஊருக்குத் தெரிஞ்ச ஆளா, ஊரே பேசற ஆளா மாறி விடுகிறாள்.  

இந் நாவல் கமலாவைச் சுற்றி இருந்தாலும், கமலாவே தானே பேசற மாதிரி கதை இல்லை.  பொதுவா பார்க்கப் போனால், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டாகிற கூடா ஒழுக்கம் பற்றிய கதைதான் இது.

இருவரும் விரும்பித்தான் இதை ஏற்றுக் கொள்கிறார்கள்.  கமலாவைப் பற்றி கதையை கதா நாயகன் சொல்லும்போது, நல்ல பாம்பு மாதிரி சரசரவென்று வந்தாள் என்று விவரிக்கிறான்.  அப்போதே கமலாவைப்பற்றிய விபரம் வெளிவரத் தொடங்கி விடுகிறது.  

அவளுடன் பழகும்போது மகுடி முன்னால் பாம்பு மயங்குவதுபோல இவன் மயங்கி விடுகிறான்.  அவள் சொல்றதையெல்லாம் கேட்கிறான்.  நில்லுன்னா நிக்கறான்.  உட்காருன்னா  உட்காறான்.  அவளோட வீட்டிலேயே பெரும்பாலும் இருக்கான்.  இது இவன் குடும்பத்துக்கு எரிச்சலாக இருக்கிறது.  ஒரு கல்யாணம் கூட பண்ணாம இருக்கானே என்று அவன் அப்பா அம்மா வருத்தப்படறாங்க.  அவன் தங்கைகள் எல்லாம் எவ்வளவு எடுததுச் சொன்னாலும் அவன் கேட்கறதில்லை.  வேலைக்குப் போவதில்லை.  இப்படி ஒரு வெட்டியா சுத்தறவன் கதைதான் இது.

கமலாவுக்கு இரண்டு பெட்டை குழந்தைகள் இருக்குன்னு தெரிஞ்சும், அவளையே சுத்தி சுத்தி வர்றான்.  ஒரு பார்வையில, ஒரு சிரிப்பில அவனை ஒரு நாய் குட்டியா மாத்தி விடறா.  அந்த ஊர்ல இருக்கும்போது, கமலாவை வேற யாரும் நெருங்கலை.  ஏன்னா அவன்தான் எல்லாம்.  அவன் அவளை கல்யாணம் செய்துக்கணும்னு நினைக்கலை.  அவளுக்கும் தோணலை.  இந்தக் கூடா நட்பில், அவ வீட்டுக்கு அவளுடைய பெற்றோர்கள், மாமனார் மாமியார் வரும்போதெல்லாம் அவன் இருக்க மாட்டான்.  

கமலா அந்த ஊரிலிருந்து வேற ஊருக்குப் போகும்போது பெரிய மாற்றம் ஏற்படுகிறது.  கமலாவுக்கு பதவி உயர்வு கிடைக்கிறது.  அவள் கடலூர் மாற்றப்படுகிறாள்.  இவன்தான் அவளை அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தகிறான்.  

இங்குதான் பிரச்சினை ஏற்படுகிறது.  ஒரு பெரிய ஆபிஸில் வேலை பார்க்கும்போது, அவளுக்கு பல பேருடன் தொடர்பு ஏற்படுகிறது.   சி இ ஓன்னு ஒருத்தன் கமலா வாழ்வில் நுழைகிறான்.  இன்னும் இரண்டு மூன்று வருஷத்துல ரிட்டையர்ட் ஆகப் போகிறவனுக்கு கமலா மீது மோகம்.  கமலா வீட்டுக்கு வந்து அவன் அவ்வளவு வசதியும் செய்து கொடுக்கிறான்.  அவன் அவளுக்கு மேல் உள்ள அதிகாரி. 

இக்கதையில் கூடா ஒழுக்கம்  ஷிப்ட் ஆகிறது.  இதை கமலா அவனிடம் மறைக்கிறாள்.  அவனுக்குத் தெரிந்தவுடன்,  அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  அவனுக்கு இந்த சி இ ஓ வர்றது பிடிக்கலை.  அவ முன்னாடி ஒரு கட்டத்தில சி இ ஓ அவனை அலட்சியப் படுத்துகிறான்.

கமலா எப்போதும் போல் இருக்கிறாள்.  அவனும், சி இ ஒவும் அவளைப் பொறுத்தவரை ஒன்றுதான்.  பள்ளிக்கூடம் படித்த அவள் பசங்க கல்லூரிக்குப் போகிறார்கள்.  அம்மாவை அவர்கள் அப்படியேதான் பார்க்கிறார்கள். அம்மாவுடைய நடத்தையைத் தெரிந்து கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. சி இ ஓ குடும்பத்தினர்கள் அவள் வீட்டுக்கு வந்து அவமானம் செய்தும், அதையெல்லாம் அவள் பொருட்படுத்தவில்லை.  வீட்டை மட்டும் மாற்றிக் கொள்கிறாள்.  அவளைப் பொறுத்தவரை அவளை விரும்புகிற ஆண்களை ஏற்றுக்கொள்கிறாள்.

தமிழில் கூடா ஒழுக்கம் பற்றிய கதை இதுதான் என்பதில்லை.  ஏற்கனவே பலர் எழுதி விட்டார்கள்.  ஜானகிராமனின் பெரும்பாலான கதைகள் கூடா ஒழுக்கம் பற்றியதுதான்.  நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், நாவல்கள் பெரும்பாலும் காந்தியுகத்தைப் பற்றி வெளிவந்து கொண்டிருந்தன.  சி சு செல்லப்பா, ந. சிதம்பர சுப்பிரமணியன் போன்றவர்கள் காந்தியுக நாவல்களை எழுதி இருக்கிறார்கள்.  அதன்பின் உன்னதமான கதாபாத்திரங்களைக் கொண்ட நாவல்களும் தமிழில் வெளிவந்திருக்கின்றன. கல்கி, நா பார்த்தசாரதி போன்றவர்களின் பங்கு இதில் முக்கியமானது.  அரசியல் ஒழுக்கமின்மையைப் பற்றிய நாவலை இந்திரா பார்த்தசாரதி எழுதி உள்ளார்.  நடுத்தர வர்க்க மாந்தர்களைப் பற்றியும், விளிம்பு நிலை மாந்தர்களைப் பற்றியும் நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. 

கூடா ஒழுக்கம் பற்றிய இந்த நாவலில் கதை சொல்றவனுக்கு (அவன் பெயர் இதில் சொல்லப்பட வில்லை), பத்து வருஷம் ஏற்படுத்திய பாதிப்பை விட்டு அவ்வளவு சுலபமாக வெளிவர முடியவில்லை.  அந்த வலியைத் தாங்க முடியவில்லை.  இறுதியில் கமலாவை கொலை செய்யவே முடிவு செய்கிறான். 

அவள் வீட்டிற்கு வந்து எப்போதும்போல் பழகுகிறான்.  அவள் கழுத்தை நெரித்து கொலை செய்ய நினைக்கும்போது, அவன் மனம் மாறி விடுகிறது.  அந்தப் பெண் பிள்ளைகள் அவள் இல்லை என்றால் அனாதை ஆகிவிடும் என்ற நினைப்பு வருகிறது.  பத்து வருடம் அவளுடன் இருந்தாகி விட்டது.  அதுவே போதும்,  அவள் அந்தப் பெண் பிள்ளைகளுக்காக இருக்க வேண்டும் என்று நினைத்து 

üüநீ யார் கூட வேணுமின்னாலும் இரு.  எப்பிடின்னாலும் இரு.  ஆனா உசுரோட இரு.  இதான் என் ஆச,ýý என்று ரகசியமா அவள் காதுல சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுப் போய்விடுகிறான்.  ஆனா அப்படி சொலலிவிட்டு வருவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை.  இமையம் இந்த நாவலை சிறப்பாக இப்படி முடித்து இருக்கிறார்.

எங்கதெ - நாவல் - இமையம் - பக்கம் : 110 - வெளியீடு : 
             Cre-A, New No.2, Old No.25, 17th East Street, Kamarajar Nagar,
             Thiruvanmiyur, Chennai 600 041, Phone  : 72999 05950
  
 

Comments