Skip to main content

கலந்துகொண்ட மே மாத இலக்கியக் கூட்டங்கள்



அழகியசிங்கர்
                                                                                    1. 

சமீபத்தில் நான் கலந்துகொண்ட இலக்கியக் கூட்டங்களைப் பற்றி என் நினைவில் என்ன எழுத முடியுமென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  

ஒவ்வொரு மாதமும் கணையாழி நடத்தும் ஒரு கூட்டத்தில் இந்த மாதம் 16.05.2015 சனிக்கிழமை அன்று நானும் பிரமிள் பற்றி பேசியிருக்கிறேன்.  அந்தக் கூட்டத்தில் அமிர்தம் சூர்யா ஒரு சிறப்பான பேச்சை வழங்கி உள்ளார்.  நான் அந்தக் கூட்டத்திற்கு தயாராகும்போது, எழுதி கட்டுரையாக வாசிக்க நினைத்தேன்.  அதன்படி கட்டுரை ஒன்றையும் பத்து அல்லது பதினைந்து பக்ககங்களுக்குள் தயாரித்துக் கொண்டேன்.  ஆனாலும் பிரமிள் பற்றி எழுதிப் படிக்க வேண்டாம் என்ற எண்ணம் தோன்றியது.  அதனால் மனதிலிருந்து பேச தீர்மானித்திருந்தேன்.  எதைப் பற்றி பேச வேண்டுமென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.  அவர் படைப்புகளைப் பற்றி பேச வேண்டும் என்றால் இன்னும் நன்றாகத் தயாரிக்க வேண்டுமென்று நினைத்தேன்.  

எழுத்து காலத்தில் அவர் எழுதிய கவிதைகள் எல்லாம் ஆன்மிகம் சம்பந்தப்பட்டது என்று ஒரு இடத்தில் பிரமிள் குறிப்பிடுகிறார்.  ஆனால் அவர் கவிதைகளை படிம நிலையில் ஒரு நிதான வாசிப்பில் வாசகர்களை ஆழ்த்துகிறார் என்று தோன்றியது. மேலும் அவர் எழுத்து காலத்தில் ஒரு விதமாகவும், அதன் பின் வேறு விதமாகவும் கவிதைத் தன்மையை மாற்றிக் கொண்டு விட்டார் என்று பட்டது.    நான் பிரமிளுடன் என் நட்பைப் பற்றி பேசினேன்.  பொதுவாக எழுத்து மீது உள்ள அபிமானத்தில் பல எழுத்தாளர்களுடன் எனக்கு நட்பு உண்டு.  பிரமிளும் அவர்களில் ஒருவர்.  அவருக்கு ஏற்பட்ட மரணம் என்னை ரொம்பவும் சங்கடப் படுத்தியது.  அவருடைய தீவிரமான மனப் போக்கு  என்னை ஆச்சரியப்படுத்தத் தவறவில்லை.  நான் பிரமிளைப் பற்றி நன்றாகப் பேசியதாக அமிர்தம் சூர்யா அவர் பேச்சில் குறிப்பிட்டவுடன் நிம்மதி அடைந்தேன்.  

அடுத்துப் பேசிய அமிர்தம் சூர்யா, பேசுவதில் கலையைக் கற்றவர் மாதிரி தென்பட்டார்.  எங்கே நிறுத்த வேண்டுமோ அங்கே நிறுத்துகிறார், எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசினார்.  மே மாதத்தில் வெளிவந்த கணையாழியின் சிறந்த கதையையும், கவிதையையும் அவர்தான் தேர்ந்தெடுத்தார்.  இணையத்தின் முன்பும்,பின்பும் என்ற தலைப்பில் அவர் சொல்வதை அலசி இருந்தார். 

எப்போதும் எழுத்து பிரசுரம் ஆவது என்பது இணையத்திற்கு முன்பு பிரச்சினைக்குரிய ஒன்றாக இருந்துள்ளது.  நகுலன் ஒரு நோட்டுப் புத்தகம் வைத்துக்கொண்டு தோன்றுவதை எழுதிக்கொண்டே போவார்.  பின் அவற்றை தேவையான பத்திரிகைகளுக்கு அனுப்புவார்.  பத்திரிகை ஆசிரியருக்கு கடிதம் அனுப்பும் போது, பிடிக்காவிட்டால் பிரசுரம் செய்ய வேண்டாம் என்று எழுதி அனுப்புவார்.   அமிர்தம் சூர்யா அவர் எழுத்துக்களை எந்தந்தப் பத்திரிகைகள் எப்படியெல்லாம்  பிரசுரம் செய்யும் என்ற நுணுக்கத்தை அறிந்து வைத்திருந்தார். சவ ஊர்வலம் என்ற கவிதையை விருட்சம் பத்திரிகைக்கு அனுப்பியதாகவும், அதை பிரச்சார நெடி உள்ள கவிதை என்று நான் நிராகரித்ததையும் குறிப்பிட்டிருந்தார். எனக்க உண்மையில் ஞாபகம் இல்லை. 

அமிர்தம் சூர்யா, ப்ரியம், தமிழ் மணவாளன் கவிதைகளை நான் விருப்பத்துடன் விருட்சத்தில் பிரசுரம் செய்திருக்கிறேன்.  இதெல்லாம் முன்பு.  இது இணையதளம் காலம். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் இணையம் மூலம் பிரசுரம் செய்து கொள்ளலாம்.  எல்லோருக்கும் ஒருவித சுதந்திரம் வந்து விட்டது.  உண்மைதான்.  ஆனால் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.  ஊடகம் மூலம் அபத்தங்கள் அதிகமாகப் பெருகத் தொடங்கி விட்டன.  கூட்டத்தை சிறப்பான முறையில் கணையாழி ஆசிரியர் ம ரா நெறிப்படுத்தினார். வாழ்த்துகள்.

கணையாழி கூட்டத்திலிருந்து நான் அடுத்தக் கூட்டத்திற்கு வந்து விட்டேன்.  பேசுபவனாக இருப்பதைவிட பார்வையாளனாக இருப்பது சால சிறந்தது.  இக் கூட்டம் கிருஷ்ணகான சபாவில் 22ஆம் தேதி அன்று மே மாதம் நடந்த கூட்டம்.  இதை சுப்பு என்பவர் நடத்துகிறார் என்று நினைக்கிறேன்

.  தமிழ் அறிஞர்களைப் பற்றிய கூட்டம் இது. 14வது கூட்டம் என்று நினைக்கிறேன்.   இக் கூட்டத்திற்கு வ.வே.சுப்பிரமணியனும், ஆர் வெங்கடேஷ் அவர்களும் கலந்துகொண்ட கூட்டம்.  அவர்கள் தேர்ந்தெடுத்த தமிழ் அறிஞர் ராஜாஜி.  நான் ராஜாஜியை அரசியல் ராஜ தந்திரியாகத்தான் அறிந்திருக்கிறேன்.  பெரியாரும் ராஜாஜியும் வேறு வேறு கருத்துக்கள் கொண்டிருந்தாலும், நெருங்கிய  நண்பர்கள்.  எளிமையான மனிதர் ராஜாஜி.

  அவருடைய மகாபாரதத்தையும், இராமயணத்தையும் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.  முதன் முதலாக அந்தப் புத்தகங்கள் அச்சில் வெளிவந்தபோது ஒரு லட்சம் பிரதிகள் விற்றதாக சொல்வார்கள்.  வவேசுவும், வெங்கடேஷ÷ம் ஒருவரை ஒருவர் ராஜாஜியைப் பற்றி பேசிக்கொண்டே போனார்கள்.  இது புதுமாதிரியாக இருந்தது.  திக்கற்ற பார்வதி என்ற நாவல் ஒன்றை ராஜாஜி எழுதியிருப்பதாக என் ஞாபகத்தில் இருந்தது.  அதை ராணிமுத்து புத்தகமாகக் கொண்டு வந்ததாகக் கூட நினைப்பு.  அக் கூட்டத்தில் கேட்ட பேச்சிலிருந்து ராஜாஜி தமிழ் மொழிக்கு பல பங்களிப்பை அளித்திருப்பதாக அறிந்தேன்.  கூட்ட முடிவில் ராஜாஜியின் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.  கிருஷ்ணகானசபாவில், காமகோடி அரங்கம் என்ற ஒன்று உள்ளது.  அந்த அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்தது.  

                                                                  (இன்னும் முடியவில்லை)

Comments