Skip to main content

புத்தக விமர்சனம் 3


அழகியசிங்கர்


1999 ஆம் ஆண்டு மே மாதம் ஆனந்தவிகடன் பிரசுரம், üஉச்சி முதல் உள்ளங்கால் வரைý என்ற புத்தகத்தை முதன் முறையாகக் கொண்டு வந்தது.  அப் புத்தகத்தில் பல அரிய தகவல்களை பல மருத்துவர்கள் கேள்வி பதில் விதமாக வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.  எளிய முறையில் மருத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்கிற அற்புதமான புத்தகம் அது. 

ஆனந்தவிகடன்தான் இது மாதிரியான மருத்துவப் புத்தகங்களை பிரபலமாக்கியது என்று தோன்றுகிறது.  அதன் பின் இதைப்போல் மருத்துவப் புத்தகங்களை பல மருத்துவர்கள் எழுதிக் குவித்துள்ளார்கள்.  அப் புத்தகங்களைப் பார்க்கும்போது, ஆனந்தவிகடன் மாதிரி முயற்சியா என்பது ரியவில்லை.

இப்போதெல்லாம் மருத்துவத்திற்கான தனி இதழ்களே வர ஆரம்பித்துவிட்டன.  அதை மட்டும் வாசிக்கும் வாசகர்களும் நம்மிடையே அதிகரித்துள்ளார்கள்.  

மருத்துவத்திற்கென்று புத்தகங்கள், பத்திரிகைகள் வருவதுபோல் இசைக்கென்று, விளையாட்டிற்கென்று பல புத்தகங்கள் வரத் தொடங்கி விட்டன. 

இந்த வரிசையில் டாக்டர் ஜெ பாஸ்கரனின் மூன்று புத்தகங்களைக் காண நேர்ந்தது.  அவருடைய மூன்றாவது புத்தகம்தான் 'தலைவலி'. 

இந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியபோது முதலில் இப்புத்தகத்தைப் படிக்கக்கூடிய வாசகர்கள் யார் யார் இருப்பார்கள் என்று தோன்றியது.  

நெடுநாளாக தலைவலியால் அவதிப்படுகின்ற ஒரு நோயாளி இப்புத்தகத்தை விரும்பிப் படிக்கலாமென்று தோன்றியது.  நோயால் அவதிப்படுபவர்களுக்குத்தான் நோயின் தன்மைப் பற்றியும், அதிலிருந்து மீண்டு வரவேண்டுமென்ற எண்ணமும் உண்டாகும்.  அந்த வகையில் பாஸ்கரினின் தலைவலி புத்தகத்தைப் படிக்கத் தோன்றும்.  

மருத்துவப்படிப்பெல்லாம் நாம் ஆங்கில வழியில்தான் கற்க வேண்டி உள்ளது.  பாஸ்கரன் புத்தகத்தைப் படிக்கும்போது தாய் மொழியில் கூட மருத்துவ படிப்பை ஏன் உருவாக்கக் கூடாது என்று தோன்றியது.  இதெல்லாம் சாத்தியமா என்பது தெரியவில்லை.  எளிதாக பாமரர்களும் புரிந்துகொள்ளும்படி பாஸ்கரன் எழுதி உள்ளார்.  அதனால் அவருடைய முயற்சியை எளிமையாக கருதி விட முடியாது.  108 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தை எழுத அவர் எந்த அளவிற்குச் சிரமப்பட்டிருப்பார் என்பது தெரியவில்லை.

என் நெருங்கிய உறவினர் ஒருவர் உள்ளார்.  அவர் எப்போதும் நூல் நிலையத்திற்குச் சென்று புத்தகம் எடுக்க வேண்டுமென்று நினைத்தால் மருத்துவப் புத்தகங்களாகவே கொண்டு வருவார்.  அந்த அளவிற்கு மருத்துவ நூல்களைப் படிப்பதற்கும் வாசகர்கள் குவிந்து  விட்டார்கள்.  எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் அவருடைய சிறுகதைத் தொகுதியையும், கிட்னியைப் பற்றி ஒரு புத்தகமும் கொண்டு வந்தார்.  கிட்னிப் பற்றிய புத்தகம்தான் அதிகமாக விற்றது.  அவர் சிறுகதைத் தொகுதியை யாரும் சீண்டக் கூட இல்லை.

இப்படி மருத்துவப் புத்தகத்தை யார் முதன் முதலில் வெளியிட்டார் என்பது தெரியவில்லை. பெரிய பத்திரிகைகள் வாரந்தோறும் மருத்துவக் குறிப்புகளை வெளியிடாமல் இருப்பதில்லை.  அதாவது முதல் தமிழ்ப்புத்தகம் யார் எழுதியிருப்பார்கள்.  ஆனால் இன்று மருத்துவ சம்பந்தமான புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் வந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.  க்ரியாவின் டாக்டரைத் தேடி என்ற பெரிய புத்தகம் அதிகமான பிரதிகளை விற்ற வியாபார ரீதியான வெற்றிகரமான புத்தகம். ஆனால் இது ஒரு மொழிபெயர்ப்புப் புத்தகம்.  

பெரும்பாலும் இந்த மருத்துவப் புத்தகங்களை மருத்துவர்களே எழுதுகிறார்கள்.  அவர்கள் எழுதுவதுதான் சரி.  சமீபத்தில் வந்துள்ள ஒரு அவுட் லுக் இதழில் How Salt Kills என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளி வந்துள்ளது.  

பாஸ்கரன் எழுதிய தலைவலி புத்தகத்திற்கு வருவோம்.   பாஸ்கரன் படிக்கும்படி இப்புத்தகத்தை எழுதி உள்ளார்.  ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் தலைவலி இல்லாமல் எந்த மனிதனும் இருப்பதில்லை.  ஆனால்  என்னன்ன காரணங்களால் இதுமாதிரி தலைவலி வருகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.  பாஸ்கரனின் புத்தகம் படிக்கும்போது நமக்கு மலைப்பாக இருக்கிறது.  இப்படிப் பலதரப்பட்ட தலைவலிகள் உள்ளனவா என்ற கவலை இப்புத்தகத்தைப் படிக்கும்போது நம்மிடம் தொற்றிக்கொள்ளாமல் இருப்பதில்லை.  பயமும் கூடி வருகிறது.  ஆனால் உண்மையில் தலைவலியால் அவதிப்படுகிறவர்கள் இப் புத்தகத்தைப் படிக்க நேர்ந்தால் ஆறுதல் அடையாமல் இருக்க மாட்டார்கள். 

இப் புத்தகம் மூலம் டாக்டர் பாஸ்கரன் பல அறிவுரைகள் கூறுகிறார்:  நடு நடுவே கிண்டலாகவும் தலைவலியைப் பற்றி விவரிக்கவும் செய்கிறார் :  "ஐயன் திருவள்ளுவர் படைத்த திருக்குறளை 'உலகப் பொதுமுறை' என்று சொன்னால், உலகளாவிய மக்கள் அனுபவிக்கும் தலைவலியை, இயற்கையின் படைப்பு எனலாம்"  என்கிறார்.

இப்படி கிண்டலாகவே தலைவலியைப் பற்றி விவரித்துக் கொண்டு போகிறார்.  பின் கேஸ் ஸ்டெடி மாதிரி பல உதாரணங்களை தலைவலிக்குக் கொடுத்துக்கொண்டு போகிறார். 

இப்புத்தகத்தின் நம்பகத் தன்மைக்கு இதுமாதிரியான நோயாளிகளின் வெளிப்பாடு அவசியம் தேவை.  

பின், தலைவலி வருவதற்கு இரண்டுவித காரணங்கள்தான் இருக்க வேண்டுமென்று பிரிக்கிறார்.  ஒன்று உடல் சார்ந்தவை, இரண்டு மனம் சார்ந்தவை.  இவையெல்லாம் சரியாகப் புரிந்து கொண்டால் தலைவலியை விரட்டலாம் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்துகிறார்.

ஒரு இடத்தில் இப்படியும் எழுதுகிறார் :

"50 வயதுக்கு மேல் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் டிரைஜெமினல் நரம்பை அழுத்தும் தமனி /கட்டி உள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது என்பது மருத்துவர்களுக்கு இன்றளவும் ஒரு சவாலாகவே உள்ளது."

தலைவலி என்பது எல்லோருக்கும் ஏற்றபடக் கூடிய ஒன்று.  ஒவ்வொருவரும் அவரவர் தலைவலியைக் குறித்து சில குறிப்புகளை எழுதிக்கொண்டு மருத்துவரை அணுக வேண்டுமென்று டாக்டர் பாஸ்கரன் குறிப்பிடுகிறார்.

நான் இப்புத்தகத்தை எடுத்து ஒரே மூச்சில் படித்து விட்டேன்.  இப்படிப் படிப்பது ஒரு சுவையான அனுபவமாக எனக்குப் பட்டது.

தலைவலி - பாதிப்புகளும் - தீர்வுகளும் - டாக்டர் ஜெ பாஸ்கரன் - பக்கம்112 - விலை ரூ.90 - உஷா பிரசுரம் - 2 /3 நாலாவது தெரு, கோபாலபுரம், சென்னை 86

 

Comments