Skip to main content

எதையாவது சொல்லட்டுமா....74

 கடந்த சில தினங்களாக அலுவலகம் போகாமல் வீட்டில் இருக்கிறேன்.  பையன் திருமணத்தை ஒட்டி.  வீட்டில் நானும், அப்பாவும்தான்.  காலையில் நடக்கப் போவேன்.  சரவணபவன் ஓட்டல் எதிரில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியைச் சுற்றி சுற்றி வருவேன்.  நான்கு தடவைகள்  சுற்றினால் அரைமணிநேரம் ஓடிவிடும்.  பின் சரவணபவன் ஓட்டலில் 2 இட்லி ஒரு மினி காப்பி அல்லது பொங்கல் அல்லது வடை மினி காப்பி நிச்சயம் சாப்பிட்டு வீட்டிற்கு வந்து மெதுவாகக் குளித்து மெதுவாக மதியம் சாப்பிடுவேன்.  ஒருமுறை காலை 11 மணிக்கு வெயிலில் வெளியே சுற்றினேன்.  கடுமையை உணர்ந்தேன்.

 1984ஆம் ஆண்டு வாக்கில் நான் சம்பத்தைச் சந்தித்திருக்கிறேன். 2 முறைகள் சந்தித்திருப்பேன்.  ஒருமுறை ஞாநி நடத்திய கூட்டம் ஒன்றில்.  பாதல்சர்க்கார் பற்றிய கூட்டம் அது என்று நினைக்கிறேன்.  அப்போது சம்பத் என்பவர் சத்தமாக விவாதம் செய்ததாக நினைப்பு.  எதைப் பற்றி பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பதைப் பற்றி ஞாபகம் இல்லை.  அடுத்த முறை சம்பத்தை ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தின்போது, கூட்டம் முடிந்து நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, பேசிக்கொண்டு வந்தேன்.  ஆனந்தவிகடன் நடத்த உள்ள நாவல் போட்டியில் நாவல் எழுதப் போவதாக சம்பத் குறிப்பிட்டார்.  பின் சம்பத்தைப் பார்க்கவில்லை.  சம்பத்தைப் பற்றி அவர் நண்பர்கள் பேச பேச ஆச்சரியமாக இருக்கும். 

 ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் சம்பத்தைப் பற்றி கதை சொல்லியிருக்கிறார்கள்.  நானும் சம்பத் எழுதியவற்றை தேடிக் கண்டுபிடித்துப் படித்திருக்கிறேன்.  ழ வில் அவர் கவிதை ஒன்று ஏழு வைடூரியங்களைச் சேர்த்து கோர்த்ததுபோல் மூளையில் இருக்குமென்று எழுதியிருப்பார்.  தொடர்ந்து அவர் குறுநாவல்களில் மண்டைக்குள் முணுக்கென்று வலிப்பதுபோல் எழுதியிருப்பார்.  பிறகு மரணத்தைப் பற்றியே எழுதியிருப்பார்.  அவர் எழுத்தில் பிரிவு பெரும் துயரமாக இருக்கும்.  ஒரு கதை தி ஜானகிராமனின் அம்மா வந்தாள் கதையை ஞாபகப்படுத்தும். 

 சம்பத் எப்படி எழுதினாரோ அப்படியே வாழ்ந்தார்.  அவருடைய முதல் நாவல் இடைவெளி வரும்போது அவர் இல்லை.  திரும்பவும் அந்த நாவல் முழுவதும் மரணத்தைப் பற்றி அவர் தேடியிருக்கிறார்.  மரணத்தைப் பற்றி எழுதி எழுதி மரணத்தையே தழுவிவிட்டார்.  சம்பத் மரணம் நடந்தபோது, ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி பரபரப்பாகப் பேசப்பட்டது.  அதனால் சம்பத் மரணத்தைப் பற்றி பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.  ஆனால் அசோகமித்திரன் சம்பத் மரணத்தைப் பற்றி குமுதத்திலோ கணையாழியிலோ குறிப்பிட்டிருக்கிறார்.

கணையாழியில் எழுதும்போது, சுஜாதாவைப்போல் திறமையானவர் சம்பத் என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்கள்.  ஆனால் சுஜாதாபோல் திறமையானவர் இல்லை சம்பத்.  பிஎ இக்னாமிக்ஸ் படித்துவிட்டு, கிடைத்த நல்ல வேலையை உதறித் தள்ளியவர்.  அவர்குடும்பத்தாருக்கு அவரைப் பிடிக்காமல் போனதற்கு குடும்பத்தாரைப் பற்றியே அவர் எழுத ஆரம்பித்துவிட்டார்.  சம்பத் அவர் குடும்பத்தாருக்கு வேண்டாதவராகிவிட்டார்.  அவர் எழுத்தையும் அவரையும் அவர் குடும்பத்தார் மதிக்கவில்லை.  இன்னும்கூட அவர் கதைகளைப் புத்தகமாகக் கொண்டுவர அவர் குடும்பத்தினர் விரும்பவில்லை.  சம்பத் பற்றி பேசக்கூட அவர் தயாராக இல்லை.

 ஐராவதம் பணிபுரிந்த ரிசர்வ் வங்கிக்குச் சென்று மணிக்கணக்கில் சம்பத் பேசிக்கொண்டிருப்பார்.  ஐராவதத்தைச் சுற்றி இருந்தவர்களுக்கு தர்ம சங்கடம் ஆகவிடும். 

 இந்திராபார்த்தசாரதியுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் சொன்ன ஒரு விஷயம் என் ஞாபகத்திற்கு வருகிறது.  சம்பத் ஒரு நாவலை எழுதிக்கொண்டு, படிக்கும்படி இ.பாவைத் தொந்தரவு செய்தாராம்.  இ.பாவும் படித்துவிட்டு, எழுதியது சரியில்லை என்று சொல்லிவிட்டாராம்.  சொல்லிமுடித்து சிறிது நேரத்திற்குள் ஏதோ பேப்பர் பொசுங்கும் வாசனை வர ஆரம்பித்ததாம்.  இ.பா சமையல் அறைக்குப் போய்ப் பார்த்தபோது, சம்பத் அவர் எழுதிய நாவலை அடுப்பில் பொசுக்கிக் கொண்டிருந்தாராம்.

Comments

சம்பத் போல் ஒரு சில எழுத்தாளர்களை உங்கள் எழுத்துக்கள் மூலம்தான் நாம் நினைவுறுத்த இயல்கிறது...
ஹ ர ணி said…
அன்புள்ள...

ஒரு சரியான எழுத்தாளன் சம்பத் என்பது உங்கள் சொற்களில் தெரிகிறது. ஆனால் காலம் எழுதிய எழுத்திற்கு முற்றுப்புள்ளியாய் சம்பத் தேவைப்பட்டிருக்கிறார்போலும். தன் குடும்பத்தைப் பற்றி எழுதுதல் எப்படி வெறுக்கத்தக்கதாய் அமையும். அதுவும் ஒரு வாழ்க்கைதான். எழுத்தாய் வாழ்ந்திருக்கிறார் சம்பத். சங்கடமாக உள்ளது. ஒவ்வொரு எழுத்தாளனும் இந்த சமூகத்தில் தன்னுடைய எழுத்துக்களோடு போராட்டம்தான் நிகழ்த்திக்கொண்டிருக்கிறான் எழுதுகிறேன் என்கிறபாணியில். மனம் கசிகிறது. அவருடைய புகைப்படம் மற்றும் அவரது படைப்புக்களில் ஏதேனும் ஒன்று படிக்கப் பதியுங்கள்.

ஓரிரண்டு தினங்களுக்கு முன்பு நான் அனுப்பிய கவிதைகள் பார்த்தீர்களா?

நன்றி.