Skip to main content

நிலைப்பாடு





ழ 5வது இதழ்


டிசம்பர் 1978 ஜனவரி 1979


பசிக்கொண்டு நிதம் செல்லும்
பாதங்கள் தொலைவற்ற தூரம் கேட்கும்
சாலை மரங்கள் சற்றே
உறங்கிப் போவென்று சொல்லும்
தாம் தந்த நிழலுக்காய்.
கால்களில் தீப்பொறி குதிரைகளின் கனைப்பு
நினைவுக்குள் புகை மூட்டும்
நிழல் தின்று ஆறாது பசியெனினும்
ஒரு கிளைபிடித்து
குடையெனப் பாவனை செய்ய
தொடரும் பயணம்.
நினைவுக்கென வெட்டிக்கொடுத்து
பின் காயங்களில் சாசுவதம் கண்டு
வரும் நாட்கள் கழியும்
வேர்கொள்ளாக் கால்கள்
             பகற்கானலில் சாம்பலாகும்
             கட்டிடங்களுக்கப்பால்
நீலத்தொடுவானம் தேடிச்செல்ல
             வழிமரங்கள் தாம்பெற்ற
ராகங்களின் நிரந்தரமறியாது
             உடல் சிலிர்த்துப் பாதையை
             நிறைக்கும்
             கந்தல் நிழல் கண்டு

Comments