Skip to main content

எதையாவது சொல்லட்டுமா......../ 33

இந்த முறை நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி அவருடைய சிறுகதைத் தொகுப்பிற்காகக் கிடைத்துள்ளது. தரமான படைப்பாளியான நாஞ்சில் நாடனை அடையாளம் காண சாகித்ய அகாடமிக்கு இவ்வளவு காலம் பிடித்துள்ளது. எனக்கு நாஞ்சில் நாடனை ஒரு படைப்பாளி என்கிற மாதிரியும், நண்பர் என்கிற முறையிலும் தெரியும். அவருடைய நண்பரான வைத்தியநாதனை (கவிஞர் நாஞ்சில் நாடன் சென்னை வரும்போதெல்லாம் சந்திக்காமல் இருக்க மாட்டார். எனக்கும் நாஞ்சில்நாடன் சென்னையில் இருக்கிறார் என்ற தகவல் வைத்தியநாதன் மூலம் தெரியவரும். அதேபோல் நான் கோயம்பத்தூர் செல்லும்போதெல்லாம் நாஞ்சில்நாடனை சந்திக்காமல் இருக்க மாட்டேன்.

70-களில் நாஞ்சில்நாடன் எழுத ஆரம்பித்துவிட்டார். பெரும்பாலும் அவருடைய கதைகள் யதார்த்த உலகைச் சார்ந்தவை. இன்றைய உலகத்தை எதிர்கொள்ளும்போது நாஞ்சில்நாடனால் 'தலைகீழ் விகிதங்கள்' போன்ற நாவலை எழுத முடியுமா என்பதைச் சொல்ல முடியாது.

நான் கடைசியாக படித்த அவருடைய நாவல் சதுரங்கக் குதிரை. அந்த நாவலைப் படித்தபோது சினிமாவை மனதில் வைத்துக்கொண்டு எழுதியிருக்கிறாரோ என்றெல்லாம் எனக்குத் தோன்றும். நாஞ்சில்நாடன் நாவல் மட்டுமல்ல சிறுகதைகளும் எழுதி உள்ளார். கணையாழியில் முள் என்ற அவருடைய சிறுகதை எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

நாஞ்சில் நாடன் ஒருவழியாக எழுதி முடித்துவிட்டார். ஆனால் அவருடைய முந்தைய நாவல்களைக் கூட இப்போது அவர் எழுதினால் அவர் தாண்டி வர வேண்டும். இன்று எழுதுபவர்களும் அவருடைய நாவல்களைத் தாண்டி வரவேண்டும். இன்று நாவல் எழுதுவது ஒரு சவால். அதாவது எல்லோரும் படிக்கும்படி புதிய விதமான நாவல்கள் வரவேண்டும். எல்லா விதமான முயற்சிகளையும் எல்லோரும் செய்து கொண்டு வருகிறார்கள் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

தாமதமாக ஒரு கலைஞனைப் புரிந்துகொண்டதற்காக சாகித்ய அகாடமிக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments

ஹ ர ணி said…
உண்மைதான் சார். என்றைக்கு காலத்தில் ஒரு படைப்பாளியை விருதுகள் அடையாளப்படுத்தியிருக்கின்றன? தவிரவும் இப்போது அரசியல் பின்னணியும் பணமும்தான் நல்ல படைப்பாளிகளைக்கூடத் தரமற்றவர்களைக் கொண்டாடும் நிலைக்குத் தள்ளியிருக்கின்றன.
ஹ ர ணி said…
ஆனாலும் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லிவிடலாம். என்றைக்கும் தகுதியான படைப்பாளிகள் விடுபடுவதேயில்லை. காலம் கடந்து கிடைத்தாலும் நாஞ்சில்நாடன் போன்ற தகுதியானவர்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சியானது. அவரது எழுத்துக்களுக்கு அதையும் தாண்டிய தகுதிகள் இருக்கின்றன.