Skip to main content

எதையாவது சொல்லட்டுமா / 20



குற்றமும் தண்டனையும்



சமீபத்தில் தி நகரில் உள்ள போதீஸ் கடையில் உள்ள பணத்தைக் கொள்ளை அடித்தச் செய்தியை பேப்பரில் படித்தேன். போதீஸ் மட்டுமல்ல இன்னும் பல சம்பவங்கள். இந்தத் திருடர்களைப் பிடிக்க நல்ல அனுபவமுள்ள பல காவல் துறையைச் சேர்ந்தவர்கள் செயல்பட வேண்டும். கிட்டத்தட்ட கொள்ளையர்களைப் பிடிக்க காவல் துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பலவிதமான பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

ஒரு விதத்தில் யார் குற்றவாளிகள் என்று யோசித்தால் எல்லோரும் குற்றவாளிகவே இருக்க நேரிடுமோ என்று தோன்றுகிறது. லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்தான். லஞ்சம் வாங்குவதும் மற்றும் குற்றமல்ல. லஞ்சம் கொடுப்பவனும் குற்றவாளி. அதுமாதிரி நிலைக்கு ஆளாகிற அரசாங்கமும் குற்றவாளிதான். பணத்தின் மீது பலருக்குப் பித்துப் பிடித்துவிடுகிறது. இப்படிப் பித்துப் பிடிப்பது பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடுகிறது. பித்து என்கிற விஷயமே ஆபத்தானதுதான்.

30 ஆண்டுகளுக்குமேலாக நான் வங்கியில் பணிபுரிகிறேன். அங்கு நடக்கும் பல குற்றங்களைப் பார்க்கிறேன். முன்பெல்லாம் கள்ள நோட்டுக்களை அதிசயமாகத்தான் பார்ப்பேன். இப்போது எல்லா நோட்டுக்களையும் கள்ள நோட்டுக்களாக இருக்குமோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. ATM, Internet மூலம் நடக்கும் குற்றங்களை என்ன சொல்வது. இதிலிருந்து எப்படித் தப்பித்துக் கொள்வது. முன்பெல்லாம் வங்கிக் கிளை மிக எளிதாக லட்ஜர்களை வைத்துக்கொண்டு கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டு பணத்தைக் கொடுப்பார்கள். அல்லது போடும் பணத்தைச் சேமித்து வைப்பார்கள். அதன்பின் ராஜீவ் காந்தி காலத்தில் கணினிகள் உள்ளே நுழைந்தன. வேலைப் பளு குறையாவிட்டாலும், கணினிகள் சில பணிகளை எளிதாக்கி விட்டன. ஆனால் கணினிகள் பயன்கள் ஒரே கிளையில் மட்டும் சுற்றி சுற்றி வந்தன. பிரச்சினை என்று எதுவந்தாலும் அந்தக் கிளையுடன் நின்று விடும். அதாவது குற்றம் நடந்தால் அந்தக் கிளையை மட்டும் சார்ந்துவிடும்.

வங்கியில் அதற்கு அடுத்த முன்னேற்றமாக சிபிஎஸ் வந்தது. யார் வேண்டுமானாலும் வங்கியில் உள்ள எந்தக் கிளையிலும் பணம் எடுக்கலாம், பணம் போடலாம் என்ற நிலை ஏற்பட்டது. ரொம்ப அற்புதமான மாற்றம். கோயம்புத்தூரில் படித்துக்கொண்டிருந்த என் பையனுக்கு தி நகரில் உள்ள ஒரு வங்கியில் பணம் கட்டுவேன், அவன் எடுத்துப் பயன்படுத்திக் கொள்வதற்கு.

ஆனால் சிபிஎஸ்ஸில் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். நம் பணம் நம்மிடம் இருந்துகொண்டிருக்கிறதா என்ற பயம். யாராவது நினைத்தால் எந்த வங்கிக் கிளையிலிருந்தும் நம் பணத்தை எடுத்துக் கொண்டு போய்விடலாம். இப்போது குற்றத்தைப் பற்றி சொல்கிறேன். பணத்தின் மீது அதீதப் பித்துக் கொண்ட என் வங்கியில் பணி புரிந்துகொண்டிருந்த ஒரு பெண்மணி, வேறு வேறு கிளைகளில் பணத்தைச் சுருட்டும் வழக்கம். அவர் எப்போது இந்தக் குற்றத்தைச் செய்ய ஆரம்பித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் திரும்ப திரும்ப அந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது வகையாக மாட்டிக்கொண்டு விட்டார். நான் சொல்ல விரும்புவது அவர் ஒரு குற்றவாளியாக இருந்தாலும் குற்றத்தை எளிதில் செய்யும்படி இந்த சிபிஎஸ் சிஸ்டத்தில் இது இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது.

குற்றம் என்பது ஒரே கிளையில் மட்டும் இல்லாமல் தொடர்ந்து பல வழிகிளிலிருந்தும் இன்னும் எளிதாக பல கிளைகளிலும் தொடருகிறதா என்றெல்லாம் அச்சம் ஏற்படுகிறது. சக ஊழியரே சக ஊழியரை நம்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோமா? ஒருவர் குற்றத்தை வேண்டுமென்று செய்கிறார். இன்னொருவரோ அந்தக் குற்றத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் அங்கீகாரம் கொடுத்து விடுகிறார். சக ஊழியர் என்ற நம்பிக்கைப் பேரில்.

இந்தக் குற்றத்தைச் செய்த பெண்மணி தெய்வ நம்பிக்கை உள்ளவர். சந்தனம், குங்குமம் பொட்டெல்லாம் இட்டுக் கொண்டு வருபவர். ஒரு குடும்பம் இரு குழந்தைகள் உள்ளவர். ஏன் அவருக்கு பண ஆசை அதிகமாகப் போனது. இதில் அந்தப் பெண்மணி மட்டும் குற்றவாளி இல்லை. அந்தப் பெண்ணை நம்பி தெரியாமல் செய்த செய்கையால் மற்ற அதிகாரிகளும் குற்றவாளிகளாக மாறி விடுகிறார்கள். நான் என்ன சொல்ல விரும்பிகிறேன் என்றால் இது மாதிரி குற்றத்தைத் தூண்டும்படியான வசதியை அளிக்கும் வங்கியும் குற்றவாளியாக இருக்குமோ?

திருடர்கள் எப்படி குற்றவாளிகளோ? அவர்களைப் பிடிக்கிற காவல் துறையைச் சேர்ந்தவர்களும் குற்றவாளிகளா?






Comments