Skip to main content

இரண்டு கவிதைகள்

மொன்னை மனசு


முற்றத்தில்

மழைநீர் கொஞ்சம்

மிச்சமிருந்தது


கத்திக் கப்பல்

செய்து தாவென்றது

குழந்தை


கத்தி எதற்கென்றேன்


முட்டும் மீனை

வெட்டுவதற்கு என்றது

விழிகள் விரிய்

முனை கொஞ்சம்

மழுங்கலாகச்செய்து

கொடுத்து விட்டேன்.



இறகின் பிறகும்..



பாலொத்த வெள்ளையும்

பரிச்சயமானதொரு மென்மையும்

அந்த இறகில் இருந்தது


இறந்திருக்க முடியாதென்ற

பெருநம்பிக்கையோடு தேடியலைந்தேன்

அப்பறவையை


எதிர்ப்பட்ட மின்கம்பங்களில்

எருமையின் முதுகிலென

எங்கேயுமில்லை


அம்மாதிரியொரு பறவை

கவலை பெருக்கியும்

கையிலிருந்த இறகு கருக்கியும்

கவிழ்ந்து கொண்டிருந்த இரவில்

வெண்பறவை தென்படா

வானம் வழி

பறந்து மறைந்ததொரு கருங்காக்கை

எஞ்சியிருந்த அவ்விறகின்

நிறமொத்த எச்சமிட்டு

Comments

//முனை கொஞ்சம்
மழுங்கலாகச்செய்து
கொடுத்து விட்டேன்

அருமை தோழரே.வாழ்த்துக்கள்