Skip to main content

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......3




பிரமிள்தான் அடிக்கடி சாமியார்களைப் பற்றி குறிப்பிடுவார். விசிறி சாமியார் பற்றி பலமுறை தெரிவித்திருக்கிறார். அதனால் எனக்கும் விசிறி சாமியாரைப் பார்க்க ஆர்வம் ஏற்பட்டது. முதலில் நான், பிரமிள், லயம் சுப்பிரமணியன் (அவர் கோவையிலிருந்து வந்தார்) மூவரும் விசிறி சாமியார் அப்போது வசித்து வந்த ஒரு ஓட்டு வீட்டிற்கு முன் வந்து நின்றோம். ஏன்என்றால் அந்த வீட்டிற்குள் நுழையும்போது ஆணிகளில் மாலைகள் தொங்கிக்கொண்டிருந்தன. அவை எல்லாம் ஒட்டடைப் படிந்து அழுக்காக இருந்தன. எந்தக் காலத்திலோ யாரோ போட்ட மாலைகள் யாவும் தூக்கி எறியாமல் மாட்டியிருந்தன.


உள்ளேயிருந்து விசிறி சாமியார் வந்தார். அவரைப் பார்த்தவுடன், ''உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம்...வரலாமா'' என்று பிரமிள் கேட்டார். உள்ளே வரச் சொன்னார் விசிறி சாமியார். முதன் முதலில் அவரைப் பார்க்கும்போது எனக்கு திகைப்பாக இருந்தது. அவர் ஒரு அழுக்கு வேஷ்டியைக் கட்டிக்கொண்டிருந்தார். அவர் உடலே அழுக்காக இருக்கும்போல் தோன்றியது. ஆனால் அவர் முகத்தில் பயங்கர தேஜஸ். தாடி வைத்திருந்தார். அந்த தேஜஸைப் பார்த்து எனக்கு ஆச்சிரியமான ஆச்சரியம்.

உள்ளே நுழையும்போது நான் உட்கார அவசரமாக ஓடினேன். அப்போது அவர் என்னைத் தடுத்து நிறுத்தினார்.


முதலில் பிரமிளையும், பின் சுப்பிரமணியனையும், அதன் பின் என்னையும் உட்காரும்படி சொன்னார். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. ஏன் உட்கார கூட அவர் விருப்பப்படி சொல்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை.

சாமியாரும், பிரமிளும் ஆங்கிலத்தில் உரையாடினார்கள். பிரமிளுடன்தான் அவர் பேசிக்கொண்டிருந்தார். நானும் சுப்பிரமணியனும் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தோம். வாயைப் பிளந்துகொண்டு என்று கூட சொல்லலாம். நான் என் ஆர்வத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தேன். சுப்பிரமணியன் எதையும் வெளிப்படையாகக் காட்டிக்கக் கூட இல்லை.


அடிக்கடி சாமியார் தன்னை பிச்சைக்காரன் என்று குறிப்பிட்டுக் கொண்டார். 'எதற்கு இந்தப் பிச்சைக்காரனைப் பார்க்க வந்தீர்கள்?'' என்று கூட கேட்டார். இதற்குமுன் ஒரு சாமியார் செய்கையை நான் பார்த்ததில்லை. அவர் திடீரென்று பிரமிள் கையைப் பிடித்துக்கொண்டார். பின் பிரமிள் முதுகில் ஓங்கி தட்டினார். எனக்கு திகைப்பாக இருந்தது. ஓங்கி தட்டுதலை இரண்டு மூன்று முறை செய்தார்.


பொதுவாக சாதாரணமாகப் பேசினாலே சண்டைக்கு வருபவர் பிரமிள். அவருக்குப் பிடிக்காத எழுத்தாளர்களைப் பார்த்தால் போதும், அவர்கள் மிரண்டு ஓடும்படி செய்வார். நான் பலரை பிரமிளுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன். அவர்களுடன் அவர் பேசும்போதே கிண்டல் தொனியுடன் பேசுவார். எனக்கும் ஏண்டா அறிமுகப் படுத்தினோம் என்ற சங்கடம் வரும். ''சார், இவர் பெயர் ரமணன்,'' என்று ஒருவரை அறிமுகப் படுத்தினேன்.


''எந்த ரமணன்?''


''சதங்கையில் கவிதை எழுதியிருக்கிறேன்?'' என்று அவர் சொன்னால் போதும்,

''சதங்கையா... அதெல்லாம் பத்திரிகையா?'' என்று சொன்னவரை கிண்டல் செய்து அனுப்பி விடுவார்.


அதனால் ஆர்வத்தோடு பழக வேண்டும் என்று நினைப்பவர், அவ்வளவு சீக்கிரம் நெருங்கி பழகிவிட முடியாது. அப்படிப்பட்டவர் விசிறி சாமியார் முன் பயப்பக்தியுடன் மரியாதையுடன் அமர்ந்திருந்தார்.
(இன்னும் வரும்)

Comments