Skip to main content

கவிதையும் பார்வையும்

கவிதைகள் ஒரே பார்வையைக்கொண்டு வெளி வருகின்றன. அப்படி வெளி வருகின்ற கவிதைகளைப் படிக்கும்போது, ஒரே மாதிரியான கவிதைகளை வாசிக்கிறோம் என்ற உணர்வு எழுந்தாலும், ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு உணர்வு உலகத்தை நமக்குச் சித்தரித்துக் காட்டுகிறது. உதாரணமாக சமீபத்தில் மரணத்தைப் பற்றி அதிகமான கவிதைகளை இரு கவிஞர்கள் ஒரே சமயத்தில் எழுதி உள்ளார்கள். இது ஒருவரைப் பார்த்து இன்னொருவர் எழுதியிருக்கலாம் அல்லது கவிதைகளைப் பரிமாறிக்கொள்ளாமலே எழுதியிருக்கலாம். இப்படி வாசிக்கிற கவிதைகளில், கவிதையின் பொருள் ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொருவரும் மரணத்தை எப்படி எழுதியுள்ளார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இப்படிப் பார்க்கும்போது மரணத்தைப் பற்றி இவர்கள் இருவர்தான் எழுதி உள்ளார்கள் என்பது அர்த்தமில்லை. இதற்குமுன் மரணத்தைப் பற்றி பலர் எழுதி உள்ளார்கள்.
காலச்சுவடு இதழில் வெளிவந்த 'சிபிச்செல்வன்' கவிதையான 'சாவிற்காகக் காத்திருக்கும் துயரம் மிகுந்த கணங்கள்' என்ற கவிதையை எடுத்துக் கொள்வோம். இக் கவிதை மரணத்தைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகளின் தொடர்ச்சி.
பெருந்துயரிலலைகிறேன் சுடு பாலைவெளிகளில்
இருளடர்ந்த இரவுகளில் வேதனையின் உச்சத்தில்
அலறியழுகிறேன். இரக்கமற்ற இரவுகள்
மெல்ல மெல்ல நெரித்து விளையாடுகின்றன
எல்லையற்ற
பெருவெளியில் சாகிறார்கள்
வாழ்வதற்காக ஆசைப்படுகிறவர்கள்
இதேபோல் 'பூமா ஈஸ்வரமூர்த்தி' மரணத்தைப் பற்றி எழுதிய நீண்ட கவிதையைப் பார்ப்போம். 'சிற்றெறும்பு' என்ற கவிதை,
சின்ன
சட்டகத்துள்
பாதுகாக்கப்பட்ட
சின்ன கடவுள்
சின்ன மேஜையில்
சின்னக் கிண்ணத்தில்
கல்கண்டு கலந்த பால்
அலையில்லாத
பாற்கடலில்
செத்து மிதந்தன
சிற்றெறும்புகள் மேலே
குறிப்பிடப்பட்ட இரு கவிதைகளையும் கூர்ந்து பார்த்தால், முதல் கவிதையில் தென்பட்ட கவியின் பார்வை எந்த அளவிற்கு மரணத்தைச் சொல்வதில் இரண்டாவது கவிதையிலிருந்து விலகி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். முதல் கவிதையில் வெளிப்பட்ட நெருக்கம், இரண்டாவது கவிதையில் இல்லை. அடிப்படையில் மரணத்தைப் பற்றி கூறினாலும், முதல் கவிதை ஒரு கருத்தை கூறுகிறது. இரண்டாவது கவிதை ஒரு அனுபவத்தை வெளிப்படுத்துகிறது. இக் கவிதைகள் இரண்டும் இருவிதப் பார்வைகளை மரணத்திலிருந்து விலகியே வெளிப்படுத்துகின்றன. பொதுவான அம்சமாக இரு கவிதைகளிலும் மரணத்தைப் பற்றிய பதைப்பு வெளிப்படவில்லை.
ஆனால் முதல் கவிதையில் படிப்பவரின் பிடிப்பு வெளிப்படுவதுபோல், இரண்டாவது கவிதையில் இல்லை. ஞானக்கூத்தன் இதை ஒரே துறையில் எழுதப்படுகிற கவிதைகள் என்று குறிப்பிடுகிறார். இங்கு நாம் ஆராய்வது கவிதை ஒரே துறையில் எழுதப்பட்டாலும், ஒவ்வொரு கவிதையும் எந்தப் பார்வையை முன்னிறுத்துகிறது என்பதுதான்.
உதாரணமாக, 1. அழகியசிங்கர் எழுதிய 'அவர்' என்ற கவிதையும்
2. எஸ் வைதீஸ்வரன் எழுதிய, 'பிரிவுபசாரம்' என்ற கவிதையும்
3. ஞானக்கூத்தன் எழுதிய, 'நாயர் ஓய்வுப் பெற்றார்' என்ற கவிதையும் பார்ப்போம்.
இம் மூன்று கவிதைகளும் நீóóண்ட காலம் பணி புரிந்தவரின் ஓய்வுப் பெறும் அனுபவத்தை மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. அதாவது ஓய்வு பெறுதல் என்ற அடிப்படையான துறையைக் கொண்டு, ஆனால் மூன்று விதமான பார்வைகளை நம் முன் இக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. முதலில், 'அவர்' என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம்.
'எழுந்தவுடன் தெரிந்தது
அவர் பணியிலிருந்து
ஓய்வு பெறும் நாளென்று
இக் கவிதையில் கவியின் குரல் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஒருவரைப் பற்றி பணிபுரியும் ஒருவர் கூறும் கூற்றாக ஒலிப்பது தெளிவாகத் தெரிகிறது. ஓய்வு பெறும் தறுவாயில் புன்னகை பூத்தவாறு இருப்பதாக கவியின் கூற்றாக வெளிப்படுகிறது.
'அவர் எப்போதும்
அந்த இடத்தில்
சில சந்தர்ப்பங்களில்
அவர் இல்லாமலிருந்தாலும்
அவர் அமரும் விதத்தில்
என்று விவரிக்கும்போது, ஓய்வு பெறப் போகிற ஒருவரைப் பற்றி, பணியில் இருக்கும் ஒருவர் ஒருவித இரக்க உணர்ச்சியோடு, ஓய்வு பெறுபவர் பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
'ஏதோ ஒரு தருணத்தில்
எங்கோ ஒரு புள்ளியில்
அலுவலக விதியை
சந்திக்கும் சந்தர்ப்பத்தில்
சிறு சிறு உரசல்கள்
என்று குறிப்பிடும்போது, அலுவலகத்தில் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் இருவரிடையே அலுவலகச் சம்பந்தமாக சில சமயம் தகராறு ஏற்பட்டிருந்தாலும், அதெல்லாம் அலுவலகத்தில் ஏற்படுகிற சாதாரண நிகழ்ச்சியாக விவரிக்கப்படுகிறது. காலையில் எழுந்ததிலிருந்து ஒருவர் ஓய்வுப் பெறும் ஒருவரைப் பற்றி தீவிரமாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒற்றைக் குரலைக் கொண்ட கவிதையாக வெளிப்படுகிறது..
இரண்டாவதாக 'பிரிவுபசாரம்' கவிதையை எடுத்துக்கொள்வோம்.
உபயோகம் தீர்ந்த
கரும்பலகை எழுத்துக்கள்
ஒரு கைத்துடைப்பின் வீச்சில்
காற்றை
நரைத்த தூசுகளாக்கும்
என்று குறிப்பிடும்போது இக் கவிதையில் பார்வை ஓய்வு பெறும் ஒருவர் மீது கவனத்தைத் திருப்புகிறது. இக் கவிதையில் கவியின் கூற்றாக ஓய்வுப் பெறும் ஒருவரின் வழியாக வெளிப்படுகிறது. அதாவது 'அவர்' கவிதையில் ஓய்வு பெறுபவர் பற்றி இன்னொருவர் வைக்கும் பார்வையை கவியின் குரல் தெளிவாக முன் வைக்கிறது. ஆனால் 'பிரிவுபசாரம்' என்ற கவிதையில் கவியின் கூற்றாக முன் வைக்கப்படுவது ஓய்வு பெறப்போகிற ஒருவர் பற்றி அவரே தெரியப் படுத்துகிற கூற்றாக ஒலிக்கிறது. இதனால்,
'அவசரமாய் உடனே
அங்கே உயர்ந்த
பல்வேறு நீளக்கைகள்
ஒரு கூட்டப் பாம்புகளாய்
தெரிகிறது. ஓய்வு பெறுவதில் ஓய்வுப் பெறப்போகும் நபருக்கு விருப்பம் இல்லை என்றும், ஆனால் மற்றவர் கூட்டப் பாம்புகளாய் மாறி துரத்தி விடுவதாக கவிக் கூற்றாக வெளிப்படுகிறது.
மூன்றாவது கவிதையான 'நாயர் ஓய்வுப் பெற்றார்' என்ற கவிதையைப் பார்ப்போம். இக் கவிதையிலும் ஓய்வுப் பெறும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் கூறும் கூற்றாக இக் கவிதையின் பார்வை வெளிப்படுகிறது. ஓய்வுப் பெறப் போகிற நபர் ஒரு மலையாளி.
'அதற்கு முன்னே ஒருநாள் அவரை
தற்செயலாகத் தெருவில் கண்டேன்
'வாருங்கள் நாயர் கடையில் தேநீர்
குடிக்கலாம்' என்றேன்.
அவரென்னைப் பார்த்தார்
இப்படிச் சொல்லும்போது வேண்டுமென்றே குஞ்சு குட்டன் நாயரின் வெங்காய வேர் மீசையில் கோபம் ஏற்படுவதைக் காண முடிகிறது.
குஞ்சு குட்டன் நாயர்
ஓய்வுபெற்ற நாளன்று சம்பிரதாயமாக
எல்லோரும் அவரது சேவையைக்
குறிப்பிட்டுப் பேசினார்கள்.
ரோஜா மாலையை நெருடிக் கொண்டு
நாயர் என்னவோ நன்றி சொன்னார்
என்று இக் கவிதை முடிகிறது. இம் மூன்று கவிதைகளையும் உற்றுப் பார்க்கும்போது, ஓய்வு பெறுகிற ஒரே விஷயத்தை இம் மூன்று கவிதைகள் வெளிப்படுத்தினாலும், மூன்று வெவ்வேறு பார்வைகளை இம் மூன்று கவிதைகளும் வெளிப்படுத்துகின்றன.
'அவர்' என்கிற கவிதை ஓய்வு பெறப் போகிற நபரைப் பற்றி அக்கறையை கவிக்குரல் மூலம் வெளிப்படுகிறது. 'பிரிவுபசாரம்' என்ற கவிதை ஓய்வுப் பெறுவதற்கு கவிக்குரலோனுக்கு விருப்பமில்லை என்றும், ஆனால் மற்றவர்கள் இரக்கமற்று நீளக் கைகள் கூட்டப் பாம்புகளாய் துரத்துவதுபோல் வெளிப்படுகிறது. மூன்றாவது கவிதையான, 'நாயர் ஓய்வுப் பெற்றார்,' என்ற கவிதையில், ஓய்வுப் பெறப்போகும் குஞ்சு குட்டன் நாயருக்கும், கவிக் குரலோனுக்கும் கொஞ்ச நாட்கள்தான் பழக்கம். அதனால்தான் நாயர் ஓய்வுப் பெறும் தறுவாயை
ரோஜா மாலையை நெருடிக் கொண்டு
நாயர் என்னவோ நன்றி சொன்னார்
என்று முடிக்கிறார்.இன்னும் சுருக்கமாகப் பார்க்கும்போது முதல் கவிதை: ஓய்வுப் பெறும் நபர் மீது இரக்கப்படும் சுபாவமாக கவியின் குரல் வெளிப்படுகிறது. இரண்டாவது கவிதை : ஓய்வு பெறுவதை விரும்பவில்லை. ஆனால் வலுக்கட்டாயமாக எல்லோரும் துரத்துவதாக ஒருவித அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. மூன்றாவது கவிதை : ஓய்வுப் பெறப் போவதால் ஏற்படப்போகும் உணர்ச்சிப் போராட்டம் சிறிதும் இல்லை. அதனால் ஓய்வுப் பெறப்போகும் ஒரே சம்பவத்தைக் கொண்ட மூன்று வெவ்வேறான பார்வைகளைக் கொண்ட கவிதைகளாக இதைக் குறிப்பிடலாம்.
( 27.12.2003 அன்று எழுதப்பட்டது)

Comments

நல்ல ஆய்வு. அறிந்து கொண்டேன். நன்றி.