Skip to main content

23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும்







ஜனவரி மாதத்திலிருந்து என் பரபரப்பு அதிகமாகிவிட்டது. நான் நினைத்தபடியே மூன்று புத்தகங்கள் கொண்டு வர எண்ணினேன். கடைசி நிமிடம் வரை பணம் ஒரு பிரச்சினையாக இருக்கும்போல் தோன்றியது. ஆனால் ஓரளவு Festival Advance பணமும், Medical Aid பணமும் என்னைக் காப்பாற்றி விட்டது.




நான் எதிர்பார்த்தபடி 3 புத்தகங்களும் நல்லமுறையில் பிரசுரமாகிவிட்டன. இந்த முறை திருப்திகரமாக 3 புத்தகங்களும் அமைந்துவிட்டன. ஸ்டெல்லா புரூஸ் நவீன விருட்சத்தில் எழுதிய கட்டுரைகளையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகம். அப்புத்தகம் பெயர் 'என் நண்பர் ஆத்மாநாம்'. தொடர்ந்து நவீன விருட்சம் எழுதிக்கொண்டு வரும் அசோகமித்திரன் மீது எனக்கு தனி மரியாதை உண்டு. அவருடைய புத்கதம் ஒன்றுகூட நவீன விருட்சம் வெளியீடாக வரவில்லை. அவருடைய புத்தகம் ஒன்று கொண்டு வர வேண்டுமென்று 'உரையாடல்கள்' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளேன். மூன்றாவதாக காசியபன். அவருடைய 'அசடு' நாவலை எப்போது வேண்டுமானாலும் திரும்பவும் எடுத்து வாசிக்கலாம். அதை 3வது பதிப்பாகக் கொண்டு வந்துள்ளேன்.




ஆனால் மற்ற அரங்குகளைப் பார்க்கும்போது என் பிரமிப்பு கொஞ்சம்கூட குறையவில்லை. ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியில் தென்படும் புதிய புதிய அரங்குக்குக் குறைவில்லை.





மூன்று புத்தகங்கள் போடுவதற்கே தடுமாறும் நான், உயிர்மை வெளியிடும் 65 புத்தகங்களின் எண்ணிக்கையை அறிந்து மயக்கமே வரும்போல் தோன்றியது. கடைசி வரை 3 புத்தகங்களும் பைண்ட் ஆகி கைக்குக் கிடைக்குமா என்று நினைத்தேன். எதிர்பார்த்தபடியே கிடைத்துவிட்டது. அவசரகதியில் அடுத்த இதழ் நவீன விருட்சமும் 83வது இதழும் கொண்டு வந்துவிட்டேன். 48 பக்கங்கள்.





புத்தகக் காட்சி அமைப்பாளர்கள் 7ஆம் தேதி அன்றே புத்தகங்களை ஸ்டாலுக்குக் கொண்டு வரும்படி அறிவித்திருந்தார்கள். 8ஆம் தேதி அலுவலகம் விடுமுறை. அன்றுதான் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வர முடியும். டாக்டர் அப்துல்கலாம் வருவதால் கெடுபிடி அதிகமாக இருக்குமென்று நினைத்தேன். அவசரம் அவசரமாக என் அலுவலக நண்பர் அமுது அவர்களுக்கு போன் செய்தேன். 8ஆம் தேதிதான் வரமுடியும் என்று கூறிவிட்டார். நானும் 8 ஆம் தேதிதான் சரிப்பட்டு வரும் என்று நினைத்துக்கொண்டேன்.




எங்கள் தெரு முனையில் உள்ள ஒரு ஆட்டோக்காரர் என் புத்தகங்களைக் கொண்டு வர எனக்கும் பெரிதும் உதவினார். சமீபத்தில் என் பெண் குடும்பம் வேளச்சேரி என்ற இடத்திலிருந்து மடிப்பாக்கம் வீடு மாற்றிக்கொண்டு வரும்போது, அட்டைப் பெட்டியின் பயன் என்ன என்பது தெரிந்தது. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று தெரிந்துகொண்டேன். விமலா பாக்கர்ஸ் என்ற இடத்திற்குப் போய் ஒரு அட்டைப் பெட்டியின் விலையைக் கேட்டேன். ரூ30 என்றார்கள். எனக்கு பத்து அட்டைப் பெட்டிகளுக்கு மேல் வேண்டும். அவ்வளவு விலை கொடுத்து எப்படி வாங்குவது என்று யோசித்தேன். வெறும் அட்டைப்பெட்டிக்கா இவ்வளவு பணம் என்றும் யோசித்தேன். அப்போதுதான் நான் புத்தகம் வைத்திருக்கும் தெரு முனையில் அட்டைப்பெட்டிகளைச் சேகரித்துக் கூழ் ஆக்கும் கடை இருந்தது.




நான் அங்கு வந்துகொண்டிருக்கும்போது அட்டைப்பெட்டிகளைக் கொண்டு போகும் ஒருவரை விலை கேட்டேன். எல்லாம் பிராந்தி பாட்டில் வைக்கும் அட்டைப் பெட்டிகள். 100 ரூபாய்க்கு எனக்கு 20 அட்டைப் பெட்டிகள் கிடைத்தன. எனக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி. ஒவ்வொரு அட்டைப் பெட்டியாய் எடுத்து புத்தகங்களை அடுக்கி ப்ரவுன் டேப் வைத்து ஒட்டினேன். 14 பெட்டிகள் தேறின. எல்லாவற்றையும் எனக்குத் தெரிந்த ஆட்டோவில் வைத்துப் புத்தகக் காட்சிக்குக் கிளம்பினேன்.




எட்டாம் தேதிதான் என் முதல் நாள் அனுபவம். என் கடை எண் 147. அது ஒரு கோடியில் இருந்தது. என்னால் ஒரு அட்டைப் பெட்டிதான் தூக்கிக்கொண்டு வர முடிந்தது. இந்த நேரத்தில்தான் என் வயதை நினைத்துக்கொண்டேன். ஆட்டோ நடராஜ் 3 பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு உதவி செய்தார். ஒரு வழியாக புத்தகங்களைக் கொண்டு இறக்கியாயிற்று.
அலுவலக நண்பர்கள் அமுது, வெங்கட், சுரேஷ் மூவரும் வந்தார்கள். கடகடவென்று எல்லாப் புத்தகங்களையும் அடுக்கினோம். இந்த முறை 3 ரேக் வாடகைக்கு எடுத்திருந்தேன். 11 நாள் கழித்து ரூ.2000 வரை பணம் கொடுக்கும்படி இருக்கும்.




நான் எப்போதும் இப்படித்தான் நினைப்பேன். ஒரு புத்தகமும் விற்கவில்லை என்றால் எவ்வளவு பணம் போகுமென்று. அதனால் விற்கவில்லை என்பதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். என்னுடைய இன்னொரு பிரச்சினை கடையைப் பார்த்துக்கொள்ள யார் உதவுவார்கள் என்பது. என் உறவினர் கடையில் பணிபுரியும் ஒருவர் இந்த முறை வந்திருந்தார். பொங்கல் விடுமுறைகளையும் சேர்த்து நான் மொத்தமாக லீவு போடமுடியாது. ஒரு 5 நாட்கள் யாராவது கடையைப் பார்த்துக்கொண்டால் போதும்..நான் ஒருவனே எல்லாவற்றையும் சமாளிப்பேன். ஆனால் என் புத்தகக் கடையோ அமைதியான இடம். கூட்டம் அதிகமாக வந்திருந்து தொந்தரவு செய்ய மாட்டார்கள். சிலர் பார்த்துவிட்டுப் போய்விடுவார்கள், சிலர் புத்தகங்களை வாங்கினாலும் உண்டு. ஆனால் பல எழுத்தாள நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் இடம்.




என் அலுவலக நண்பர்களை நான் சந்தித்தே பல மாதங்கள் மேல் ஆகிவிட்டது. அவர்களைச் சந்திக்கும் இடமாகக்கூட நவீன விருட்சம் கடை உதவுவதாகத் தோன்றியது.




எட்டாம்தேதி திலீப்குமார், சச்சிதானந்தம், குட்டி ரேவதி, செந்தூரம் ஜெகதீஷ், பிரசாத் முதலிய நண்பர்கள் வந்தார்கள். சச்சிதானந்தம், ''ஏன் பார்க்க டல்லாக இருக்கே?'' என்று விஜாரித்தார். நான் காலையில் 5 மணியிலிருந்து இங்குவரும்வரை இதே கவனமாக இருப்பதால் பார்க்க டல்லா இல்லாமல் இருக்க முடியாது என்று சொன்னேன். மேலும் என் முக அமைப்பில் காலையில் ஒரு தோற்றமும், மாலை இன்னொரு தோற்றமுமாக இருக்கும். முன்பெல்லாம் யாராவது என்னைப் பார்த்து ஏன் பார்க்க டல்லாக இருக்கே?என்று சொன்னால் அதைப் பற்றியே நினைத்துக்கொண்டு வீட்டிற்குப் போய் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து டல்லாகவா இருக்கிறேன் என்று யோசிப்பேன். இப்போதெல்லாம் அதைப்பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை.





பொதுவாக விருட்சம் புத்தகங்கள் கொஞ்சமாகவும், மற்றவர்களிடமிருந்து வாங்கி விற்கும் புத்தகங்கள் அதிகமாக விற்கும். அதானல் சாகித்திய அக்காதெமியிடமிருந்து சில புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்தேன். அந்தக் கடையில் இருப்பவர், உங்கள் கடை எண் என்ன என்று விஜாரித்தபோது, 147 என்று உடனே சொல்ல வரவில்லை. என் கூட இருந்த நண்பர்கள் கிண்டல் செய்தார்கள். நான் காலையிலிருந்து புத்தகங்களைக் கொண்டு வரும் பரபரப்பிலும் கடைசிவரை புத்தகம் பைண்ட் ஆகி வருமா என்ற பரபரப்பிலும் இருந்ததால் இந்தக் கடை எண் ஞாபகத்தில் வரவில்லை. இந்தக் கடை எண் வந்தபோது அதைக் கூட்டும் தொகை 3 என்று வந்தது. பிரமிளுடன் நட்பு வைத்திருந்ததால் எனக்கு எண் கணிதம் மீது ஒரு நோட்டம். 3 நல்ல எண் என்று நினைத்துக்கொண்டேன். புத்தகம் விற்றால் நல்ல எண், விற்காவிட்டாலும் நல்ல எண்தான். 147 உடனே சொல்ல வரவில்லை என்பதால் 147 147 147 147 147 என்று மனப்பாடம் செய்வதைப் போல் சத்தம் போட்டு சொல்லிக்கொண்டே வந்தேன். நண்பர்கள் சிரித்தார்கள். (இன்னும் வரும்)

Comments

Unknown said…
Hi, I've been trying to get a copy of Kasyapan's Asadu. Could you let me know how I can procure a copy ? Thanks !!

You can mail me at : elvis039[at]gmail[dot]com

Thanks/Lavanya