Skip to main content

ஒரு வழிப் பாதை

சிறுகதை

அண்ணாசாலை விபத்து ஒன்றில் தாயார் இறந்துபடவும், மகன் அடுத்தாற்போல், செஞ்சிக்கோட்டை உச்சியில் நின்று கைகளை உயர்த்திப் பாடுவதாக வருகிறது காட்சி. இயக்குநர் அதை விவரித்துக் உதவி இயக்குநர்களில் ஒருவனாகப் பணியில் சேர்ந்திருப்பவன் அவன். சில சமயங்களில் இயக்குநருக்கு காப்பி கொண்டு வந்து கொடுத்தும் பணியாற்றுவதுண்டு. ஆனாலும் அந்தத் துணை இயக்குநர் கூட்டத்தில் அவனே அதிகம் படித்து பட்டங்கள் வாங்கியவனாக அறியப்பட்டிருந்தான். எப்போதும் எதிலோ ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பவனாகவும் சொல்கிறார்கள். கறுப்பன் என்ற இயற்பெயரை மாற்றிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளான். மேற்படி உதவி இயக்குநரான அவன் பின் வருமாறு எண்ணிக்கொண்டிருக்கிறான். "செஞ்சிக்கோட்டை உச்சியில் சாவு பற்றிய தத்துவ கருத்துகளை உதிர்த்துவிட்டு கீழே இறங்கி வருவதற்குள் தாயார் இறந்த துக்கம் போய்விட, அங்கே ஆற்றங்கரையில், பெண்ணிடம் வம்பு செய்ய முயன்ற மூன்றுபேரை கொரிய நாட்டு அகி ஹிடோ பாணி சண்டையிட்டு வெற்றிகொள்கிறான். அநேகமாக அந்த இடத்திலும் ஒரு பாட்டு இருக்கும்.
இந்தப் படத்தில் பணியாற்ற நான் இத்தனை மைல் கடந்து இங்கே வந்திருக்கிறேன்.......... ஆகா। முருகா. " இவ்வாறெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தவன், அன்று மாலை தன்னுடன் அறையில் வசிப்பவரும் தன்னைவிட மூத்தவருமான முத்து என்ற நண்பரிடம் இதைப் பற்றியெல்லாம் கூறுகிறான். அவர் ஆதுரத்துடன் கேட்டுக்கொள்கிறார். இவன் எம்.ஏ ஆங்கிலம் என்றால், அவர் எம்.ஏ தமிழ். அத்துடன் சோதிடம்வரை எல்லாப் புத்தகங்களையும் ஒரு கை பார்த்தவர். திருமணங்கள் பலவற்றை சாதகம் பார்த்து பரிந்துரைத்தவர். சில திருமணங்கள் பெற்றோரால் வாழ்த்தப்பட்டன. பல தம்பதிகள் பிரிந்து விட்டனர். சோதிடம் பற்றி எளிய முறையில் நூல் எழுதலாமா என்ற யோசனை உண்டு. 'எம்மே' தமிழ் சோறு போடவில்லை : சோதிடம் உதவிற்று. அன்றிரவு உணவு உட்கொள்ளு முன்னரே அந்த விவாதம் தொடங்கியிருந்தது. அன்றிரவே முற்றுப் பெற்றும் விட்டது. ஒரு பயணத்தின் தோற்றுவாய் அது. பின்னர் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. உடுத்தியிருந்த துணி தவிர வேட்டி ஒன்றை கூடுதலாக எடுத்துக்கொண்டனர். அறைக் கதவை பூட்டாது சென்றனர். அண்ணாசாலையில் ஒரு பிச்சைக்காரனிடம் கைவசமிருந்த ஒன்றிரண்டு நோட்டுகளையும் சில்லறையையும் கொடுத்தனர். அங்கிருந்து நடந்தது திருவான்மியூர் நோக்கி.
** ***** ***** ***** ***

அன்றிரவு

வான்மீகநாதர் கோவில் அருகேயே சாலை செல்கிறது. மறுபுறம் ஒரு வெளியிடம். கல்ஒன்றில் இருவரும் உட்கார்ந்திருக்க, பின்வருமாறு உரையாடல் இருந்தது.
"இந்த சாலை எங்கே சென்று முடிகிறது. "
"எங்கே செல்லும் என்று தெரிந்து விட்டால், அது பயணமாகாது।"
"ஆமாம்."
"நட்சத்திரங்களைக் கொண்டே வருட, மாத, நாளைக் கணித்து விட முடியுமா?" "பொதுவா இந்தப் பக்கத்திலே அதாவது தென் பகுதியிலே கையாண்ட சோதிடத்திலே ஒரு விசேஷம் : பூசம், அனுஷம், உத்ரட்டாதி நட்சத்திரங்களை மாத்திரம் கையாண்டே எல்லாவற்றையும் : நேரம் உட்பட : சொல்லிவிடலாம்."
"அதிசயம்தான். இது எந்த சோதிட சாத்திரங்களிலும் உலக அளவில் இல்லை."
"பசிகூட ஒரு நினைவுதானோ?"
முத்து தலையசைத்தார். கையிலிருந்த ஒரு பத்து ரூபாய் நோட்டைக் காண்பித்தார்.
"பசி ஒரு நிகழ்காலம்," என்றார்।
"உனக்குத் தெரியுமா இந்தப் பத்து ரூபாயைத் தந்தது பூச நட்சத்திரம். அந்தப் புத்தக் கடையிலே பேசிக்கிட்டிருந்தான் பாரு : அவனுக்குப் பலன் சொன்னேன். காலில் விழாத குறைதான். பலன் சொன்னால் ஏதாவது தட்சிணை தந்துதான் ஆகணுமாம் : தந்தான். இது போதும்। ராத்திரி ஆளுக்கு அஞ்சு இட்டிலி."
"நாளைக்கு."
"திட்டம் நாளைக்கும் சேர்த்துப் போட்டால், அது பயணமாகாது।தெரிந்தவற்றை பரிமாறிக்கொள்ளலாம்। மாமல்லபுரத்திற்கு நாளை மாலை போய் விடுவோம் என்று வைத்துக்கொள். நான் அங்கே மூட்டைத் தூக்குவேன். சோதிடமும் : வெளிநாட்டவர்க்கும் சேர்த்து சொல்லலாம். வெளிநாட்டவர்க்கு என்றால் நீ மொழி பெயர்ப்பு வேலை : சரி :வா."
***** ***** ***** **
சாப்பிடுதல் என்ற செய்கை நிறைவேற்றப்பட வேண்டுமானால் அது, அந்த செய்கை மட்டுமே முழுதாக நின்று நிலவ வேண்டும். நான் நினைக்கிறேன் என்பதுகூட தவறாம். நான் நினைக்கப்படுகிறேன் என்பதுதான் சரியாம். கறுப்பன் ஏதோ பேச முற்பட்டபோது, முத்து சொன்னது இது.
***** ***** ***** *** *****

"தனக்குள்ளே தான் நிற்க இடமும் வேணும்," என்பது வான்மீகச் சித்தர் வாக்கு। அவர் பெயரில் இந்த ஊரா என்று தெரியவில்லை। "அவர் நிச்சயமா ராமாயண வான்மீகி இல்லை." திருவான்மீயூர் எல்லையைக் கடந்தபோது அவர்களது பேச்சு ஊரைப் பற்றியிருந்தது.
மாமல்லபுரம் சேர்வதற்கு முன்னரே

தலையிலே ஒரு கட்டு சுள்ளி விறகு. இடுப்பிலே கைக்குழந்தை மீதமிருந்த ஒரு கையில் சாமான்கள் அடங்கிய பை. வேகத்தோடு லாகவமாகவும் அந்தச் சாலையைக் கடந்து கடையருகே வந்து நின்றாள், அந்தப் பெண். கைகளின் உதவியில்லாமலேயே, கழுத்தைப் பின்னால் லேசாகச் சாய்த்து தலைப் பாரத்தைக் கீழே தள்ளினாள். தடை என்று சொல்லப்பட்டாலும், அந்தப் பிரதேசம் இருபது குடில்களையும் இரண்டு ஓட்டு வீடுகளையும் கொண்ட இடமே. சாலையின் பக்கமாகவே கட்டப்பட்டிருந்தது குடிசை. சில பேருந்துகள் அங்கே நிற்கும் போலும். பக்கத்திலே கடல். இரவில் அலைகளின் சப்தம். பூட்டப்பட வேண்டிய அவசியமே இல்லாத கடை. உள்ளே மண்அடுப்பு ஒன்றுதான். ஆனாலும் திறந்திருந்தால் இதோ இப்போது உட்கார்ந்திருக்கானே, இவனைப் போன்ற வழிப்போக்கன் உள்ளே வந்து ஆக்ரமித்துக் கொள்ளக்கூடும். கடையைத் திறந்தவள் குழந்தையை முதலில் கீழே படுக்க வைத்தாள். ஏற்கனவே தூக்கக் கலக்கத்திலிருந்தது அது. துடைப்பம் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். "யாரு : தள்ளிக்குந்து." அவன் தள்ளி உட்கார, அவள், "பாண்டி பஸ் போயாச்சா," என்று கேட்டவாறே பெருக்கத் தொடங்கினாள். கறுப்பன் பதில் சொல்லவில்லை. அந்தக் குடிசையின் பின்புறம் சிறிது தூரத்தில் தெரிந்த கடலைக் கவனித்துக் கொண்டிருந்தான். அந்தப் பக்கமாகச் சென்ற முத்து இன்னும் திரும்பவில்லை.
"டீ ஏதாச்சியும் வேணுமா?"
"டீயும் வேணும்।ஏதாவது வேலையும் வேணும்।"
"என்னா வேலை। இதுதான் இருக்குது," என்று துடைப்பத்தைக் காட்டினாள், அந்தப் பெண் . சிரிப்பும் வந்தது.
"எதுவாயிருந்தாலும், சரி," என்று எழுந்தான் கறுப்பன்.
கடற்கரைப் பக்கமிருந்து முத்துவும் வர, அந்தப் பெண் அதிசயித்தாள்.'
'ஒரு துடைப்பம்தானே இருக்கிறது,' என்றாள். மீதமுள்ள வேலைகளையும் செய்தால் டீயும், மசால் வடையும் தரமுடியும் என்று உறுதி கூறினாள். பக்கத்து ஓட்டு வீட்டிற்குச் சென்று தண்ணீர் மொண்டு வரச்செய்தாள். பேருந்துகள் நின்றால், டிப்பன்-காப்பி என்று கூவ வேண்டும், டீ என்று சொல்லக்கூடாது என்று அறிவுறுத்தினாள். தன் தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லையென்றும், இதெல்லாம் அவர்தான் பார்த்துக்கொள்வார் என்றும் அவர் வரும்வரை இம் மாதிரி பிறர் உதவி தேவை என்றும் விளக்கமளித்தாள்.
இரண்டு திசைகளிலும் இருந்து வந்து போய்க்கொண்டிருந்த பேருந்துகளில் மூன்று அங்கே நின்று சென்றன. அது ஒரு நல்ல மாலைநேரம் என்று சொல்லவேண்டும். கிட்டத்தட்ட ஐம்பது ரூபாய்க்கு மேல் வியாபாரம். அந்தப் பெண்ணிற்கு மிக மகிழ்ச்சி. கைமுறுக்கும் கூடுதலாக இருக்குமானால் இன்னும் இருபது ரூபாய் அதிகம் விற்றிருக்கும் என்று முத்து சொன்னது அவளை யோசிக்க வைத்தது. இடையே குழந்தை விழித்துக்கொண்டு அழுதபோது, முத்து அதைத் தூக்கிக்கொண்டு உலாவினார்.கறுப்பன் திரும்பவும் அந்தக் கடை முன்பக்கம் முழுவதும் பெருக்கித் தள்ளினான். அந்தப் பெண்ணிற்கு கூடுதல் மகிழ்ச்சி. மீதமிருந்த பலகாரம் தேனீர் ஆகியவை பகிர்ந்தளிக்கப்பட்டன. சாமான்கள் அனைத்தையும் பையில் திணித்துக்கொண்டு அவள் புறப்பட தயாரானாள். அடுத்தநாள் காலை பத்துமணிக்குத்தான் திரும்பவும் கடை திறக்க வேண்டுமாம். தாத்தாவின் உடல் நிலை காரணமாயிருக்கும். புறப்பட்டவள் சிறிது நின்று கையிலிருந்த ஓர் ஐந்து ரூபாய் நோட்டை அவர்களிடம் தந்தாள். "ஒங்களாலேதான் இவ்வளவு முடிஞ்சுது. : நான் வாரேன்." சாலையைக் கடந்து அவள் நடந்தாள்.
****** ****** ****** ******
இருட்டுவதற்குள் மாமல்லபுரம் போய்விட முடியும் என்றார் முத்து.வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தயாரானார். சாலை நன்றாகவே இருக்கிறது.நடப்பது சௌகர்யம்.குரலெடுத்து பாடிக்கொண்டே நடக்கலாம் என்றும் சொன்னார்.ஆனால் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது அவர் மட்டுமே. கறுப்பன் அவருடன் செல்லவில்லை. அப்போது நடந்த உரையாடல் வருமாறு. கறுப்பன் சொன்னது:

"சாயந்திரம் நீங்க குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு விளையாட்டு காட்டிகிட்டிருந்தீங்க இல்லையா : அப்போது நான் அந்தக் கடையைச் சுத்திப் பெருக்கி கொண்டிருந்தேன்.பாருங்க திரும்பத் திரும்ப அலையோட சப்தம் : தெளிவாக கேட்டது.நிம்மதியாயிருந்து.அதைப்பற்றி கொஞ்சம் அந்தப் பெண்ணிடம் சொன்னேன்.ஏனோ சொல்லணும்னு தோணிச்சு. அதுக்கு அவ சொன்ன பதில். "ஆமா : சத்தம் ரொம்ப நல்லாயிருக்கும் : ஒரு சத்தம் மாதிரி இன்னொண்ணு இருக்காது : அலையைப் பாத்தாலும் அப்படித்தான் : ஒவ்வொண்ணும் ஒவ்வொரு தினுசு"- பரமார்த்தமா இதைச் சொன்னா. அப்ப தோணிச்சு எனக்கு : இந்தக் கடலும் அலையும் இந்த மண்ணும் மரமும் ஏற்பட்ட காரணமும் பயணத்திற்காகத்தானே : இல்லே நமக்காகவா இதெல்லாம் இந்தப் பிரபஞ்சத்திலே பயணத்தை ஆரம்பிச்சிருக்கு : நிச்சயமா இல்லே : அந்தப் பயணத்தைப் பார்க்க முடியாத வரை : எல்லாவற்றின் பயணத்தையும் பார்க்க முடியாதவரை : நாம் பயணிகளாகி விட முடியுமா : சொல்லிக் கொள்ளத்தான் முடியுமா : யாரோ சொன்னதை நீங்க அடிக்கடி குறிப்பிடுவீங்க : "சென்று அடைவதற்காக பயணம் இல்லை : அது பயணத்திற்காகவே." அது உண்மை : சரியாகத்தான் சொல்லியிருக்கு : யாரு சொன்னது அது : ஆனாலும் அந்தப் பயணம் நம்ம காலாலோ அல்லது இந்த உடம்பாலோதான் நடத்தி ஆகணும். அப்படின்னு யாராவது சொல்ல முடியுமா : அம் மாதிரிப்பட்ட பயணம்கூட ஓர் இறந்த காலம்தான். வேறு எப்படி இதைக்கொண்டு செல்ல வேண்டும் எனக்குத் தெரியவில்லை. நான் இங்கேயே இருக்கிறேன். ஒருவேளை ஸ்டியோவிற்கே திரும்பிப் போகவும் தோன்றலாம் : ஒவ்வொண்ணும் ஒவ்வொரு தினுசு."
முத்து சொன்னது: "தம்பி , உனக்கு இப்படித் தோன்றியதில் சந்தோஷம்। தானாகத் தோன்றுவதில் ஒரு சௌகர்யம். அதிலே பொய் எதுவும் இருக்காது. எனக்கும் தோன்றலாம். நான் அதுவரை பயணிக்கிறேன். உனது முடிவை சரியென்றோ தவறு என்றோ எண்ணாது போகிறேன். நாம எப்பவாவது சந்திக்கலாம்." முத்து ஏக, கறுப்பன் நிலை கொள்கிறான்.

Comments

anujanya said…
என்னமோ செய்கிறது இந்த கதை.

அனுஜன்யா