Skip to main content

இரண்டு கவிதைகள்

ஏன் வீண் பரீக்ஷை?

காலையில் ஜாகிங்க் செல்ல

ஒரு தனி ஷூ வாங்க வேண்டும் என்றார்கள்-

என்ன ரேஞ்ஜ் என்று கேட்ட கடையின் பையன்

எதை எனக்குக் காண்பிப்பதென்றும்

கையிலிருந்த ரூபாய் ஆயிரத்து ஐனூறு

நான் வாங்கவேண்டிய ஷூவையும்முடிவு செய்தன...

எங்கள் வீட்டு ஜோச்யர்

எட்டில் சனியென்று

என் சனி காலைகளை மற்றும் மாலைகளையும்

முடிவு செய்தார்..

இந்த வாரம் எப்படி

நான் வணங்க வேண்டிய கடவுளரையும்

சொல்ல வேண்டிய தோத்திரங்களையும்

முடிவு செய்தது..

என் காலைகளை

தண்ணீர் வரும் நேரமும்

பள்ளிக்கூட ஊர்த்தியின் நேரமும்

சபர்பன் ரயிலின் டைம்டேபிளும்

என் எதிர் வீட்டு நண்பனும்

மனைவியின் வேகமும்

இன்னம் எத்தனையோ-

பல உதவாவிட்டாலும்

உபத்திரவம் பண்ணமுடியுமே-

என் நாளை

என் மானேஜர் உட்பட பலர்..

யாருக்கு என்ன-

எல்லோரும் இதே பாடானால்

இது ஒன்றும் புதிய பாடல் அல்லவே

ஆனாலும் புதுப்புது ராகங்கள்

விதவித தாளங்கள்

வாத்தியங்கள் டெக்னாலஜி வழி மாறினென்ன!

என் ஷூ சரியாகவே யிருந்தது

ப்ராண்டடாகயில்லாவிட்டாலென்ன-

என் வேண்டுதல்கள் ஏதோரு விதத்தில்

எனக்கு மட்டுமின்றி

தாய் மற்றும் மனைவி மக்களுக்கு

இதமாகவே யிருந்தது....

எல்லோருக்கும் நான்

என் மனோ வாக்கு காயங்களையும்

ஒப்படைத்து விட்டு

அதன் சௌகரியங்களிலேயே

முணுமுணுத்துக் கொண்டே.....ஏன் வீண் பரிக்ஷை?-

பகல் மயக்கம்

உன்னிடம் அது இல்லை

இனியும்.

எங்கிருந்தாலும் பரவாயில்லை

மயிலையானாலும்

சிங்கபூரானாலும்

சாண்டியாகோவானாலும்-

உண்மையாகத்தான்

இதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல-

பல வருடங்கள் முன்பு

நான் சொல்வதுண்டு

கோவில் வாசற்படிகளில்

வெளியேவரும்போது

உட்கார்ந்து கொண்டு-

என் அன்னை பார்வதி

அப்பா பரமேச்வரன்

சிவபக்தர்கள் என் பந்துக்கள்

மூவுலகமும் என் சொந்ததேசமே

என்று-

என் அப்பா இருந்தார்

அம்மா இருந்தாள்

மாமாக்கள், மாமிகள்,

அத்தைகள்,சித்தப்பாக்கள், சித்திகள்,

பாட்டன்மார்கள்,

கொள்ளு சொந்தங்கள்,

பலர், பலர்......

தெரு முனையில்

பெரியார், அண்ணா, சிவப்பு கொடி

என்றுபல கூட்டங்கள் உண்டு

அம்மன் கோவிலில் உத்சவங்கள்

உண்டு

புலவர் கீரன் சொற்பொழிவுகள்

அந்தந்த சீசன் களில்

உண்டு..

நெட்டுமில்லை, சர்ப் செய்வதுமில்லை

கூகிள், யாகூ தேடல்கள் யாரறிவார்?

ஏதோ பெயர்களும், கதைகளும்

எல்லாமே எப்படியோ வந்தன

ச்லோகங்களும், கீர்த்தனைகளும்

ப்ராணாயாமமும்

ஒரு தெரபியாகவோ

ஆல்டெர்னேட் மருத்துவமென்றோ

பெயர்புனைந்து வாராதுவந்தன-

கோவிலைச்சுற்றி

தெருக்கள்

திசைபெயருடன் ரதம் கொண்டு-

கடவுள் புறப்பட்டு

வீதிகளில் என் கொள்ளுப் பாட்டி காணயென்றே

உலா வருவார்-

அந்த வீதிகளில்

அந்த புழுதியிலும் மண்ணிலும்

நான் புரண்டு

உடன் கொண்டு

அத்தனை செக்யுரிடி செகிங்க்

எல்லாவற்றையும் தாண்டி

உலகம் முழுவதும்

மூன்று லோகமும்

சென்றது-

இப்போது

கலிபோர்னியாவும்

கோயம்புத்தூரும்

ஒன்றே

எங்கு வாழ்ந்தாலும்

யாவரும் ஒரு விருந்தினர் போன்றே

எந்த ஊரின் ரதத்தெருக்களிலும்

பழய புழுதிகள் மண் என்று

சுத்தம் செய்து அப்புறப்படுத்தவையெல்லாம்

மணல் மூட்டைகளாக

சேண்ட் எம்பாங்க்மெண்ட்ச் என்று வடிவு

கொண்டு...

கோவில்கள் அதீத செக்யுரிடி வட்டங்களானது..

யாவாருமே இங்கு சந்தேகப்படவேண்டியவர்களே-

சுற்றும் முற்றும் நம் பார்வைகள்

சந்தேகப் பார்வைகளாகவே ஆனது...

இங்கு தூக்கங்களின் ஆட்சி

பயங்கரக் கனவுகள் மீது போயேபோனது-

பகலில் விழித்து இருப்பதே

தன்னைத் தானே

சந்தேகப்படவே யென்றானது

Comments