Skip to main content

இரு பத்திரிகைகள்



முதுமையின் மிகப் பெரிய சோகம் நம்முடைய நண்பர்கள் ஒவ்வொருவராக மறைந்து கொண்டிருப்பார்கள் என்று இங்கிலாந்து எழுத்தாளர் சாமர்சாட் மாம் கூறினார். இதையே வேறு பலரும் கூறியிருக்கிறார்கள். தொண்ணூற்றொரு ஆண்டுகள் வாழ்ந்த மாம் பழுத்த அனுபவத்தால்தான் கூறியிருக்கிறார்.


'மணிக்கொடி இதழ் தொகுப்பு' படித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு மாம்மை நினைவுபடுத்தியவரை நண்பர் என்று கூற முடியாது. ஆனால் அவரை நிழலாகப் பல ஆண்டுகள் நான் அறிந்திருந்தேன். எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும்போது, 'ஆனந்தவிடனி'ல் ஒரு கதை என் மனதை மிகவும் சங்கடப்படுத்தியது. குடிகாரனான தன் அப்பாவை ஒரு சிறுமி படுக்க வைத்து, உணவு கொடுத்துப் பாதுகாப்பாள். அச் சிறு வீட்டில் அவளும், அவள் தகப்பன் மட்டும்தான்.


அவன் வியாதி முற்றிப்போய்ப் படுக்கையிலேயே இறந்து விடுகிறான். அவன் இறந்து விட்டான் என்று தெரியாது. அவள் அவனுக்கு உணவு தர முயற்சி செய்வாள். இந்தக் கதை தொடர்ந்து நினைவில் இருந்து வருவதற்கு இன்னொரு காரணம் அது ஒரு முஸ்லிம் கதை. அது முஸ்லிம் கதை என்று அடையாளப் படுத்த அப் பெண்ணின் பெயருடன் அவள் தன் அப்பாவை 'வாப்பா' என்று அழைப்பாள்.


இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து 'ஆனந்தவிகட'னில் இன்னொரு முஸ்லிம் கதை. அதை எழுதியவருக்குச் சிறுகதைப் போட்டியில் அது முதல் பரிசு பெற்றுத் தந்தது. கதையின் பெயர் 'கல்லறை மோகினி'. எழுதியவர் மீ ப சோமு. இதிலும் 'வாப்பா', 'மவுத்', 'நிக்கா' எல்லாம் உண்டு. இந்தக் கதைக்குக் கதைச் சுருக்கம் தருவது நியாயமல்ல. பரிசுதான் தரலாம்.


நான் முதலில் சொன்ன கதையை எழுதியவர் ம ஆலி சாஹிப். 'மணிக்கொடி' பத்திரிகையிலும் ஒரு கதை எழுதியிருக்கிறார் (அவர் இன்னும் பல கதைகள் எழுதியிருக்கக் கூடும்). அதிலும் முடிவு சாவில்தான். இன்றைக்குச் சரியாக 63 ஆண்டுகள் முன்பு எழுதியிருந்தாலும் அது வடிவத்தில் ஒரு நவீனக் கதை. 'ஆனந்தவிகடன்' கதையும் நவீனக் கதையே.


இவருடைய பெயரை எப்படி உச்சரிப்பது என்று புதிராக இருந்ததாலேயே அவருடைய பெயரை எளிதில் மறக்க முடியவில்லை. அவரை நான் சந்திக்க நேரும் என்று அப்போது நான் நினைத்திருக்க முடியாது.


ஆனால் சென்னையில் ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்குச் சோந்தவுடன் முதல் நாளிலேயே சந்தித்த நபர்களில் அவரும் ஒருவர். எனக்கு மேஜையிருந்த 'கோஹினூர்' கட்டிடத்தில் அவருக்கும் ஒரு மேஜை போடப்பட்டிருந்தது. அந்தக் 'கோஹினூர்' கட்டிடத்திலேயே இன்னொரு முஸ்லிமும் இருந்தார். அவர் சையத் அகமத். ம ஆலி சாஹிப் கதை எழுதுபவர். சையத் அகமத் ஆர்ட் டைரக்டர். அவர் விளம்பர டிசைன்கள் செய்து கொண்டிருப்பார். ஜெமினிகதை இலாகாவில் ம ஆலி சாஹிப்பும் இருந்தார்.


வாரத்திற்கு நான்கு ஐந்து முறை ஜெமினி முதலாளி கதை இலாகாவினருடன் சேர்ந்து பேசுவார். அந்த அறை சாதாரணமான கட்டிடம். ஆஸ்பெஸ்டாஸ் கூரை. இரண்டு பெரிய ஜன்னல்கள். யார் யார் இருக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்று வெளியில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் சகஜமாக உரத்துப் பேசுவார்கள். வெற்றிலைப் பாக்குப் புகையிலை போடுவார்கள். எல்லோருமாகச் சேர்ந்து டிபன் சாப்பிடுவார்கள். ஏதோ சில நண்பர்கள் கூடி விவாதம் நடத்துவது போல் இருக்கும். ஜெமினி ஸ்டுடியோவிலும் சிக்கனம் கடைப்பிடிக்க வேண்டி வந்தபோது இந்த இலாகா கலைந்து போயிற்று.


ம ஆலி சாஹிப் தன் மேஜையைக் காலி செய்யும்போது அந்த அறையில் நான் இருந்தேன். மாதாமாதம் சம்பளம் என்பது போய் இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை அவரிடம் இருந்தது.


அவரை எந்த உத்தியோகத்திலும் பொருத்திப் பார்க்க என்னால் முடியவில்லை. கதை இலாகாவில் அவருடைய பங்களிப்பு இருந்திருக்க வேண்டும். 'மணிக்கொடி'யில் அவர் பிரசுரமான எழுத்தாளரல்லவா? இந்தி சினிமாவில் பல முஸ்லிம் கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்திய சுதந்திரத்திற்கு முன்பு இது நிறையாவே நிகழ்ந்திருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின்பும், முஸ்லிம் கதைகள், முஸ்லிம் பாத்திரங்களுக்குத் தொடர்ந்து பிரதிநிதித்துவம் இருந்திருக்கிறது. மலையாள சினிமாவில் ஓரளவு முஸ்லிம் கதைகள், பாத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன.


தமிழ் சினிமாவில் தொழில் நுட்பத் துறையில் சிலர் இருந்திருக்கிறார்கள. 'மணிக்கொடி இதழ்த் தொகுப்பில்' ம ஆலி சாஹிப் பெயரைப் பார்த்தவுடன் இதெல்லாம் நினைத்துப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.


ஜெமினி ஸ்டுடியோவில் அடுத்த கட்ட சிக்கன நடவடிக்கையில் சையத் அகமதும் விலக வேண்டியிருந்தது. 'கோஹினூர்' கட்டிடத்தில் சில மாதங்கள் நான் தன்னந்தனியனாக இருந்தேன். சையத் அகமதுக்குத் தனி அறை. அது பூட்டியிருந்தது. ஆனால் ம ஆலி சாஹிபுடைய மேஜை நான் உட்கார்ந்த அறையில்தான் இருந்தது. எனக்கு இப்போதும் சிறிது சந்தேகம்தான். அவர் பெயரை எப்படி உச்சரிப்பது? 'மணிக்கொடி இதழ்த் தொகுப்பில்' என் பெயர் இருந்தாலும் என் பங்கு மிகவும் குறைவு. முதலில் 'மணிக்கொடி' இதழ்களே கிடைக்கவில்லை. ஒருவரைக் கேட்டால் இன்னொருவரைக் காட்டுவார். அவரைக் கேட்டால் வேறின்னொருவரைக் காட்டுவார். ஆதலால் கிடைத்த சில இதழ்களிலிருந்து தேர்ந்தெடுத்தது அதிகம் இல்லை. நல்ல வேளையாக சிட்டி, முத்துகுமாரசுவாமி ஆகியோர் முயற்சியில் நூல் இப்போது சிறப்பான, கணிசமான தொகுப்பாக அமைந்திருக்கிறது.


'சரஸ்வதி களஞ்சியம்' சரஸ்வதி ஆசிரியர் விஜயபாஸ்கரனாலேயே தொகுக்கப் பட்டிருக்கிறது. புதிய தமிழ் இலக்கிய வரலாறில் 'சரஸ்வதி' இதழின் பங்கு 'மணிக்கொடி'க்கு எவ்வகையிலும் குறைந்ததில்லை. 'மணிக்கொடியில்' ஆசிரியர் பங்கு என்ன என்று நிர்ணயித்துக் கூறுவது கடினம். ஆனால் 'சரஸ்வதி' யில் ஆசிரியர்தான் பிரதான சக்தி. விஜய பாஸ்கரன் மகத்தான பத்திரிகையாசிரியராக இருந்திருக்கிறார்.


தமிழகத்தின் வரலாறுடன் அரசியல் போக்கும் மிகச் சூசமாக 'சரஸ்வதி களஞ்சிய'த்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரிய வீரர்களாக வலம் வந்தவர்கள், இந்தத் தொகுப்பு மூலம் சரியான அளவை எய்திருக்கிறார்கள். நாளெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்து வரும் அரசியல் கட்சி மறைமுகமாக எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்று அறிய வரும்போது வருத்தமாகயிருக்கிறது.


ஐம்பதுகளில் உருவான இரண்டே இரண்டு நல்ல எழுத்தாளர்கள் என்று சுந்தர ராமசாமியையும், ஜெயகாந்தனையும் கநாசு பலமுறை தன் கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் வளர்ச்சியில் 'சரஸ்வதி' பத்திரிகைக்கு முக்கிய பங்கிருந்திருக்கிறது. ஜனநாயக முறையில் நிறைய விவாதங்களுக்கு இடம் அளித்திருக்கிறது. ஒரு விவாதம் புதுமைப்பித்தன் பற்றி.


இதையெல்லாம் மிகுந்த பக்குவத்துடனும் விரிவான மனதுடனும் விஜயபாஸ்கரன் தொகுப்பில் சேர்த்திருக்கிறார். சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் புதுமைப்பித்தன் பற்றி மிகத் தீவிரமாகவும் பகிரங்கமாகவும் பரிமாறிக் கொண்டவர்கள் 'சரஸ்வதி களஞ்சிய'த்தைப் படித்தால் சந்தர்ப்பங்களுக்கேற்ப மனிதர்கள் எப்படி மாறிக் (மாற்றிக்) கொணடிருக்கிறார்கள் என்று புலனாகும்.


எனக்கு மிகவும் ஒளியூட்டியது 1959 ம் ஆண்டில் தமிழ் எழுத்தாளர் சங்கத் தேர்தல் பற்றிய சர்ச்சை. தமிழக அரசியல்வாதிகள் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நாணயத்துக்கு ஒரு புது இலக்கணம் வகுத்திருப்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த மூவாயிரம் ஆண்டில் முதல் மகத்தான செய்தி நிருபராக 'மகாபாரத' சஞ்சயனைக் கூறலாம். பாரபட்சமின்றி பதினெட்டு நாள் யுத்தத்தின் முக்கிய தகவல்கள் அனைத்தையும் திருதிராஷ்டிரனுக்குச் சொன்னவர் சஞ்சயன்.


விஜயபாஸ்கரனின் 'என்னுரை'யிலுள்ள தகவல்களை அவர் ஒரு முறை என்னிடம் நேராகவே கூறினார். அது 1969 அல்லது 1970ம் ஆண்டாக இருக்கும். எனக்கு அப்போது அவர் சொன்னது எதுவுமே புரியவில்லை. ஒரே காரணம், அவர் சொன்ன விஷயங்கள் குறித்து என்னுடையப் பரிச்சயமின்மை. இன்று அவருடைய எழுத்தில் அவை பற்றிப் படிக்கும்போது பெரிய புதிர் தீர்க்கப்பட்ட உணர்வே கிடைத்தது.


மகத்தான பத்திரிகையாசிரியராக இயங்கிய விஜயபாஸ்கரன் மகத்தான தொகுப்பாசிரியராகவும் கூட என்று 'சரஸ்வதி களஞ்சியம்' நிரூபிக்கிறது. 'சரஸ்வதி' பத்திரிகைதான் முதன் முதலில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு மற்றவரோடு சம இடம் கொடுத்து வெளியிட்டிருக்கிறது. விஜயபாஸ்கரன் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தபடியால் 'முற்போக்கினர்' நிறையவே பத்திரிகையில் இடம் பிடித்திருக்கிறார்கள். இலங்கை கைலாசபதி உட்பட. இவர்களுக்கெல்லாம் க நா சுவின் இலக்கியத்திடம் பெரிதும் தொந்தரவுபடுத்தியிருக்கிறது. அவர்களுக்கு ஒரு பெரிய சௌகரியம், க நா சு வெறும் எழுத்தாளர் மட்டுமே. அவரே ஒரு பல்கலைப் பேராசிரியராகவோ அரசு அதிகாரியாகவோ இருந்திருந்தால் இவர்கள் இவ்வளவு வீராவேசம் காட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே.


கநாசு கட்டுரை இத் தொகுப்பில் இருக்கிறது. டைப்ரைட்டர் சகிதமாகச் சென்னையில் ஓர் அறையில் அவர் குடியேறினார் என்பதற்குத்தான் எவ்வளவு கட்டுடைத்தல்? ஆனால் 'சரஸ்வதி'யில் க நா சுவின் எல்லாக் கட்டுரைகளுமே முக்கியத்துவம் உள்ளதோடு தொடர்ச்சியும் கொண்டதாக உள்ளன. உதாரணத்துக்கு, 'திருக்குறள்' பற்றிய விவாதம். 'சாமர்சட் மாம்' சமீபத்தில் இன்னொரு சந்தர்ப்பத்திலும் நினைக்கப்பட்டிருப்பார். வி எஸ் நைப்பால் எழுதிய புதிய நாவல் 'அரை வாழ்க்கை' நாயகனுக்கு அவனுடைய தகப்பனார் சாமர்சட் என்ற சொல்லைப் பெயருடன் சேர்த்திருக்கிறார். காரணம், அந்த எழுத்தாளர் மீதுள்ள அன்பு. இது அவருடைய கதைகளுக்காக அல்ல.


சாமர்சட் மாம் ஆன்மிகப் புதிருக்கு விளக்கம் கிடைக்குமாவென இந்தியாவுக்கு வந்தவர்களில் ஒருவர். அவருடைய ஒரு நாவலில் இந்தியா இடம் பெறும். அவர் எந்தத் துறவிகளைப் பார்த்தார் என்று தெரியாது. ரமணரைப் பார்த்தார் என்று நினைக்கிறேன். நைப்பாலுக்கு ஆர் கே நாராயணனைப் பிடிக்காது என்று ஒரு முறைக்கு இரு முறையாகக் கூறியிருக்கிறார்.


ஆனால் 'அரை வாழக்கையில்' பல இடங்கள் அதுவும் ஆரம்ப அத்தியாயம் நாராயணனைத்தான் நினைவுப்படுத்தும். நாராயணன் அவருடைய 'வேர்'களைத் தாண்டி எழுத முற்பட்டதில்லை. நைப்பால் நாடுநாடாகச் சென்று எழுதியிருக்கிறார். சில பௌதிகப் பார்வைகள் ஓர் அயலானுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதை வைத்துக்கொண்டு புனைகதை முயற்சி செய்வது ஆபத்தானது. இந்த 'அரை வாழ்க்கை'யில் ஆசிரியரின் வேரற்ற நிலை நன்கு தெரிகிறது.


நைப்பாலின் ஆங்கில நடை பற்றி பல விமர்சகர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். மிகவும் எளிமையான நடை. நாராயணனின் நடையும் மிகவும் எளிமையானதுதான். இந்த எளிமை கைவருவதற்கு நிறையப் பயிற்சி தேவை.


(இறுதியாக ஒரு தகவல். அறுவை சிகிச்சை முடிந்து நான் வீட்டினுள் நடமாடக்கூடிய அளவு நலமுற்றிருக்கிறேன். ஜூலை - செப்டம்பர் 2001 ல் நவீன விருட்சம் இதழில் பிரசுரமான கட்டுரை)


Comments