Skip to main content

ஆதிமூலம், சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ்......



டந்த சில மாதங்களாகத் தொடர்ந்து நிகழ்ந்த மூவரின் மறைவு என்னைப் பெரிதும் நினைக்கும்படி தூண்டிக் கொண்டிருந்தது. ஒருவரின் மறைவு, ஒருவரைப் பற்றிய என் மனதில் தோன்றிய வரைபடமாக என்னை அடிக்கடி நினைக்கத் தூண்டி, ஒருவிதத்தில் என்னைச் சங்கடப்படுத்தியது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குமுன், நவீன விருட்சம் தொடக்கக் காலத்தில், ஆதிமூலம், மருது போன்ற ஓவியர்களைச் சந்தித்திருக்கிறேன்.பழகுவதற்கு அற்புதமானவர்கள்.
ஆதிமூலமும், மருதுவும் தேனாம்பேட்டையில் அரசாங்க அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் பார்த்திருக்கிறேன். ஆதிமூலம் பழகுவதற்கு எளிமையான மனிதராகவும், கம்பீரமான மனிதராகவும் எனக்குத் தோற்றம் தருவார். எனக்கு அவரிடம் அளவுகடந்த மரியாதை உண்டு. சத்தமாகவே பேச மாட்டார்.
விருட்சம் முதல் இரண்டு இதழ்கள் வெளிவந்தபோது, எனக்கு அவரிடமிருந்து விருட்சம் எழுத்தை கையால் எழுதி வாங்க வேண்டுமென்ற எண்ணம் உருவானது. அந்தச் சமயத்தில் நடந்த ஒரு ஓவியக் கூட்டத்தில் ஞானக்கூத்தனுடன் நான் சென்றிருந்தேன்.
அக் கூட்டத்தில்தான் ஆதிமூலத்தைப் பார்த்து விருட்சம் என்ற பெயரை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டேன். நான் கேட்ட விதமோ, கேட்ட சூழ்நிலையோ அவருக்குச் சங்கடத்தைத் தந்திருக்குமென்று நினைக்கிறேன். இதனால் அவர் மறுத்துவிடுவார் என்றும், கேட்ட விதத்தால் கோபத்துடன் எதாவது சொல்வாரென்றும் நினைத்தேன். ஆனால் அதற்கு நேர் மாறாக, கேட்ட சில நிமிஷங்களில் எனக்கு விருட்சம் எழுத்தை வரைந்து கொடுத்துவிட்டார். அவர் கையால் வரைந்த விருட்சம் எழுத்துக்கள்தான் இன்னும் தொடர்ந்து அட்டையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் எத்தனையோ உதவிகளை அவர் மூலம் நிறைவேற்றியிருக்கிறேன். முதன் முதலில் ஸ்ரீனிவாஸனின் கவிதைத் தொகுதியை விருட்சம் வெளியீடாகக் கொண்டுவந்தேன். ஆதிமூலம்தான் அதற்கு ஓவியம். ஸ்ரீனிவாஸன் மீது அளவுகடந்த அன்பு அவருக்கு. உடனே ஸ்ரீனிவாஸன் கையெழுத்தை வைத்து ஒரு அட்டைப் படம் தயாரித்துக் கொடுத்தார். அந்தப் படத்தை வைத்துத்தான் புத்தகமே வந்தது. அதைத் தரும்போது, ஸ்ரீனிவாஸனைப் பற்றி ரொம்பவும் உயர்வாகவும், சீனு என்று உரிமையாகவும் அவர் உச்சரித்தது என் ஞாபகத்தில் இருக்கிறது.
பழகுவதற்கு அற்புதமான மனிதர் ஆதிமூலம், உலகளவில் போற்றுகின்ற ஒரு ஓவியர், எந்தவிதப் பந்தாவும் இல்லாமல, பழகுவது என்னைப் பொறுத்தவரை ஆச்சரியமான விஷயம். அதற்குக் காரணமாக நினைப்பது, சிறுபத்திரிகை சூழல். அன்றைய சிறுபத்திரிகைச் சூழலில் தங்களையும் வெளிப்படுத்திக்கொண்ட ஓவியர்கள் பலர். அதில் ஆதிமூலம் முக்கியமானவர். அவருடைய காந்தி ஓவியம் இன்னும்கூட மறக்கமுடியாத ஒன்று.
விருட்சம் மூன்றாவது இதழ் வரும்போது, க. நா. சு. இறந்துவிட்டார். அந்த இதழ் அட்டைப் படத்தை அலங்கரித்த ஆதிமூலம் வரைந்த க.நா.சுவின் ஓவியம்தான் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது. என்னால் மறக்க முடியாத ஓவியத்தில் அதுவும் ஒன்று. ஆதிமூலமும் சரி, மருதுவும் சரி, விருட்சம் இதழிற்காகப் பல ஓவியங்களை மனமுவந்து நன்கொடையாக அளித்திருக்கிறார்கள்.
ஞானக்கூத்தனின் 'கவிதைக்காக' என்ற புத்தகத்திற்காக ஆதிமூலம் அவர்களைச் சந்தித்தேன் ஞானக்கூத்தனுடன். அன்று பொங்கல் தினம் என்று நினைக்கிறேன். ஆதிமூலம் அவருடைய பல ஓவியங்களைப் பார்க்கும் சந்தர்ப்பமும், பாக்கியமும் எனக்குக் கிட்டியது. அன்போடு வரவேற்று உபசரித்ததோடல்லாமல், சாப்பிட்டுப் போகும்படியும் சொன்னார்.
ஞானக்கூத்தன் கவிதைகள் எல்லாம் சேர்த்து ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற புத்தகத்தைத் தொகுத்து அதன் வெளியீட்டு விழா நடத்தும்போது, ஆதிமூலம் அவர்களின் 60வது வயது விழாவும், சா. கந்தசாமியின் சாகித்திய அக்காதெமி விருதுப் பெற்றதையும் சேர்த்து மூவர் விழாவாக விருட்சம் சார்பில் கொண்டாடினோம். அவ்விழாவிற்கு பேரறிஞர் சிவத்தம்பி, அனிதா ரத்னம், நடிகர் கமல்ஹாசன் போன்றவர்கள் வந்திருந்து சிறப்பு செய்தார்கள். விருட்சம் நடத்திய அக் கூட்டத்திற்குப் பிறகு, நடிகர்கள் போன்ற பிரபலமானவர்களை அழைத்து இலக்கியக் கூட்டம் நடத்துவது வழக்கமாகிவிட்டது.
கம்பீரமான தோற்றம் கொண்ட எளிய சுபாவம் கொண்ட ஆதிமூலத்தின் மரணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவர் மரணம் அடைந்தபிறகுதான், அவர் சில ஆண்டுகளாக ரத்தப் புற்று நோயால் அவதிப்படுகிறார் என்பதை அறிந்தேன். அந் நோயைக் கூட அவர் யாரிடமும் கூறவில்லை என்பதையும் அறிந்தேன். மரணத்தை முன்கூட்டியே அறிந்ததால், அவரிடமிருந்து மரணத்தைப் பற்றிய எந்த அசைவும் நிகழவில்லை என்பதோடல்லாமல், அதை பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டார் என்று நினைக்கிறேன். இன்னும்கூட ஆதிமூலம் இறந்து விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு சாயலில் எனக்கு ஆதிமூலத்தைப் பார்க்கும்போது, சா கந்தசாமியையும், சா கந்தசாமியைப் பார்க்கும்போது, ஆதிமூலமும் ஞாபகத்திற்கு வந்து கொண்டிருப்பார்கள்.
ஆதிமூலம் மரணத்துடன் போராடவில்லை. வெற்றிகரமாக மரணத்தைப் பார்த்து புன்னகைத்துவிட்டுச் சென்றுவிட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. ****************
சுஜாதாவை சென்னையில்தான் முதன்முதலாகச் சந்தித்திருக்கிறேன். கணையாழி கவிதைக் கூட்டத்தில், நான் படித்த கவிதைகளைப் பற்றி கருத்துக்களை உடனடியாக வழங்கினார். இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர் நான் நடத்திய ஞானக்கூத்தன் கவிதைகள் கூட்டத்தில் கட்டுரை வாசித்தார். நான் அவர் வருவாரா என்று சந்தேகத்துடன் இருந்தேன். சுஜாதா எல்லார் பற்றியும், எல்லாவற்றைப் பற்றியும் எழுதிக் கொண்டிருப்பார். அவருடைய வேகம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் பங்களூரில் இருந்தபோதுகூட, பெரிய பதவியில் இருந்தும்கூட எழுதிக் கொண்டே இருந்திருக்கிறார். எல்லாப் பத்திரிகைகளும் அவர் எழுத்தை விரும்பி பிரசுரம் செய்யும். ஏன் அவரைக் கேட்டுக்கூட பிரசுரம் செய்யும். அவர் பெரிய பத்திரிகைகளில், சிறு பத்திரிகைகளைப் பற்றி தன் கருத்துக்களை எழுதாமல் இருக்க மாட்டார். ஒருமுறை அவர் குமுதம் பொறுப்பாசிரியராக இருந்தபோது, சிறுபத்திரிகையில் வெளிவந்த கவிதைகளை அதிகம் வெளியிட்டிருக்கிறார். அவருடைய தொடர்கதைகளில் என்னைப் பற்றியும், நவீன விருட்சம் பற்றியும் எழுதியிருக்கிறார். எனக்குத் தெரிந்து இவர் வேகத்திற்கு க.நா.சுவைத்தான் குறிப்பிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் க.நாசு வேறு, சுஜாதா முழுக்க முழுக்க வேறு. இன்று சுஜாதாவைப் போல எழுத முயற்சி செய்பவர்கள் என்று ஒரு லிஸ்டே போடலாம்.
சுஜாதாவும் கநாசு மாதிரி ஒரு ஆண்டில் அவருக்குப்பிடித்த பல விஷயங்களைக் குறித்து லிஸ்ட் போடுவார். இந்த ஆண்டின் சிறந்த சிறு பத்திரிகை நவீன விருட்சம் என்று ஒருமுறை சுஜாதா குறிப்பிட்டுள்ளார். அவருடைய எந்த எழுத்தையும் பிரசுரம் செய்ய பத்திரிகைகளும் தயாராக இருந்தன. சுஜாதாவைப் பிடிக்காத இலக்கிய நண்பர்களும் எனக்குண்டு. அதே சமயத்தில் சுஜாதா எழுதும் எந்த எழுத்தையும் படித்து திரும்பவும் அப்படியே மனப்பாடமாகச் சொல்கிற நண்பர்களும் எனக்குண்டு. அவர் மரணம் இட்டு நிரப்ப முடியாத மரணம்தான்.
ஆழ்வார்பேட்டையில் அவர் வீட்டிற்கு எதிரில் இந்திரா பார்த்தசாரதி இருந்தார். இந்திரா பார்த்தசாரதியைப் பார்த்துவிட்டு, சுஜாதாவையும் பார்க்கச் செல்வேன். 406 சதுர அடிகள் என்ற என் சிறுகதைத் தொகுதியை சுஜாதாவைப் பார்த்துக் கொடுக்கச் சென்றேன். அப் புத்தகத்தைப் பற்றி எதிலாவது எழுதும்படி அன்புடன் கேட்டுக்கொண்டேன். என் புத்தகத்திற்கு விளம்பரம் வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு வேண்டிக்கொண்டேன். காரணம் பத்திரிகைகளுக்கு மதிப்புரைக்காக புத்தகம் அனுப்பினால், புத்தகத்தைப் பற்றி யாரும் மதிப்புரை செய்வதில்லை. அதனால் ஒரு புத்தகம் வந்தால் அதைப்பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. இன்றும் கூட தமிழில் இந்த நிலை தொடர்ந்து நிலவுகிறது. இப்போதெல்லாம் யாரிடமும் புத்தகம் கொடுப்பதில்லை. சுஜாதா என் புத்தகத்தைப் பற்றி எழுதாமலில்லை. ஆனால், 'அழகியசிங்கரே விரும்பிக் கேட்டக்கொண்டதால்.' என்று எழுதிவிட்டார். எனக்கு அவர் அப்படி குறிப்பிட்டது சற்று வருத்தமாக இருந்தது.
பின் சுஜாதாவை அவர் நோய்வாய்ப்பட்டு மீண்ட ஒரு சமயத்தில் ரவி சுப்பிரமணியனுடன் மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் பார்த்திருக்கிறேன். ரொம்பவும் ஒடுங்கி போயிருந்தார். அவரால் நடக்கக் கூட முடியவில்லை. அதிகமாகப் புத்தகங்கள் அவர் வீடைத் தேடி வருவதாகவும், அதனால் புத்தகங்களை யாரும் அனுப்ப வேண்டாமென்று சொல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனந்த விகடனில் அவர் உடல்நிலையைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் மரணத்துடன் போராடி போராடியே வெற்றி பெற்றிருக்கிறார். இறுதிவரை மரணத்துடன் சண்டைப் போட்டவர் சுஜாதா. மரணம் கடைசியில் அவரை வென்றது. ***************
ஸ்டெல்லா புரூஸ் எனக்கு காளி-தாஸ், ராம் மோஹன் என்ற பெயரில்தான் முதன்முதலாக அறிமுகம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், கடற்கரையில், ராம் மோஹன், வைத்தியநாதன், ராஜகோபால், ஆனந்த், ஸ்ரீனிவாஸன், ஞானக்கூத்தன் என்று பட்டாளமே சேரும். முதன் முதலில், அவர்கள் பேசுவதைக் கேட்பதற்கு ஆர்வமுள்ளவனாகவே இருந்திருக்கிறேன். அவர்கள் பேசுவதைக் கேட்பேனே தவிர, வாய்த் திறந்து நான் பொதுவாக அதிகமாகப் பேச மாட்டேன். கவிதைகள் குறித்தும், உலக நடப்புக்களைக் குறித்தும் அதிகமாகவே பேசியிருக்கிறோம்.
ஸ்டெல்லா புரூஸ் தி.நகரில் ஒரு அறை வாசியாக பூங்கா மேன்சன் ஒன்றில் குடியிருந்தார். அப்போது எனக்கு அவரைப் பற்றிய ஒரு பிரமிப்பு எப்போதும் இருக்கும். எந்த வேலைக்கும் போகாமல், தனக்கென்று பெரிய எதிர்ப்பார்ப்பின்றி சேமிப்பிலிருந்து மிகக் குறைவான செலவில் சிக்கனமாகச் செலவு செய்துகொண்டு வருபவர் அவர். புத்தகங்களைப் பற்றியும், தனக்குப் பிடித்த மனிதர்களைப் பற்றியும் பேசிக்கொண்டே இருப்பார். பெரும் பத்திரிகையில் குறிப்பாக ஆனந்தவிகடனில் அவருடையதொடர்கதைகள் வெளிவந்தவுடன், அவருக்குப் பல தொடர்புகள் ஏற்பட்டன. முதலில் வாசகியாக இருந்த ஹேமா அவருடைய மனைவியாக மாறினார்.
அறை வாசியாக இருந்த அவர், தனியாக வீடு பார்த்து குடும்பம் நடத்த ஆரம்பித்தார்.எளிமையான மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அவருடையது.
விருட்சம் ஆரம்பித்த சமயத்தில் உள்ள நிலை வேறு; இப்போதைய நிலை வேறு. இந்தக் காலத்தில் ஒருவரை ஒருவர் சந்திப்பது என்பது குறுகிப் போய்விட்டது. ஏன் பேசுவதுகூட நிகழாமல் போய்விடுகிறது.
ஸ்டெல்லா புரூஸின் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நண்பர்கள் வட்டமும் மாறிப் போய்விட்டது. ஹேமா உடல்நிலை சரியில்லாமல் இருந்த சமயத்தில், ஹேமா இல்லாத வாழ்க்கையை ஸ்டெல்லாபுரூஸ் நினைத்துப் பார்க்காமல் இருந்திருக்க மாட்டார். ஆனால் அவரால் வாழ முடியவில்லை. ஆன்மீகத்தில் தனக்கு ஏதோவொரு சக்தி வந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு, நெற்றிமேடு என்ற பெயரில் அவர் பெரும்பாலும் யாராவது இறந்து போவதை மட்டும் குறிப்பிடுவார். ஒரு முறை அவருடன் பேசும்போது நான் கூட குறிப்பிட்டேன்: 'ஏன் உங்கள் நெற்றிமேடு மரணத்தை மட்டுமே குறிப்பிடுகிறது,' என்று.
ஸ்டெல்லாபுரூஸ் தவறுதலாகக் கருதிய ஆன்மீகம்தான் அவரை தற்கொலை செய்துகொள்ள தூண்டியதோ என்றும் தோன்றுகிறது. அவர் ஏற்கனவே பல தற்கொலைகளைச் சந்தித்திருக்கிறார். ஒரு முறை கடற்கரையில் ஒரு இளைஞன் மரத்தில் தொங்கி தற்கொலை செய்துகொள்ள முயற்சிததைப் பற்றி சொல்லியிருக்கிறார். ஏன் ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டதுகூட கவனித்திருக்கிறார். அவர் உறவினர் கூட தற்கொலை செய்து கொண்டதைப் பற்றி எழுதியும் இருக்கிறார். அப்படிப்பட்டவர் தானே தற்கொலை செய்துகொள்வார் என்பதைத் துளியும் எதிர்பார்க்க முடியவில்லை.
ஆதிமூலம் மரணத்தைக் குறித்து எந்த முணுமுணுப்பும் இன்றி முழுக்க ஏற்றுக் கொண்டவர். சுஜாதாவோ மரணத்துடன் சண்டைப் போட்டு எதிர்த்து இறுதியில் வெற்றி கொள்ளமுடியாமல் தோல்வி அடைந்தவர். தானே மரணத்தைத் தேடி தழுவிக் கொண்டவர் ஸ்டெல்லாபுரூஸ்.
அழகியசிங்கர்
20.07.2008 at 10.25 pm

Comments