Skip to main content

புரிவதில்லை கவிதை


உன்னுடைய
இந்தக் கவிதைக்கு
என்ன அர்த்தம்
ஒன்றும் புரியவில்லை

ஆச்பிரின்
கடித்துப் பாதியாகக்
கிடக்கும்
ஒரு ஆப்பிள் துண்டு
காபியோ
அல்லது டீயோ
ஏதோ ஒன்றின்
ஒரு காய்ந்துபோன கோப்பை-
ஒரு இளம் பெண்
அரைகுறை ஆடையில்
ஒரு மூலையில்
சிவலிங்கம் சாய்ந்து கிடக்கிறது-
நாற்காலி மீது
ஜென் புத்தகம் பாதி
திறந்த நிலையில் -

தண்ணீர் கொட்டி
அது கோடிட்டாற் போல

இதுபோன்ற சில வார்த்தைகள்
வேறொன்றும்
இல்லை -

கேட்டால் -
புரியாது
உனக்கு என்கிறாய்

அது சரி
இது ஒரு
ஓவியமல்லவா
எனக்கு
கவிதைப் புரிவதில்லை தான்

நவீன விருட்சம் 79-80வது இதழில் வெளிவந்த எ தியாகராஜன் கவிதைகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். பொதுவாக கவிதைகள் எளிதாகப் புரியவேண்டும். ஆனால் பாமரர்களுக்கு எப்படியாக இருந்தாலும் கவிதைப் புரியாது. ஆனால் கவிதைப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு கவிதை புரியும்படியாக எழுதப்பட்டிருக்க வேண்டும். கவிஞர் எதையாவது எழுதி வாசகர்கள் எதையாவது புரிந்துகொள்ளவது சரியாக இருக்குமா என்பது எனக்குத் தெரியாது. பாரதியாரே எளிதாகத்தான் கவிதைகளை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எழுதியிருக்கிறார். க.நா.சு ஒருபடி மேல் போய்விட்டார். கவிதைக்கு படிமம், உவமை போன்ற சமாச்சாரங்கள் வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவருடைய கவிதைகளைப் படிப்பவர்கள். 'என்ன வசனத்தை உடைத்துப் போட்டு எழுதி உள்ளாரே' என்பார்கள். உண்மையில் அப்படி இல்லை. எழுதும்போது மனதில் என்ன தோன்றுகிறதோ அதேபோல்தான் வரி அமைப்பும் அமைகிறது. அதை அப்படியே வாசிக்கத் தெரிந்துகொள்ள வேண்டும். கவிதை முழுதாக மனதில் தோன்றி எழுதப்படுகிறதா? அல்லது எழுதும்போது அதுவே தோன்றுகிறதா என்பதெல்லாம் தெரியாது. கவிதையை எளிதாக வாசித்துவிடலாம். ஆனால் ஒரு கதையையோ நாவலையோ அப்படியெல்லாம் வாசித்துவிடமுடியாது. வாசிக்க அவகாசம் அதிகம் தேவைப்படும். கவிதை வாசிப்புக்க அவகாசம் தேவையில்லை. ஒரு பக்கம் அல்லது அரைப் பக்கம்தான் வரும். ஆனால் அதன் மூலம் சிந்திப்பது என்பது அலாதியான விஷயமாக இருக்கும். பெரும்பாலும் இப்போது எழுதப்படும் கவிதைகள் ஞாபகத்தில் வரிகள் வராது. அதன் தாக்கம்தான் மனதில் அலைகளை எழுப்பும். படிக்கும்போதுதான் அது தோன்றும். சரி, இப்போது எ தியாகராஜன் கவிதைகளுக்கு வருவோம்.
தியாகராஜன் சிதம்பரத்தில் மெளனி வீட்டிற்கு எதிரில் குடியிருந்தவர். விருட்சத்தில் மெளனியைப் பற்றி எழுதுவதாக கூறியுள்ளார். தற்போது மும்பையில் வாசம். ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதுவதில் வல்லவர்.

Comments