Skip to main content

பிரமிள்

பிரமிளின் 70வது வயது பிறந்த நாள் விழாவை அமர்களமாக நடத்தினார்கள் பிரமிள் அபிமானிகள். பிரமிள் அவரது 56வது வயதளவில் புற்றுநோய்க் கண்டு இறந்து போனார். அவர் இறக்கும் தறுவாயில், அவரை வேறு வழியில்லாமல், வேலூரில் உள்ள கரடிக்குடி என்ற இடத்தில் உள்ள ஒரு அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆயிற்று. அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர், பிரமிள் அனுதாபி. தமிழ் இலக்கியம் மூலம் அல்லாமல், ஆன்மிக வேட்கையின் மூலம் பிரமிளிடம் அபிமானம் கொண்டவர்.

சரவணன் என்பவர் ஆன்மிக வேட்கையின் மூலம் பிரமளிடம் அறிமுகமானவர், பிரமிளை சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரவும் பகலும் பார்த்துக்கொண்டார். இப்போது நினைத்தாலும் என்னால் நம்ப முடியாத நிகழ்ச்சியாகவே அது இருக்கிறது. இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், இலக்கிய ரீதியில் அவருக்கு நண்பர்கள் என்பது கிடையாது. யாரையும் அவர் மதிக்க மாட்டார். மதிப்பது மட்டுமல்ல. அவதூறாக எல்லாரையும் பற்றி எழுதுவார். நான் விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோது, என்னைப் பற்றியும் எதாவது எழுதிவிடுவார் என்ற அச்சம் ஆரம்பத்தில் இருந்ததுண்டு. பின்னாளில் எனக்கு அவர் மீது அபிமானமே ஏற்பட்டது. என்னைப் பற்றி அவதூறாக அப்படி ஒன்றும் எழுதவில்லை.

நான் ஒருவித குழப்பத்தில் பத்திரிகையை நிறுத்திவிட வேண்டுமென்று நினைத்தபோது, அவர்தான் நான் தொடர்ந்து நடத்த வேண்டுமென்று குறிப்பிட்டார். அவர் அன்று சொல்லவில்லை என்றால், பத்திரிகையை நிறுத்தி விட்டிருப்பேன்.

அவர் மரணம் அடைந்த செய்தியை அறிந்தபோது நான் தவித்த தவிப்புப் பற்றி இன்னும் அவரைப் பற்றி எழுதும்போது எழுதுகிறேன். இது ஒரு தொடர் கட்டுரை.

அழகியசிங்கர்
29.05.2008
இரவு 10.15

Comments